தமிழோவியம்
கவிதை : நிச்சயமற்ற உலகம் ! நிச்சயமறியா மனிதர் !
- சத்தி சக்திதாசன்


நிச்சயமற்றவைகளைத்தேடி ஓயாமல்
நித்தமும் ஓடிடும் இந்த
நித்திய புருஷர்கள் வாழும்
நிதர்சன பூமி

எத்தனை ஆசைகளைச் சுமந்து
எப்படியெல்லாம் விரைந்து
எதை  எதையோ அடையும்
எண்ணத்துடன் தினமும்
எத்தனை பேர் தம்மைத் தாமே
ஏமாற்றும் கோலம்

நிச்சயமற்ற உலகம் ! நிச்சயமறியா மனிதர் !

கன்னத்திலே கண்ணீர் வரைந்த
காய்ந்த கோடுகளுடன்
கனவான எதிர்காலத்தை நோக்கி
காத்திருக்கும் கன்னியரின்
கவலை போக்க வழியிருந்தும்
கல்லான மனம் கொண்டு , எங்கே
கதிவேகத்தில் இந்தப் பய்ணம்

நிச்சயமற்ற உலகம் ! நிச்சயமறியா மனிதர் !

வாழ்வெல்லாம் உழைத்து ஓடாகி
வளமற்ற நிலையில் நிலைத்து
வாடித், தன் தலைமுறை
வறுமைக் கோட்டைத் தாண்டிட
கல்வி தேடிக் கொடுக்க எண்ணிடும்
கலங்கிய ஏழைப் பெற்றார்தம்
கவலையைப் போக்க ஒரு வழி காட்டாத
கல்நெஞ்சச் சமுதாயம் தான் எமைச்சுற்றி

நிச்சயமற்ற உலகம் ! நிச்சயமறியா மனிதர் !

தூய்மை உள்ளத்துடன் உலகில்
துணிவாய் செயலாற்றும்
தானைத் தலைவர்களின்
தலைமைத்துவத்தால் மட்டுமே
தரணியில் மக்கள் துன்பம் வென்று
தடைகளைத் தாண்டுவார்

நிச்சயமற்ற உலகம் ! நிச்சயமறியா மனிதர் !

நிறுத்துங்கள் ஓட்டத்தை
நிதானித்துக் கேளுங்கள்
நிச்சயமற்றவர் பட்டியலில்
நீங்களும் நானும்
நிச்சயம்
நித்தியமான உண்மையை
நிறுத்துங்கள் நெஞ்சத்தில்
நிச்சயமாய் மலரும் ஓர்
நியாயமான சமுதாயம்

 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors