தமிழோவியம்
திரையோவியம் : பியானோ - ஒளிர்வதும் மிளிர்வதும்
- வந்தியத்தேவன்

தந்தையே
உயிர்பெற உதவினாய்
ஒத்துக் கொள்கிறேன்
விந்து தந்தாய்
வந்தனம்
விலையாய்
என் வாழ்க்கையை
நீ வாழ்கிறாயே?

மகனை கலெக்டராக்க, வக்கீலாக்க வேண்டும் என்று கனவு காணாத அப்பாக்களும் உண்டோ? ஓவியம் வரைய விரும்பியவர், இலக்கியம் பயில ஆசைப்பட்டவர், தங்கள் பெற்றோரின் கனவுகளை நனவாக்க, பொய்ப்பாதையில் போகின்ற அவலமும் பார்த்திருப்பீரே? ஆலவிருட்சமாய் வளர வேண்டியவர்கள், கட்டுப்பாடுகளின் சிறையில் போன்சாய் மரமாகி விடும் துயரத்தையும் கவனித்திருப்பீரே?

போன்சாயும் ஆலமரமாவதுண்டு. அவ்வப்போது, அதிசயமாய், அபூர்வமாய். ஆம், ஆஸ்திரேலியாவின் பியானோ மேதை டேவிட் ஹெல்ப்காட்டைப் (David Helfgott) போல.

"மகனே நீ பாக்கியவான். எனது தந்தைக்கு இசையென்றால் பிடிக்காது"... யான் பெறாத இன்பம் நீ பெறுக என்று நினைக்கும் தந்தை. கனவுகள் திணிக்கப்பட்டாலும் ஆலமரமாக வளர ஆசைப்படும் போன்சாய் மகன் டேவிட். இவர்களின் உணர்ச்சிப் போராட்டமே 1996'ல் வெளி வந்த ஷைன் (Shine) திரைப்படம்.  ஸ்காட் ஹிக்ஸ் என்பவர் எதேச்சையாக டேவிட்டின் இளம்பிராய வாழ்க்கையை குறித்து அறிய வர, திரைப்படமாக வரித்ததுதான் ஷைன்.

போலந்து நாட்டிலிருந்து நாஜிக் கொடுமையால் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா புலம் பெயர்கின்றார் டேவிட்டின் அப்பா. காலம் தந்த காயத்தால் வாழ்கையைப் பற்றி முரண்பட்ட கருத்துகளுடன், முரட்டுப் பிடிவாதம் பிடிக்கும் டேவிட்டின் தந்தையாக ஆர்மின் மியூலர்-ஸ்டால் (Armin Mueller-Stahl).  அப்பா பாத்திரத்தை மனிதர் அநாயாசமாகச் செய்கிறார். வயதில் முதிர்ந்த கலைஞன் டேவிட்டாய், ஜெப்ரி ரஷ் (Geoffrey Rush) நடிப்பிற்கு புதிய பரிமாணங்கள் தருகிறார். பழைய தமிழ் திரைப்பட கலைஞரைப் போல் ஆஸ்திரேலிய நாடகத்துறையில் புடம் போடப்பட்டவர் ஜெப்ரி. இந்தியில் இப்போதுள்ள ஷாரூக்கான், ஓம் பூரி, நானா படேகர் போன்றோரும் நாடகக்துறை தந்த நல்முத்துக்களே.

இப்படத்தில் ஜெப்ரி, டேவிட்டாக நடிக்கவில்லை. வாழ்ந்தே காட்டியுள்ளார். இளம் டேவிட்டாய் சோடா பாட்டில் கண்ணாடியுடன் நோவா டெய்லர் (Noah Taylor), ஜெப்ரிக்கு சவால் விடாத குறை. டேவிட் பிரதிபலிப்பில்.

டேவிட்டின் அப்பா சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டு ஆசையாய் வாங்கிய வயலினை, இசை அலர்ஜி தாத்தாவால் போட்டு உடைக்கப்படுகிறது. அதுவே அடிமனதில் ஆழமாகப் பதிந்துவிட தனது மகனை பியானோ (இசைக்?) கலைஞனாக்கி விடும் வெறியும் தருகிறது டேவிட்டின் தந்தைக்கு.

இளம் டேவிட் கொஞ்சம் பாசம், நிறைய கண்டிப்புடன் வளர்கிறார். குடும்பம் எந்நிலையிலும், காரணிகளாலும் சிதறிவிடக்கூடாது என்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாய் விளங்குகிறார் தந்தை. அமெரிக்கா சென்று இசைக்கல்வி கற்க வாய்ப்பு வந்த போது, படிக்க விரும்பும் டேவிட்டை நடு ஹாலில் நையப்படைப்பதும், பின்னர் குளியல் தொட்டியில் கோழிக்குஞ்சு போல் பதுங்கியிருப்பவனை அணைத்துக் கொண்டு விம்முவதும் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும்.

"வாழ்க்கை கொடூரமானது. இதில் நீ பிழைத்திருக்க வேண்டும்" போன்ற கூர்மையான வசனங்கள் படம் முழுவதும் தாராளமாய் தூவியிருக்கிறார்கள்.

ராயல் காலேஜ் ஆப் மியூசிக், லண்டனில் படிக்க டேவிட்டிற்கு மற்றுமொரு வாய்ப்பு வர, தந்தை-மகன் போராட்டம் மீண்டும் வெடிக்கிறது. இம்முறை வெல்வது டேவிட். உனது வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று தந்தை எச்சரிக்க, சராசரி இல்லத்தலைவியாய் அம்மா கையைப் பிசைய டேவிட் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

கல்லூரியில் டேவிட் பியானோவே உலகமென்று வெறியுடன் வளர்கிறான். போட்டியொன்றில் யாருமே வா(யோ)சிக்கத் தயங்குகிற ராக்-3 என்கிற ராக்மேனிஆப் (Rachmanioff) கன்செர்ட்டோ-3'ஐ  துள்ளலுடன் ரசித்து, இசைத்து நினைவிழக்கிறான். பியானோ மீது டேவிட்டின் கைவிரல்கள் நர்த்தனமாடுவதை படம் பிடித்த விதம், கலவை செய்த தரம், ஹையோ....பியானோ இசையின் டெம்போ கூடக் கூட நம்மையே தலை சுற்ற வைக்கிறது படப்பதிவு.

இப்படத்தின் பின்னணி இசையில் பெரும்பகுதியை செய்தது வேறு யாருமல்ல ஒரிஜினல் டேவிட் ஹெல்ப்காட் என்பது சிறப்பம்சம்.

பத்து வருடங்கள் உருண்டோட பில்டர் இல்லா சிகரெட்டை ஊதியபடி டேவிட் (ஜெப்ரி), கிளண்டேல் மனநல மருத்துவமனையில் இருக்கிறார். நரம்பு மண்டலம் செயலிழந்து (ராக்மேனிஆப் கன்செர்ட்டோ-3'ஐ வாசித்தபின்) முழுமையாக குணமாகாததால் திக்குவாயுடன் சொன்னதையே திரும்பச் சொல்லும் நிலையில் மனிதன், சும்மா புகுந்து புறப்படுகிறார். ("க்க்க்க்க்கிரண்" என்று இழுத்து வாய்கோணிய ஷாரூக்கான் "டர்" படத்தில் பயமுறுத்தியது நினைவிற்கு வந்தது). தன்னை மறந்து, தனது திறமை மறந்து ஒரு அரைப்பைத்தியமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென இலக்கணம் வகுக்கிறார் ஜெப்ரி.

இலக்கின்றி ஒரு மழை நாளில் அலையும்போது, உணவகம் ஒன்றில் கண்ணாடித் தடுப்பின் ஊடே பியானோவை பார்த்ததும் கைகள் துடிக்க உள்ளே செல்லும் டேவிட், அங்கிருந்தவரை தனது இசை மழையால் நனைய வைக்கிறார். (இசையை எனக்கு உணர முடியுமே தவிர உணர்த்தும் ஞானமில்லை. இது "Flight of the Bumblebee" என்று பின்னர் அறியக்கேட்டேன்).

ஜில்லியன் என்னும் ஜோதிடர் (ஜோசியை?) டேவிட்டின் எதிர்காலத்தை கணித்து, காதலித்து மணந்து, டேவிட்டை மீண்டும் பியானோ வித்தகனாக உலகில் வலம் வர வைக்கிறார். இறுதியாக தந்தையின் கல்லறை முன், ஜில்லியன் ஜெப்ரியை நோக்கி "ஏதும் உணர்கிறாயா?" என்று கேட்பார். வித்தியாசமான முகபாவத்துடன் ஜெப்ரியின் பதில்,"I feel Nothing". பளாரென அறைந்த வல்லின வசனம்.

ஸ்காட் ஹிக்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ஆஸ்திரிரேலியா திரைக்கல்லூரி விருதுகள் ஆறினை அள்ளிச் சென்றது. மூச்சு முட்டும் பாசத்தையும், எப்போதும் வெற்றி காணவேண்டுமென்ற பேராசை வெறியையும், தெளிவாய்ச் சித்தரித்த ஆர்மனுக்கு சிறந்த துணை நடிகர் விருது கிட்டியது. ஷேரன் ஸ்டோன் கையிலிருந்து சிறந்த நடிகர் விருது வாங்கிய ஜெப்ரி கூறியது, "இனி நான் நடிக்காத படங்களுக்கு மட்டுமே பைனான்ஸ் கிட்டும் காலம் மாறும்".

விருதுப்படமென்றாலே விலகியோடும் நம்மவரை நினைத்து பெருமூச்சு விடத்தான் முடிந்தது.

ஷைனில் பியானோ ஒளிர்கிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors