தமிழோவியம்
தராசு : தமிழக மக்களின் தலைவிதி
- மீனா

மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த 12 மந்திரிகள் இருந்தும் மத்திய அரசிடமிருந்து வறட்சி நிதிபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் சேர்க்கப்படாதது வருத்தமாக இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்தியில் ஆள்பவரும் மாநிலத்தில் ஆள்பவரும் ஒரே கட்சியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ இருந்தால்தான் அந்த மாநில முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கவே முடியும். இல்லாவிட்டால் எங்கே அடுத்தவருக்கு நல்லபெயர் போய்விடுமோ என்ற பயத்திலேயே யாரும் எந்த உதவியையும் செய்ய மாட்டார்கள். இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல - தி.மு.க அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் எண்ணமும் இதுதான்.

தற்போது பதவியேற்ற அமைச்சர்கள் அனைவரும் தமிழக நலனை கொஞ்சம் கூட தங்கள் கவனத்தில் வைத்திருக்க மாட்டார்கள் என்பது தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைக்குக் கூடத் தெரியும். மக்கள் நலனைக் கருதுபவர்களாக இருந்திருந்தால் மழை பெய்யாமலேயே தமிழ்நாட்டில் இந்நேரம் காவிரி பாய்ந்தோடி இருக்கவேண்டும். குறைந்தபட்சம் நடந்தாவது வந்திருக்கவேண்டும். சரியான அளவு வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வறட்சியால் இன்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் பல மைல்கள் அலையும் கொடுமை இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. எந்த ஆண்டிப்பட்டியும் அரசிப்பட்டியான கதை தெரியவில்லை.

அரசியல் தலையீடு மட்டும் இல்லாமல்,  கர்நாடக தமிழக விவசாயிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் இந்நேரம் தமிழக தண்ணீர் பிரச்சனையில் பாதிக்கு மேல் தீர்ந்திருக்கும். ஆனால் நம் தலைவர்களால் ஆன உபயம்.. உருப்படியாக ஒரு வழியையும் கண்டுபிடிக்காமல் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். லல்லு மீது எப்பேர்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பீகார் மாநில வளர்ச்சிக்காக அவர் ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்கிறார். ஆனால் நம் தமிழகத் தலைவர்கள் அந்த சிரமத்தைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைமை மட்டும் மாறவே இல்லை.

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நம் வேண்டுகோள் ஒன்றுதான். உங்கள் சொந்த வேலைகளை தாராளமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் கொஞ்சமாவது ஓட்டுபோட்டு ஜெயிக்க வைத்த மக்களைப் பற்றி சிந்தியுங்கள். குருவாயூர் கோவில் யானை ஒரு தும்மல் போட்டாலே பதறும் பதறலில் - அறிவாலய வளாகத்திலிருந்து ஒரு கல் கீழே விழுந்தாலும் பதறும் பதறலில் துளியாவது கஷ்டப்படும் மக்களுக்காகப் பதறுங்கள். அப்படிச் செய்தால் தமிழகம் எல்லா வளங்களும் பெற்றுத் தழைத்தோங்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors