தமிழோவியம்
காந்தீய விழுமியங்கள் : பால்ய விவாகம்
- ஜெ. ரஜினி ராம்கி

திருமணம் என்கிற ரிஸ்க்கை இந்தகாலத்து இளைஞர்கள் வாழ்க்கையில் ஓரளவு செட்டிலானபிறகே எடுக்க ஆரம்பிக்கிறார்கள். நாற்பது வயதை தொட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கூட பள்ளிக்கு போகும் வயசில்தான் குழந்தை இருந்கிறது. அந்தக்காலத்திலோ நாற்பது வயதிலேயே பேரன் பேத்தியே எடுத்திருப்பார்கள். ஐம்பது வயதை தாண்டி வாழ்வதென்பதை அர்த்தமல்லாத விஷயமாக்கி வைத்திருந்தார்கள். சுதந்திரத்திற்கு பிந்தைய இந்த ஐம்பது வருஷத்தில் சராசரி திருமண வயதுக்கு கிடுகிடு வளர்ச்சிதான்.

'கமலாவின் கல்யாணம்' என்ற பெயரில் கல்கி ஒரு சிறுகதை எழுதியிருப்பார். பன்னிரெண்டே வயது நிரம்பிய பெண்ணிற்கும் ஐம்பத்தைந்து வயதுள்ள கணபதிராம சாஸ்திரிக்கும் கல்யாணம் நடப்பதாய் நிச்சயிக்கப்படுகிறது. கல்யாணத்தை தடுக்க காந்தீயவாதியான கிருஷ்ணய்யர் தலைமையில் ஒரு கூட்டம் வீதியிலிறங்கி 'பால்ய விவாகம் ஒழிக', 'மகாத்மா காந்திஜி' என்று கோஷம் எழுப்பி தொண்டர்கள் சகிதம் மண்டபத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபடும். கிளைமாக்ஸில் கிருஷ்ணய்யர் மணமகனிடம்(?) அமைதிவழியில் புரியும் படி எடுத்துச்சொல்லி கல்யாணத்தை நிறுத்துவதோடு கதை முடியும்.

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பால்ய விவாகம் சாதாரண விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. பால்ய விவாகம் பற்றிய காந்திஜியின் போதனைகள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை சிந்திக்க வைத்து பால்ய விவாகத்திற்காக எதிராக போராடவும் இறங்க வைத்தன. குழந்தை திருமணங்களை சட்டப்படி செல்லாததாக்கப்பட வேண்டும் என்கிற காந்திஜியின் கோரிக்கையே பின்னர் சட்டமானது.

பெற்றோர்களின் கடமை குழந்தைகளை பாதுகாப்பது மட்டும்தான். குழந்தைகளின் சுதந்திரத்தில் தலையிட பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது என்கிறார் காந்திஜி. (ஹே... ஸ்வீட் என்று ஸ்கூல் பசங்களெல்லாம் விசிலடிக்கலாம்!)

'சின்னஞ்சிறுமிகளை கன்னிகாதானம் செய்து கொடுக்க பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது. பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாவலர்களே தவிர, உரிமையாளர்கள் அல்ல. தன் குழந்தையின் சுதந்திரத்தை பேரம் பேசி பண்டமாற்று செய்ய முற்படுவது பாதுகாப்புரிமையை துஷ்பிரயோகம் செய்வதாகும். அப்போது அவர் பாதுகாவலர் என்கிற உரிமைமைய இழந்தவராகிறார்'   (யங் இந்தியா, 11.11.1926)

பால்ய விவாகங்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பது பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதும் ஆண்களின் இச்சைக்குரிய பொருளாக பெண்கள் கருதப்படுவதுதான் காரணம் என்கிறார். பெண்களுக்கு கல்வியின் அவசியம் பற்றி காந்திஜி சொல்லியிருப்பதை தனியே பார்ப்போம். பால்ய விவாகத்திற்கு காரணமாக காந்திஜி சொல்லும் இரண்டாவது விஷயத்தை இப்போதே பார்ப்போம்.

வயதான ஆண், மனைவி இறந்ததும் இளம் மனைவியை தேடுவதும், முதல் மனைவி இருக்கும்போதே இன்னொரு இளம்பெண்ணை திருமணம் செய்வதற்கும் காரணம் ஆணின் எல்லையில்லாத இச்சைதான் காரணம் என்கிறார் காந்திஜி. பெரும்பாலான பால்ய விவாகங்கள் ஆண்களின் இச்சையின் அடிப்படையில் இருப்பதுதான். பெண்ணை தொடர்ந்து போகப்பொருளாகவே ஆண்கள் வைத்துக் கொண்டிருப்பதுதான எல்லாம்
பிரச்சினைக்கு காரணம். சரி, என்னதான் செய்வது? அதற்கு ஏதாவது வழியுண்டா? அதற்கும் காந்திஜி பதில் சொல்கிறார்.

பெண்களின் உணர்வுகளுக்கு ஆண்கள் மதிப்பளிக்க வேண்டிய அவசியம் பற்றி காந்திஜி சொன்னதையெல்லாம் படிக்க பத்து நாள் போதாது. அதே சமயம் பெண்களுக்கும் சில பொறுப்புகள் இருப்பதை யும் காந்திஜி சுட்டிக் காட்ட தவறவில்லை.  (யங் இந்தியா, 21.7.1921)

'ஆணின் போகப்பொருளாக தன்னைத்தானே கருதிக் கொள்வதை பெண் கைவிடவேண்டும். அதற்கான நிவாரணம் ஆண்களை விட பெண்களின் கையிலேதான் உள்ளது. ஆணுடன் சரிநிகரான பங்காளியாக இருக்க வேண்டுமானால் கணவன் உட்பட ஆண்களுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ள மறுத்துவிடவேண்டும்'

Copyright © 2005 Tamiloviam.com - Authors