தமிழோவியம்
காந்தீய விழுமியங்கள் : விமர்சனங்களும் விளக்கங்களும் - III
- ஜெ. ரஜினி ராம்கி

மத விவகாரங்களில் காந்திஜியின் நிலை எப்போதுமே தர்மசங்கடமாகவே இருந்து வந்திருக்கிறது. மதம் மாறிய இந்துக்களை கட்டாயமாக்கி திரும்பவும் இந்து மதத்திற்கு மாற்றும் ஆரிய சமாஜத்தின் கொள்கையை காந்திஜி விமர்சித்ததால் இஸ்லாமின் ஆதரவாளர் என்கிற முத்திரையும், இந்துவாக பிறந்து இந்துக்களை எதிர்க்கும் முதல் எதிரி என்றெல்லாம் கடுமையான விமர்சனத்தை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், காந்திஜியோ ஆரிய சமாஜிகளின் போதனைகள் உயர்ந்தவையாக இருக்கலாம் ஆனால் அதன் நோக்கத்தை என்னால் குறை சொல்லாமல் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டார். 

'என் மனைவியின் குறைகள் எனக்கு தெரிவதால், நான் அவளை குறைவாக நேசிப்பதில்லை. அவளை விட்டு விலகவுமில்லை. ஆனால், எனது அபிப்பிராயங்களை கைவிடாமல் என்னிடமே வைத்துக் கொள்ளுகிற சுதந்திரத்தை ஆரிய சமாஜிகள் எனக்கு அளிக்கட்டும்' (யங் இந்தியா 19.6.1924)

ஆனால், அதே ஆரிய சமாஜிகளின் சத்தியார்த்த பிரகாசத்தை பற்றி துராணி என்கிற முஸ்லீம் பிரசாரகர் தாறுமாறாக ஒரு புத்தகத்தில் எழுதியபோது காந்திஜி அமைதியாய் இருக்கவில்லை. (யங் இந்தியா 24.3.1927)

'பொறுப்பான லாகூர் தப்ளிக் இலக்கியக் கழகம் இதை அச்சிட்டிருக்கக் கூடாது. தனக்கு சம்பந்தப்பட்டதை பற்றி எழுதுவதை விட்டுவிட்டு அநாவசியமாக இந்துக்களை நிந்திப்பதை ஏற்க முடியாது. இந்தப் புத்தகம் ஆரிய சமாஜிகளை விட ஒவ்வொரு இந்துக்களையும் ஏன் ஒவ்வொரு மக்களையும் புண்படுத்திவிட்டது...முஸ்லீம்கள் உட்பட.'

அப்படியென்னதான் துராணி எழுதிவிட்டார் என்று பார்த்தால் கொஞ்சம் விவகாரம்தான். எல்லா மதங்களுமே இந்து மதத்தை¨ குறைசொல்லதையே பிரச்சாரமான நினைத்த கதை¨யெல்லாம் விவரிக்க வேண்டியிருக்கும். 'நாம் தாய்நாட்டை உலகின் மிகச்சிறந்த நாகரிகமான தேசமாக்க விரும்பினால் இந்து மதத்தின் பழமையான மூட நம்பிக்கைகளை அதனின்று சுத்தமாய் கழுவுவது நம் கடமை. நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் இஸ்லாம் குணப்படுத்தவேண்டும்...' என்கிற ரீதியில் போகிறது அதன் நடை. பிற மதங்களை விமர்சிப்பதையும் மத மாற்றம் செய்வதையும் காந்திஜி கண்டித்திருக்கிறார்.

'ஆதிவாசிகளை முன்னேற்றுவதில் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்களின் உழைப்பும் பணியும் சிறப்பானவை என்றாலும் அவர்களை மதம் மாற்றுவதிலும் இந்தியார்களல்லாதவர்களாக செய்வதிலும்தான் பாதிரியார்களின் உள்நோக்கமாக இருந்து வந்துள்ளது' (ஹரிஜன், 18.1.1942)
 
ஒரு காலத்தில் முஸ்லீம் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரிய நண்பனாக வாழ்த்தப்பட்ட காந்திஜியை பகைவனாக உருதுப் பத்திரிக்கைகளில் சித்திரித்து எழுதிய காலம் பின்னாளில் வந்தது. அகில இந்திய முஸ்லீம் லீக் அமைப்பை முஸ்லீம்களின் அதிகாரமுள்ள ஒரே பிரதிநிதியாக காங்கிரஸ் அங்கீகரிக்க மறுத்த காரணம்தான் பிரச்சினையின் அடிப்படையான சங்கதி. இந்திய யூனியனில் அங்கம் வகிக்க வேண்டியது இந்துக்களா அல்லது முஸ்லீம்களா என்கிற கேள்வி கழுத்தை பிடித்த நேரத்தில் இரு தரப்பினரும் சண்டைபோடாமல் இருந்தால்தான் பிரிட்டிஷாரின் ஆட்சி முடிவுக்கு வரும் என்றெல்லாம் சொல்லி காந்திஜி அமைதிப்படுத்தியதை இந்திய முஸ்லீம் லீக் தவறாக புரிந்து கொண்டது. முஸ்லீம் லீக்கிற்கு ஆதரவான ஒரு ஆங்கில வாரப் பத்திரிக்கை இந்து மதத்தை சாபத்தீ என்று வர்ணித்ததை கண்டு வெகுண்டு முதல் ஆளாக காந்திஜிதான் குரல் கொடுத்தார். 

'முஸ்லீம் லீகின் கொள்கைகளையும் திட்டங்களையும் பிரதிபலிக்கும் பத்திரிக்கைகள், மனிதர்களையும் ஆதார விஷயங்களையும் மதிப்பிடும்போது கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ளும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்' (ஹரிஜன், 8.3.1942)

காந்திஜி அரசியல் தலைவராக கருதப்பட்டாலும் சமூகத்தில் அதிகமாக புழகத்திலிருந்த அடிப்படைப் பிரச்சினைகளை பற்றியே பேசி வந்தவர். பிரட்டிஷாரை எதிர்த்து போரடுவது கூட சுலபம். உள்ளூர் மதவெறி கும்பலை அணுகுவதுதான் ரொம்பவும் கஷ்டம் என்பதை சமயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி வந்தவர். சில சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் அமைதி காத்திருந்தால் காந்திஜியும் விமர்சனங்களை தவிர்த்திருக்க முடியும் என்று இப்போதும் சிலர் சொல்வதுண்டு. ஆனால், அவரது சுபாவத்திற்கு ஒத்து வராத விஷயம் அது.

நாற்பதுகளில் இந்து-முஸ்லீம்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதில் காந்திஜிக்கு ஒரு வித அயர்ச்சி வந்தவிட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால், அதே பிரச்சினையில் காந்திஜி மனம் வெறுத்துப் போனது அதற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது.  (யங் இந்தியா 13.1.1927)

'இந்து-முஸ்லீம் ஒற்றுமை பற்றி நான் இனி பேசப்போவதில்லை. அது மனிதனின் கைகளை மீறி கடவுளின் கைக்கு மாறிவிட்டது. ஆண்டவனின் அற்பபடைப்புகளாகிய நாம் செய்ய வேண்டியதை செய்ய தவறிவிட்டோம். ஒருவரையொருவர் சந்தேகப்பட்டு இந்தியா என்னும் புண்ணிய பூமியை அவமானப்படுத்துகிறோம். இனியாவது நமக்கு அன்பையும் அறிவையும் தருமாறு ஆண்டவனை வேண்டுவோம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors