தமிழோவியம்
முச்சந்தி : விலை
- என். சொக்கன்

'எண்ணூத்தம்பது ரூபாய் சார்', அவர் முடிவாகச் சொன்னார், 'வெறும் ·பி·ப்டி ருபீஸ்க்குக் கணக்குப் பார்க்காதீங்க சார் ! ·பாரின் துணிமாதிரி, அருமையான சரக்கு !'

நான் அவரை நம்பாமல் பார்க்கிறேன். நம் ஊரில் இதே தொகைக்கு எத்தனை நல்ல சட்டைகள் வாங்கலாம் என்று கணக்கிட்டுப் பார்த்தபோது பெரும் ஆயாசமாயிருக்கிறது.

Shopping Mallஇங்கேயும் அதுபோன்ற நல்ல விலைக் கடைகள் இருக்கும்தான். ஆனால், மின்னல்போல் விரையும் இந்தப் பரபரப்பு தினங்களிடையே, அப்படிப்பட்ட கடைகளைத் தேடிப் பிடிக்க சமயமில்லை. அப்படியே கிடைத்தாலும், ஒரே உபயோகத்தில் கிழிந்துவிடுமோ என்கிற பயம் - அதை 'பயம்' என்று சொல்வதைவிட, கிராமத்திலிருந்தோ, சிறு நகரங்களிலிருந்தோ புலம் பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும், மாநகரங்களின்மீதிருக்கிற பொதுவான சந்தேகம், அல்லது நம்பிக்கையின்மை என்று சொல்லலாம்.

நான் அந்தத் துணியை மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்த்துவிட்டு, மெல்லமாக மேஜைமேல் திருப்பிவைத்தேன், 'ரொம்ப அதிகமா சொல்றீங்க !', என்றேன் பலவீனமாக.

இதற்குமேல் பேசுவதற்கில்லை என்பதுபோல் அந்த கடைக்காரர் என்னைப் பார்த்தார், 'நீயெல்லாம் எங்கே இவ்வளவு பணம் செலவழிக்கப்போகிறாய் ?' என்பதுபோன்ற ஒரு கிண்டல் கலந்த அலட்சியம்.

அப்போது எனக்கு வந்த எரிச்சலுக்கு, பர்ஸிலிருந்த காசையெல்லாம் அந்த ஆளின் முகத்தில் விட்டெறிந்துவிட்டு, அந்தச் சட்டையை வாங்கிக் கிழித்து எறியவேண்டும்போலிருந்தது.

கடைக்காரர்களின்மேல் கோபப்பட்டு என்ன புண்ணியம் ? இதே கடையில், இதே சட்டையை, இன்னும் அதிகத் தொகை கொடுத்து வாங்கிப்போகத் தயாராயிருக்கிற ஊரில் இருந்துகொண்டு, காசுக்குக் கணக்குப் பார்த்தால், தப்பு யார்மீது ?

மௌனமாக அந்தக் கடையிலிருந்து வெளியேறுகிறேன். லேசாக வழுக்கிய தரையைச் சமாளித்து நிமிர்ந்தபோது, பளபளப்பான ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் எப்போதுமான கூட்டம் - என்றேனும் ஒருநாள், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இந்தக் கட்டிடத்துக்கு வந்து பார்த்தால், அப்போதும் இதே அளவு கூட்டம் இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்தது.

உச்சிமுதல், பாதம்வரை நவீன மோஸ்தரில் உடையணிந்த ஆண்களும், பெண்களும், கண்ணாடித் தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருந்த வண்ணமயமான கடைகளினுள் நுழைந்து, வெளியேறிக்கொண்டேயிருந்தார்கள். எல்லோரின் கைகளிலும், கசங்கலில்லாத பிளாஸ்டிக் பைகள், அவற்றில் உடைகளும், பொம்மைகளும், புத்தகங்களும், இன்னும் எனக்கு உபயோகம் புரிந்திராத எண்ணற்ற பொருள்களும்.

செலவழித்துச் சலித்த சிலர், மூலைக் கடைகளின் பெரிய நாற்காலிகளில் சவுகர்யமாக அமர்ந்தபடி, நறுக்கென்ற பிஸ்கெட்களைக் கடித்துக்கொண்டு, அரையடி உயரக் கோப்பைகளில் எதையோ உறிஞ்சிக்கொண்டிருக்க, அத்தனை பரபரப்பினிடையேயும், எஸ்கலேட்டர்களில் ஏறி, இறங்கி விளையாடும் குழந்தைகள்மட்டுமே, ஓரளவு ஆறுதல் அளித்தார்கள்.

