தமிழோவியம்
திரையோவியம் : மச்சி
- மீனா

மும்பையில் ஊர் சுற்றிக்கொண்டு கெட்டுப்போகும் பையன் துஷ்யந்தை அப்பா டாக்டருக்குப் படிக்க கோவைக்கு அனுப்புகிறார். தான் பெரிய வீட்டுப் பையன் என்று பயங்கர பந்தா செய்துகொண்டு திரியும் துஷ்யந்த் யாரையும் மதிக்காமல் சுற்றிவருகிறார். தன்னுடன் படிக்கும் 4 மிடில்கிளாஸ் மாணவர்களை அவமானப்படுத்தும் துஷ்யந்த் ஒரு விபத்தில் சிக்கிக்கொள்ளும் போது அந்த 4 மாணவர்களால் காப்பாற்றப்படுகிறார். அது முதல் நட்பின் வலிமையையும், ஆழத்தையும் அறிந்துகொள்கிறார்.

நண்பர்கள் மற்றும் காதலியுடன் இருக்கும்போது, பசுபதியின் பையன் துஷ்யந்திடம் வம்பு செய்ய, நண்பர்கள் நட்பின் பெருமையை காட்டிக்கொள்ளும் விதமாக, பசுபதியின் பையனை அடித்துவிடுகிறார்கள். தொடர்ந்து நடக்கும் கைகலப்பில், பசுபதியின் மகன் முகத்தில் ஆசிட் கொட்டிவிடுகிறது. மகனின் வாழ்க்கையை நாசமாக்கியவர்களை அழித்தே தீருவேன் என்று பசுபதி, மாணவர்களைத் துரத்த ஆரம்பிக்க, நண்பர்களைக் காப்பாற்ற துஷ்யந்த் போராட, இறுதி வெற்றி யாருக்கு? என்பதே மீதிக் கதை.

முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் இடையே துஷ்யந்த் நடிப்பில் வித்தியாசம் கொஞ்சம் தெரிகிறது. ஆக்ஷன், டான்ஸ் எல்லாம் நன்றாகச் செய்கிறார். கொஞ்சம் நடிப்பும் வருகிறது. ஹீரோயின் சுபா புஞ்ஜா ஓக்கே. தைரியமாக முதல் படத்திலேயே சொந்தக் குரலில் பேசியுள்ளார். இருந்தாலும் இவரும் இவரது தோழிகளும் சேர்ந்து அடிக்கும் கமெண்டுகள்... கொஞ்சம் ஜாஸ்தி.

பசுபதி இனி வரும் படங்களில் தன்னுடைய பாத்திரத்தை கொஞ்சம் கவனமாக தேர்வு செய்தால்தான் அவருக்கு நல்லது. "நாராயணன்.. நாராயணன்.. என்று வார்த்தைக்கு வார்த்தை அவர் உறுமிக்கொண்டிருப்பதும் காட்டுக்கத்தல் கத்துவதும் எரிச்சலூட்டுகிறது. வெறும் மாவட்ட செயலாளராக இருந்துகொண்டு அவர் செய்யும் பந்தாக்களும் அடாவடிகளும் டூமச். விருமாண்டியில் அருமையாக நடித்த பசுபதியின் அபாரமான வில்லத்தனத்தை இப்படத்தில் எங்கே தேடினாலும் கிடைக்கவில்லை.

இசை ரஹ்மானின் தங்கை. ஓஹோவென்று இல்லை என்றாலும் ஓக்கேயாக உள்ளது. படத்தில் காமெடி சுத்தமாக இல்லை. மொத்ததில் மச்சி ரொம்ப சாதாரணம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors