தமிழோவியம்
தராசு : நீதிமன்ற உத்தரவு
- மீனா

கைதிகள் எந்த விசாரணையும் இன்றி ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுவதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜகஜீவன்ராம் என்பவர் கடந்த 38 வருடங்களாக எந்த ஒரு விசாரணையும் இன்றி குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாத நிலையில் பைசாபாத் சிறையில் வாடியுள்ளார். இந்தக் கொடுமைப்பற்றி பத்திரிக்கைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு ஜகஜீவன் ராமை ஜாமீனில் விடுதலை செய்ய உத்திரவிட்டது. மேலும் நாடு முழுவதும் சிறைகளில் விசாரணை இல்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகள் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்திரவிட்டுள்ளது.

ஒரு பக்கம் இப்படி என்றால் மறுபக்கத்தில் பாட்னா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் மாநில ஆளும் கட்சி ஐக்கிய ஜனதாதள தலைவரும் முன்னாள் எம்.பியுமான ஆனந்த் மோனக் சிங் சந்தடியில்லாமல் சிறையிலிருந்து அதிகாரிகளின் உதவியால் வெளியேறி இரண்டு நாட்கள் ஆனந்தமாக வெளியே இருந்துவிட்டு ஓசைப்படாமல் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார். கொலை, கடத்தல், பணம் பறிப்பு என்று அவர் மீது 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரைப் பொறுத்தமட்டில் இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல அரசியல்வாதிகள் இப்படி எஸ்கேப் ஆவதைக் கண்டுபிடித்த சுப்ரீம் கோர்ட்டு மாநில அரசை பலமுறை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆனாலும் பலன் பூஜ்ஜியம் தான். சிறையிலுள்ள அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு செய்த தவறு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற பல அரசியல்வாதிகள் போடும் ஆட்டங்களை எந்த நீதிமன்றத்தாலும் தடுக்க இயலவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆக செய்யாத / நிரூபிக்கப்படாத தவறுக்காக அப்பாவி மக்கள் ஆண்டாண்டு காலம் அநியாயமாக சிறையில் வாடுவதையும் நீதிமன்றங்களால் தடுக்க இயலவில்லை.. அராஜக அரசியல்வாதிகள் செய்த குற்ற நிரூபிக்கப்பட்டு சட்டபூர்வமாக தண்டனை பெற்றாலும் கூட சில கைக்கூலிகளை வைத்துக்கொண்டு சட்டத்தை ஏமாற்றுவதையும் தடுக்க இயலவில்லை.. ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்பதைத் தடுக்க இயலவில்லை.. என்று நீதிமன்றங்களால் இவைகளை எல்லாம் சரிவர செய்ய இயல்கிறதோ அன்று தான் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீதும் அவை வழங்கும் தீர்புகளின் மீதும் உண்மையான மதிப்பு வரும். தவறு செய்தவர்களுக்கு உண்மையான பயம் வரும். அதுவரை நீதிமன்ற உத்திரவுகளை எல்லாம் சுண்டல் மடிக்கும் காகிதங்களாகத்தான் கருதப்போகிறார்கள் நம் அரசியல்வாதிகளும் மக்களும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors