தமிழோவியம்
திரைவிமர்சனம் : ஜெர்ரி
- மீனா

கிரேஸி மோகனின் முழு நீள நகைச்சுவை நாடகத்தின் சினிமா வடிவம் தான் ஜெர்ரி.

Jerry Movieகல்லூரி மாணவரான ஜெர்ரி என்னும் ஜெயராமனுக்கு (ரமேஷ்) காதல் என்றாலே அவ்வளவு வெறுப்பு. இவரது அடாவடித்தனமான நடவடிக்கைகளால் கூடப்படிக்கும் மாணவி ஜானகிக்கும் (ஸ்ருதி) ரமேஷிற்கும் எப்போதும் ஒத்துவராத நிலை. இந்நிலையில் ரமேஷின் நண்பர் கெளசிக் "உனக்கு காதலிக்கத் தெரியாது.. உன்னை யாரும் காதலிக்க மாட்டார்கள்.." என்றெல்லாம் வெறுப்பேற்ற, நீ யாரைக் காட்டுகிறாயோ அவர்களையே நான் என்னிடம் ஐ லவ் யூ என்று சொல்ல வைக்கிறேன்  என்று நண்பனுடன் பெட் கட்டுகிறார் ரமேஷ். மூன்று பெண்கள் ஒரே நேரத்தில் உன்னிடம் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்று கெளசிக் சொல்ல, ரமேஷ் அவரது நிபந்தனைகளுக்கு உட்படுகிறார்.

கெளசிக் சொல்லும் முதல் பெண் போலீஸ் அதிகாரியான மீரா வாசுதேவன். இரண்டாவது பெண் பிரபல நடிகையான மும்தாஜ். மூன்றாவதாக தன்னுடைய கல்லூரியில் படிக்கும் ஸ்ருதி. இவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தான் பந்தயம் கட்டியவாரே தன்னுடைய காதல் வலையில் விழவைக்கிறார் ரமேஷ். ஒரு கட்டத்தில் மூன்று பெண்களும் ரமேஷின் பெற்றோரைப் பார்த்து தங்களுடைய திருமணத்தை நடத்திக் கொடுக்குமாறு கேட்க, மூவரில் யாருடன் ரமேஷிற்கு திருமணம் என்பதே கிளைமாக்ஸ்.

முதல் முறையாக காமெடி களத்தில் குதித்திருக்கும் ரமேஷ் ஓரளவிற்கு நகைச்சுவை வருகிறது. ஆனாலும் அவரது குரல் தான் ரொம்பப்படுத்துகிறது. இனி இவர் நடிக்கும் படங்களில் இவர் பேசாமல் யாராவது டப்பிங் பேசினால் புண்ணியமாய் போகும். ஸ்ருதி, மீரா வாசுதேவன், மும்தாஜ் அனைவரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்கள். குறிப்பாக இவர்கள் அனைவரும் சேர்ந்து கலக்கும் அந்த தியேட்டர் காமெடி சூப்பர்.

மும்தாஜின் மேனேஜராக கிரேஸியும், ரமேஷின் நண்பராக மாதுபாலாஜியும் தங்களுடைய வழக்கமான கிரேஸி கிரியேஷன் நடிப்பில் அசத்துகிறார்கள். போதாத குறைக்கு சச்சு, நீலு, சந்தானபாரதி, மதன்பாப்.. அனைவருமாக சேர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு நன்றாக நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் கிரேஸி மோகன். ரமேஷ் விநாயகம் இசையில் பாடல்கள் ஒக்கே. இயக்கம் மெளலியின் தம்பியான காந்தன். எப்படி கிரேஸி மோகனனின் நாடகங்களில் லாஜிக் பார்க்கக்கூடாதோ அதைப் போலவே இந்தப் படத்திலும் லாஜிக் எல்லாம் பார்க்ககூடாது. பல காட்சிகள் கிரேஸியின் பழைய நாடகங்களை நினைவூட்டினாலும் தாதா - கத்திக்குத்து - பழிவாங்கும் படங்களையே பார்த்து அலுத்துப் போன மக்களுக்கு நல்ல மாறுதலாக அமைகிறது ஜெர்ரி.

Copyright © 2005 Tamiloviam.com - Authors