அரைவட்டமாக நீண்டு, கட்டிடத்தின் மையத்தில் குறுகும் பாதை. அதன் இருபுறமும் ஜிலீரிடும் இரும்புக் கம்பிகள், அவற்றைப் பிடித்துக்கொண்டு, கீழ்தளத்து நீரூற்றுகளை நோட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள் சிலர். அவர்களோடு சிறிது நேரம் நின்றேன். அதிரும், தணியும், குழையும் இசைக்கேற்ப, விதவிதமான வண்ணங்களில் ஆடி விளையாடும் நீர்ப் பாய்ச்சல், சிறிது நேர சுவாரஸ்யத்துக்குப்பின் அலுத்துவிட்டது. இயந்திரப் படிகளைத் தவிர்த்து, மேல்மாடிக்குப் படியேறத் தொடங்கினேன்.

இரண்டாம் மாடியில் ஒரு பிரம்மாண்டமான காலணிக் கடை. அதன் வாசலில், இரண்டு ஆள் உயரத்துக்கு டெண்டுல்கரும், சேவாகும் முஷ்டி மடக்கி வரவேற்றார்கள். கடையினுள் கிளைகிளையாகப் பரவிய கண்ணாடி மேஜைகளில், விசேஷ விளக்குகளின் ஒளியில் மின்னும் ஷ¤க்கள், நடைப் பழக்கத்துக்கானவை, உடற்பயிற்சிக்கானவை, அலுவலகத்துக்கானவை என்று விதம்விதமாகப் பிரித்துவைக்கப்பட்டிருந்தன.

அந்தக் கடையின்முன் சில விநாடிகள் தயங்கி நின்றேன். பின்னர், அதே தளத்தின் வேறொரு மூலையிலிருந்த ஒரு சிறிய உணவகத்தை நோக்கி அதிவேகமாக நடக்கலானேன். அப்போது, ஒளியிடமிருந்து தப்பி, இருளைத் தேடிச் செல்கிறவனைப்போல் என்னை நினைக்கத்தோன்றியது.

அந்தப் பாதையில், ஒரு ஐஸ் க்ரீம் மெஷின் - மிக்கி மவுஸ் கார்ட்டூனெல்லாம் பதித்து, அதன் அழகுக் கையில் வரிசையான கோன் பிஸ்கோத்துகள் அடுக்கப்பட்டிருந்தன. அதனெதிரே நின்று, வெனிலாவும், சாக்லேட்டும் நெளிந்து, கலந்த ஒரு ஐஸ் க்ரீம் வாங்கிக்கொண்டேன். அங்கே நாற்காலி போட்டு அமர்ந்திருந்த பெண்ணிடம் பத்து ரூபாய் கொடுத்துவிட்டுத் திரும்பியபோது, இந்த ஐஸ் க்ரீமின் நிஜமான விலை என்னவாக இருக்கும் என்கிற யோசனையைத் தவிர்க்கமுடியவில்லை. அதையெண்ணி வெட்கமாகச் சிரிப்பதுமட்டுமே முடிந்தது.

மூன்றாவது தளத்தில் இன்னும் கட்டுமானப் பணிகள் நிறைந்திருக்கவில்லை. அங்கிருந்து லொட்லொட் என்கிற பிடிவாதமான சப்தமும், ·பெவிகால் வாடையும் வீசிக்கொண்டிருக்க, அதைப் பொருட்படுத்தாமல், ஒரு இளைஞர் கூட்டம் படிகளில் அமர்ந்திருந்தது. அவர்களருகே சென்று அமர்ந்துகொண்டேன்.

அந்தப் பையன்களும், பெண்களும் அட்டகாசமான ஆங்கிலத்தில் அளவளாவிக்கொண்டிருக்க, அவர்களிடையே அமர்ந்திருக்கையில், முன்பைவிட அதிகத் தனிமையாக உணர்ந்தேன். கையிலிருந்த ஐஸ் க்ரீமை (இயன்றவரை) சப்தமின்றிச் சாப்பிட்டு முடித்தேன். பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து, உள்ளங்கையில் ஒற்றியபடி எழுந்துகொண்டேன்.

படிகளில் இறங்குகையில், அந்த இளைஞர்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். ஆண் - பெண் வித்தியாசமின்றி, எல்லோரும் ஒரேமாதிரியாக உடையணிந்திருந்த அந்தக் கூட்டம், இன்றைய இளைஞர்களின் நிச்சயமான பிரதிநிதியாகத் தோன்றியது. அவர்கள் அணிந்திருக்கும் சட்டைகளெல்லாம் என்ன விலை இருக்கும் ? எண்ணூற்றைம்பதா ? அல்லது, அதைவிட அதிகமா ?

இந்தச் சங்கடம், எனக்குப் புதிதல்ல. ஏதேனும் வாங்குவதற்காக, ஒவ்வொருமுறை வெளியே கிளம்பும்போதும், கையில் போதுமான அளவு பணம் இருந்தாலும்கூட, அதை வாங்காமலே திரும்பிவிடுகிற அபத்தமான தருணங்கள் அன்றாடம் நிகழ்கின்றன. துணிக் கடைகள், ஹோட்டல்கள், திரையரங்குகள் - எங்கே சென்றாலும் இதே கதைதான், இந்த ஊரிலிருக்கிறவர்கள் எல்லோரும் என்னை மொத்தமாக ஏமாற்றுகிறார்கள் என்று பிடிவாதமாகத் தோன்றிக்கொண்டேயிருக்கிறது - வாழைப்பழத்துக்குக்கூட இரண்டரை ரூபாய் விலை சொல்கிற ஊரில், யாரைத்தான் நம்புவது பேதை நெஞ்சம் ?

நான் ஒருவன்தான் இப்படிச் சிந்திக்கிறேனா என்கிற தாழ்வு மனப்பான்மையும் அடிக்கடி துன்புறுத்துகிறது. கையில் பணமும், அதை விரும்பும்வகையில் செலவழிக்கும் தகுதியும் இருந்தும்கூட, முடிவெட்டுவதில் தொடங்கி, இந்த ஊரில் எல்லாமே அநியாய விலை என்றுதான் தோன்றுகிறது. பர்ஸைத் திறக்கும்போதெல்லாம் பணத்தைக் கடலில் கொட்டிக் கரைப்பதுபோன்ற ஒரு பிம்பம் கண்முன் விரிகிறது.

ஆனால், நான் பயந்து, பின்வாங்குகிற ஒவ்வொரு கட்டடத்தினுள்ளும், கரன்ஸி நோட்டுகளாகவும், கடன் அட்டைகளாகவும் பணத்தைக் கொண்டு கொட்ட மக்கள் தயாராயிருக்கும்போது, என்னுடைய எண்ணங்கள்தான் தவறானவையோ என்றும் தடுமாற்றமாக இருக்கிறது - ஏதோ ஒரு அர்த்தமற்ற முன்முடிவினுள் சிக்கிக்கொண்டு, நியாயமான விஷயங்களைக்கூட நிராகரித்துக்கொண்டிருக்கிறேனோ ?

'ஊமை என்றால் ஒருவகை அமைதி, ஏழை என்றால் அதிலொரு அமைதி', என்று எழுதினார் கண்ணதாசன். இரண்டுமாக இல்லாதபோது, இப்படிதான் குழப்பத்தில் புலம்பிக்கொண்டிருக்கவேண்டும் !


இந்த வார 'பகீர்'


ஆலகாலம்

செந்தமிழ்
சீரழிக்கும்

பைந்தமிழ்
பிச்சையெடுக்கவைக்கும்

வண்டமிழ்
வாழ்வைக் கெடுக்கும்

ஒண்டமிழ்
ஊரூராய் அலையவிடும்

கன்னித்தமிழ்
கதிகலங்கச் செய்யும்

நற்றமிழ்
நாடோடியாக்கும்

இன்பத்தமிழ்
இல்லை இது
இன்னல் தமிழ்

அமுதத் தமிழ்
அல்ல இது.
ஆலகாலம்
போல.

- விக்ரமாதித்யன் (இனிய உதயம் - ஜுலை 2005)


இந்த வாரப் 'பதிவு'

பத்மா அவர்கள் எழுதிய "கல்யாண உற்சவமும் கன்னி பெண்களும்"

http://www.domesticatedonion.net/blog/thenthuli/?item=560

Copyright © 2005 Tamiloviam.com - Authors