தமிழோவியம்
திரைவிமர்சனம் : பாண்டி
- மீனா

உதாவாக்கரை என்று அப்பாவால் பட்டம் கட்டப்பட்ட பிள்ளை தலையெடுத்து குடும்பத்தைக் காப்பாற்றும் அரதப்பழசானக் கதையுடன் கொஞ்சம் காமெடி - செண்டிமெண்ட் கலந்து எடுக்கப்பட்டப் படம் தான் பாண்டி.

கண்டிப்பான பள்ளி ஆசிரியர் நாசர். அவரது மனைவி சரண்யா. ஸ்ரீமன், லாரன்ஸ் மற்றும் மூன்று பெண்கள் குடும்பத்தின் இளைய வாரிசு லாரன்ஸ். தன் சண்டியர்தனமான நடவடிக்கைகளால் நாசரால் வெறுக்கப்படும் லாரன்ஸ் மலை போல நம்புவது அம்மா சரண்யாவை மட்டும். ஒரு கட்டத்தில் மகளின் திருமணத்திற்காக கடனாக வாங்கிய பணம் காணாமல் போக - பழி லாரன்ஸ் மீது விழுகிறது. நாசர் லாரன்ஸை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். தங்கைகளின் திருமணத்தை நடத்தவும், தனது அம்மா ஆசைப்பட்டபடி சொந்தமாக ஒரு வீடு கட்டுவதற்காகவும் கிடைக்கும் வேலையை ஒத்துக்கொண்டு துபாய் செல்கிறார் லாரன்ஸ். இடையே சினேகாவை காதலித்து திருமணம் செய்கிறார்.

Lawrence, Snehaநண்பர்களுடன் துபாயில் குப்பை கூட்டும் தொழிலில் ஈடுபடும் லாரன்ஸ் அம்மா மரணம் அடைந்ததை அறியாமலேயே சொந்த ஊர் திரும்புகிறார். அம்மாவின் இழப்பால் தவிக்கும் அவரிடம், அவரது அம்மாவை கொன்னுட்டாங்க என்று உண்மையை நண்பர்கள் கூற, அம்மாவின் சாவுக்குக் காரணமானவர்களை அவர் எப்படி பழிவாங்குகிறார் என்பதே கிளைமாக்ஸ்.

வாசப்படிய மிதிக்கக் கூடாதுன்னுதானே சொன்ன? அதான் கொல்லை பக்கமா ஏறிக்குதிச்சு வந்தேன் என்று சர்வசாதாரணமாக பதில் சொல்லிவிட்டு அம்மா வைத்த மீன் குழம்பை ருசிக்கும் லாரன்ஸின் நடிப்பு ஓகே ரகம். அம்மா இறந்தது தெரியாமல் அப்பாவுக்கு போன் செய்து, 'அம்மாவிடம் போனை கொடுங்கப்பா' என்று கேட்கிற காட்சியில் பாராட்டுகளைப் பெறுகிறார். காமெடி, காதல், அதிரடி சண்டை என பன்முக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் லாரன்ஸ். அதிலும் கிளைமாக்ஸ் சண்டை அருமை. சினேகாவுடனான பாடல் காட்சியில் நடன இயக்குனராக தனது திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார்.

குடும்ப விளக்காக இவ்வளவு நாள் பார்த்த சினேகாவா இது என்று அதிசயிக்க வைக்கிறார் சினேகா. அந்த அளவிற்கு கவர்ச்சியில் கலங்க அடிக்கிறார். குறிப்பாக லாரன்ஸ் கோஷ்டிகள் மிக்ஸ் பண்ணி வைத்திருக்கும் குவார்ட்டரை அடித்துவிட்டு இவர் ஆடுகிற ஆட்டம் அப்பா.... ஆனாலும் நடிக்க கிடைத்த சில காட்சிகளில் தன் திறமையான நடிப்பால் அசத்தவும் செய்கிறார். இன்னொரு நாயகி நமீதா. இரண்டு பாட்டிற்கு ஆடினால் மட்டும் போதும் - நடிப்பெல்லாம் எதற்கு என்ற ரகம்.

Sneha, Lawrence, Kanja Karuppuகாமெடிக்கு கஞ்சா கருப்பு, மயில்சாமி கூட்டணி. 'சாஞ்சுக்குறது அவன் மேல... வாந்தியெடுக்கிறது என் மேலயா?' என்று சினேகா தன் மேல் வாந்தியெடுக்கும் போதெல்லாம் அப்பாவியாக கேட்கும் கஞ்சா கருப்பு அதிர வைக்கிறார். மயில்சாமி சில காட்சிகளே வந்தாலும், ரசிக்க வைக்கிறார். நாசர், சரண்யா கண்கலங்க வைக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் இளவரசு கேரக்டர் நேர்த்தி.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஓக்கே. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். பழைய கதையாக இருந்தாலும் நாயகன் லாரன்ஸ¤க்கு எந்த அளவிற்கு வருமோ அந்த அளவிற்கு காதல், சென்ட்டிமென்ட், காமெடி கலந்து சரியான விகிதத்தில் திரைக்கதையை அமைத்த இயக்குனர் ராசு மதுரவனுக்கு சபாஷ்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors