தமிழோவியம்
பெண்ணோவியம் : சுத்தம்
- மீனா

ஒரு வீட்டின் சுத்தத்தை வெறும் வரவேற்பறையைப் பார்த்துவிட்டு எடை போடுவது தவறு... வீட்டின் உள்ளறைகளான கிச்சன் மற்றும் கழிவறையின் சுத்தம் வைத்துதான் அந்த வீட்டினருடைய சுத்தத்தினைத் துல்லியமாக எடை போட வேண்டும் என்று கூறுவார்கள். வீட்டின் அமைப்பு, பாதுகாப்பு, சௌகரியம், அலங்காரம் ஆகிய மற்ற சமாசாரங்கள் எல்லாம் அப்புறம்தான்!

* இரு வேளையும் அடுப்புமேடையை (சிங்க் உட்பட) நன்றாக துடையுங்கள். தினம் தரையையும், வாரம் ஒருமுறை கிச்சன் ஜன்னல்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.

* சமைக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் சிங்க்கை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை, பாத்திரங்களை சிங்க்கில் போட்டு ஊறவைக்க வேண்டாம். முடிந்த வரை பாத்திரங்களை உடனுக்குடன் அலம்பிவிடுவது நல்லது.

* குப்பைக் கூடையின் விளிம்புவரை (குப்பை போட ஆரம்பிக்கும் முன்பே) ஒரு ப்ளாஸ்டிக் பையைப் பரப்பி வையுங்கள். குப்பை சேரச் சேர அதை அப்புறப்படுத்தி, புது கவர் விரித்து வையுங்கள். ஞாபகமாக தினந்தோறும் சேரும் குப்பைகளை அன்றே தூக்கியெறியுங்கள். சேமித்து வைக்க வேறு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கும்போது குப்பை ஏன் சேமிப்பானேன்?

* பாத்ரூமில் டவல் போட ராட் இருக்குமே, அதைப்போல கிச்சனிலும் ஒன்று பொருத்துங்கள். அடுப்புக்கு, மேடை துடைக்க, கை துடைத்துக் கொள்ள என தனித்தனி துணிகளை உபயோகியுங்கள். அவற்றை அவ்வப்போது அலசி இந்த ராடின் மீது உலர்த்துங்கள்.

* முடிந்தவரை தேய்த்த பாத்திரங்களை துணி கொண்டு துடைத்து அடுக்குங்கள். அல்லது அவை உலர்ந்தவுடன் அடுக்கவும். இரும்பு வாணலி, தோசைக் கல் ஆகியவற்றை அவசியம் துடைத்து வைக்கவும்.

* எக்காரணம் கொண்டும் விரித்த தலையுடன் சமைக்க வேண்டாம்.

* சோம்பல் படாமல், மாதம் ஒரு முறை கிச்சன் பல்பைக் கழட்டித் துடையுங்கள்.

* எறும்புப் பவுடர் போடுவது கரப்பான் பூச்சி வராமல் இருக்க கோடு கிழிப்பது, ஆகிய விஷயங்களை ஷெல்பிலுள்ள நியூஸ் பேப்பர் அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டுக்கு அடியிலே செய்யுங்கள். இப்படிச் செய்வதால் மருந்துகளின் நெடி சாமான்களில் ஏறாது. குழந்தைகளும் தொட வாய்ப்பில்லை.

* எக்ஸாஸ்ட் ·பேனை மாட்டுவதோடு மட்டுமல்லாமல், எண்ணெய்யில் பொரிக்கும்போதும் வதக்கும் போதும் நினைவாக உபயோகியுங்கள். தும்மல், இருமல் போன்றவற்றிலிருந்து நமது உடலுக்கும் பாதுகாப்பு... வாயிலிருந்து கிருமிகள் உணவின் மீது தெளித்து விழாமல் பதார்த்தங்களுக்கும் பாதுகாப்பு!

* ஈக்களின் தொல்லையிலிருந்து சமையலறையைப் பாதுகாக்க புதினா இலையுடன் உப்பையும் சேர்த்து, தண்ணீர்விட்டுக் கசக்கி ஆங்காங்கே தெளியுங்கள்.

* அடுப்பு உள்ள பகுதிக்கு மேல் அலமாரியில் மெட்டல் பாத்திரங்களைக் கவிழ்த்து வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் கொண்ட ப்ளாஸ்டிக் சாமான்களை வைக்காதீர்கள்... பிசுக்கு ஏறும்.

* தீ சிம்மில்தானே இருக்கிறது என்று நினைத்து அடுப்பில் சமைத்துக்கொண்டிருக்கும்போது, நீங்கள் பாட்டுக்கு கம்ப்யூட்டர் முன்பு உட்காரவோ, போனில் பேசவோ, வாசலில் அழைப்பு மணி கேட்டோ போய்விடாதீர்கள். உணவும் வீணாகிவிடும். ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். ஜாக்கிரதை!

Copyright © 2005 Tamiloviam.com - Authors