தமிழோவியம்
தராசு : வேலியே பயிரை மேய்ந்தால்?
- மீனா

தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு நேரம் சரியில்லை என்ற விஷயம் வெகுநாட்களுக்கு முன்பாகவே மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் தற்போது புதிது புதிதாகக் கிளம்பும் பூதங்கள் காவல்துறை மீது மக்கள் வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் தகர்த்துவிடும் போலிருக்கிறது. ஏற்கனவே காவல் நிலையத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட பத்மினி வழக்கிலிருந்து ஆரம்பித்து தற்போதைய சிவகாசி ஜெயலட்சுமி வழக்குவரை காவல்துறையினரின் பெண்கள் சார்ந்த அணுகுமுறையை கேள்விகுறியாக ஆக்கியது என்றால் தற்போது கிளம்பியிருக்கும் போலீசாரே கொள்ளையரான கதை  காவல்துறையின் கண்ணியத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

உயர் அதிகாரியின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல் பணியிலிருந்தபோதே வாகனம், ஆயுதங்களைப் போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஓடிப்போனார் ஒரு அதிகாரி. குற்றவாளிகளை காவல்துறையிடமிருந்தே மறைத்த விஷயத்தில் கெடுபிடிகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தன் உயர் அதிகாரியிடம் சரணடைந்துள்ளார் மற்றொரு காவல்துறை அதிகாரி. இவையெல்லாம் போதாத குறைக்கு தென்மாவட்டத்தில் ஆபாசப் படம் எடுத்த ஒரு கும்பலைத் தட்டிக்கேட்டவரையே கைது செய்து - அவரைத் தாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் காவல்துறையினர்.

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான போலீஸ் நம் தமிழகப் போலீஸ் என்று நாம் முழங்கிக்கொண்டிருந்ததெல்லாம் போய் இன்று குற்றவாளிகளுடனேயே கூட்டுவைத்துக்கொண்டு கொள்ளையடிக்கும் போலீஸ் நம் தமிழகப் போலீஸ் என்று குறிப்பிடும் நிலைக்கு வந்துள்ளது தமிழகக் காவல்துறையின் லட்சணம். இத்தனைக்கும் முதல்வரின் செல்லபிள்ளைப் போல செல்லத் துறையாகத் திகழ்வது காவல்துறை. மக்கள் மதிக்கும் அரசாங்க ஊழியர்களாக விளங்கிய காவல்துறையினர் இன்று ஒரு சில கருப்பு ஆடுகளால் ஒட்டுமொத்த கவுரவத்தையும் இழந்து அவமானப்பட்டு நிற்கிறார்கள். சந்தன வீரப்பனை வீழ்த்தி இழந்த கெளரவத்தைக் கொஞ்சம் மீட்டார்கள் என்றால் தொடர்ந்து வரும் புகார்களைப் பார்த்தால் ஜாண் ஏறி முழம் சறுக்கிய கதையாகத் தோன்றுகிறது.

நாட்டுக்கு வெளியே ராணுவம் காவல் என்றால் நாட்டிக்குல் காவல் மாநில காவல்துறை தான். அரசுத் துறைகளிலேயே மக்களால் பெரிதும் மதிக்கப்படும் துறைகளில் முக்கியமான ஒன்று காவல் துறை. தமிழக அளவில் காவல்துறைக்கு உள்ள கம்பீரத்தையும் மரியாதையும் கெடுக்கும் அளவிலான செயல்களில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை நிச்சயம் அளிக்கப்படவேண்டும். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறித்த உரிய விவரங்களும் தெளிவாக விவரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இத்தகையக் குற்றங்களைத் தடுக்க இயலும். இல்லாவிட்டால் காவல்துறையின் மானம் காற்றில் பறக்கும் காத்தாடியாகிவிடும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors