தமிழோவியம்
திரைவிமர்சனம் : நியூ
- மீனா

டைரக்டரே படத்தின் கதாநாயகனாகும் வரிசையில் அடுத்து வந்திருக்கிறார் சூர்யா. கதாநாயகனாக பெரிய முகவெட்டு எல்லாம் தேவையில்லை என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

எட்டு வயது பப்பு அடிக்கும் லூட்டிகள் தாங்க முடியாமல் அவனது தாய் தேவயானி திட்டிக்கொண்டே இருக்கிறார். அம்மா தன்னை வெறுக்கிறாள் என்று முடிவு கட்டும் பப்பு தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது விஞ்ஞானி மணிவண்ணன் அவனைக் காப்பாற்றுகிறார். தன்னுடைய கண்டுபிடிப்பால் பப்புவை 28 வயது வாலிப சூர்யாவாக மாற்றிவிடுகிறார். அங்கிருந்து ஆரம்பிக்கின்றன சூர்யாவின் லூட்டிகள். வயது என்னவோ 28 என்றாலும் மனதளவில் அவர் இன்னும் 8 வயது பப்பா தான்!! வேலைக்கான இண்டர்வியூவில் சூர்யாவின் பதில்களால் கவரப்பட்டு உடனே அவருக்கு வேலை தருகிறார் நாசர். மேலும் அவரது மகள் சிம்ரனின் மனதையும் கவர்கிறார் சூர்யா. மணந்தார் சூர்யாவைத்தான் மணப்பேன் என்ற ரேஞ்சிற்குப் போகிறார் சிம்ரன். இதில் சிம்ரனுக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்குபவர் ஐஸ்வர்யா.

இதற்கிடையே தன் அண்ணன் மூலமாக அம்மா தன்னை இழந்து தவிப்பதை தெரிந்துகொள்கிறார் சூர்யா. அம்மாவை நேரில் பார்த்தபிறகு அம்மாவின் அன்பை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். அம்மாவை விட்டுப் பிரிய மனமில்லாததால் விஞ்ஞானி மணிவண்ணனிடம் மீண்டும் தன்னை 8 வயது பையனாக மாற்றும்படி வேண்டுகிறார். ஆனால் விஞ்ஞானத்தில் ஏற்படும் குழப்பத்தால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 8 வயது சிறுவனாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 28 வயது வாலிபனாகவும் மாறுகிறார் சூர்யா.

இந்நிலையில் சிம்ரனின் பிடிவாதம் தாங்கமுடியாமல் அவரைத் திருமணம் செய்துகொள்கிறார் சூர்யா. இருக்கும் தொல்லை போதாதென்று கவர்சிப் புயலாக எதிர்வீட்டுக்குப் வந்து சேருகிறார் கிரண். ஒரு நேரத்தில் சூர்யாவின் குட்டு உடைய, அனைவரும் உண்மையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கிளைமாக்ஸ்.

ஆங்கிலப் படமான 'பிக்'கைத் தழுவி வெளிவந்திருக்கும் நியூவில் பிக்கில் இல்லாத வக்கிர A  சமாச்சாரங்கள் நிறைய்யய.. சூர்யா அப்பாவியாக தனது முகத்தை வைத்துக்கொண்டு சொல்லும் வார்த்தைகள், செய்யும் செய்கைகள் எல்லாம் பயங்கர அந்த மீனிங்... தற்போது இரட்டை அர்த்த வசனங்கள் உள்ள படங்கள் நிறைய வருவதாலோ என்னமோ, சூர்யா தன் படத்தின் நேரடியான சிங்கிள் மீனிங் டயலாக்குகளை அப்படியே தூவியிருக்கிறார். தாய்பாசத்தைப் பற்றி ஆரம்பித்தாலும் கதை என்னவோ திரும்பத் திரும்ப கதையும் காட்சி அமைப்புகளும் A சமாசாரத்தை நோக்கியே போகின்றன.

அறிமுகப் படத்திலேயே நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் சூர்யா. டான்ஸ¤ம் ஓக்கே. சிம்ரன் போதாதென்று கவர்ச்சிக்கு கிரணை வேறு தாராளமாக நடமாடவிட்டிருக்கிறார். மற்றபடி வேறு எதுவும் சொல்வதற்கில்லை. அம்மாவாக வரும் தேவயானி, அசல் அம்மாவாகவே மாறியிருக்கிறார். மகனின் லூட்டி தாங்கமுடியாமல் அவனைத் திட்டும்போதும் சரி, மகனைப் பிரிந்திருக்கும் போது அவனை நினைத்து தவிக்கும் தவிப்பிலும் சரி... கலக்கியிருக்கிறார். மணிவண்ணன் மற்றும் கருணாஸ் அவ்வப்போது வந்து தலையைக் காட்டுகிறார்கள் அவ்வளவே! உள்ளூர் வில்லங்கள் யாரும் இயக்குனருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ தெலுங்கு காமெடியனை வில்லனாக்கி அழகு பார்த்திருக்கிறார். அதற்காகவாவது அந்த வில்லன் கொஞ்சம் நடித்திருக்கலாம்.. என்ன செய்ய! அவர் முகத்தைப் பார்த்தால் வில்லத்தனத்திற்கு பதில் நிறையவே அசட்டுத்தனம் தான் தென்படுகிறது.

ரஹ்மானின் இசை ..  ஓக்கே. தொட்டால் பூ மலரும் பாட்டு ரீமிக்ஸ் அட்டகாசம். இயக்குனர் சூர்யா சொல்ல வந்த கதையை விட்டுவிட்டு ஆபாசத்திற்குத் தாவாமல் இருந்திருந்தால் நியூ நிச்சயம் ஒரு சூப்பர் ஹிட்டாகியிருக்கும். இப்போதும் படம் ஹிட்தான் என்று சொல்லிக்கொண்டாலும், இவ்வளவு ஆபாசம் தேவையா சூர்யா ?

கொசுறு செய்தி : அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தன் பூனைக்கு 'இந்தியா' என பெயர் வைத்திருக்கிறார் என்று தெரிந்ததும் பலர் கோபப்பட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக இந்த படத்தில் மணிவண்ணன் வளர்க்கும் ஒரு நாய்க்கு 'புஷ்' என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors