தமிழோவியம்
பேட்டி : எழுத்தாளர் பிரபஞ்சன் அளித்த பிரத்யேக பேட்டி
- கணேஷ் சந்திரா

எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழோவியத்திற்காக அளித்த பிரத்யேக பேட்டி

கே : தங்களின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு ?

ப : பிறந்து வளர்ந்தது புதுச்சேரி. பள்ளி இறுதிவரை அங்கேதான் படிப்பு. தஞ்சாவூரில் தமிழ் ஆசிரியர் வேலை. அங்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தால் வேறு எங்கும் வேலை செய்யாமல் முழு நேர எழுத்தாளராக பணி செய்ய தொடங்கினேன்.

கே : முழுநேர எழுத்தாளராக இருப்பது திருப்தி தருகிறதா ?

ப : எழுத்தாளராக வாழ்வது திருப்தியாக இருக்கிறது. ஆனால் முழுநேர தமிழ் எழுத்தாளராக, தமிழை மட்டும் நம்பிவாழ முடியாது. நான் என் அப்பாவின் உதவியில் எப்படியோ வாழ்ந்துவிட்டேன். ஆனால் இளைஞர்களுக்கும் / புதிதாக எழுதவருபவர்களுக்கும் என்னுடைய அறிவுரை என்னவென்றால் - முழுநேர எழுத்தாளராக மட்டும் இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றிவிட்டு பிறகு எழுதவேண்டும் என்பதுதான்.

கே : அப்பா கள்ளுக்கடை வைத்திருந்தாராமே? அதைப்பற்றி ?

ப : ஆமாம் அப்பா கள்ளுக்கடை வைத்திருந்தார். ரொம்ப பெரிய அளவிற்கு இருந்தோம். பிறகு நான் எழுத
வந்துவிட்டேன்.

கே : மகாநதி போன்ற ஒரு நாவலை ஏன் பிறகு படைக்கவில்லை? அதில் உள்ள வாழ்க்கை உங்கள்
சொந்தவாழ்க்கையா ?

ப : ஆமாம் அது எங்கள் குடும்பத்தின் பாதிப்பு என்று சொல்லலாம். அதற்கு பிறகு நான் வெவ்வேறு விஷயங்களில் பல நாவல்கள் எழுதியிருக்கிறேன்.

கே : தமிழ் இணையம் பற்றிய தங்களின் கருத்து என்ன ?

ப : தமிழ் இணையம் வந்து வளரவேண்டிய ஒரு முயற்சி. நன்கு வளர்ந்து வருகிறது. காலச்சுவடு, திண்ணை இப்படி நிறைய சொல்லலாம்.

கே : இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்யார் ?

ப : இன்றைய எழுத்தாளர்கள் மிகவும் நன்றாக எழுதுகிறார்கள்.  உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுக்கு
நிகராக இன்றைய இளம் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு பரிபூரணமான
நம்பிக்கை இருக்கிறது.  உதாரணமாக எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன்,
கனிமொழி இப்படிச் சிறந்த கவிஞர்கள், கலைஞர்கள் தமிழில் உருவாகியிருக்கிறார்கள்.

கே : சமீபத்தில் எழுதிய புத்தகம் ?

ப : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுகதைகள் எழுதினேன்.  இப்போது ஒட்டு மொத்த சிறுகதை தொகுப்பு ஒன்றை உருவாக்கி வருகிறேன்.

கே : மானுடம் வெல்லும் தவிர எத்தனை சரித்திர நாவல் எழுதியுள்ளீர்கள் ?

ப : மொத்தம் நான்கு நாவல் எழுதியுள்ளேன். மானுடம் வெல்லும், இன்பக் கேணி, நேசம் மறப்பதில்லை, வானம் வசப்படும்

Copyright © 2005 Tamiloviam.com - Authors