தமிழோவியம்
காந்தீய விழுமியங்கள் : இயந்திரமயமாக்கல்
- ஜெ. ரஜினி ராம்கி

காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு வந்து தஞ்சை தரணியே வறட்சியில் விழுந்த காலம் அது. விவசாய குடும்பங்கள், சுருக்கு கயிற்றுக்கு தலையைக் கொடுக்க ஆரம்பித்திருக்க அரசு ஏகப்பட்ட நிவாரணங்கள் அளிக்க வேண்டிய நிலை. ஒரு பக்கம் ஏரி, குளமெல்லாம் தூர் எடுக்க முடியாமல் புதர் மண்டிக் கிடக்க, தமிழக அரசு ஒரு முடிவுக்கு வந்தது. ஏரி, குளங்களை தூர் எடுக்க டெண்டர் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கூடுதலாக ஒரு விதியையும் சேர்த்தது. ஏரி, குளங்களை தூர் எடுக்க இயந்திரங்களை பயன்படுத்தாமல் மனித ஆற்றலை பயன்படுத்தி வேலையை முடித்தாக§வண்டும் என்பதுதான். எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதற்கான நிதிகளையும் ஒதுக்கி வேலையை உடனே ஆரம்பிக்க சொன்னது. தமிழக அரசின் நோக்கம், விவசாய குடும்பங்களுக்கும் வேலை கொடுப்பது, ஏரி, குளங்களை தூர் எடுக்கும் மராமத்து பணிகளையும் முடுக்கிவிடுவது என ஓரே கல்லில் இரண்டு மாங்காய்.  எந்த மாங்காயும் ஒழுங்காக கீழே விழுவில்லை. 

ஏன் திட்டம் வெற்றி பெறவில்லை என்கிற கேள்விக்கு பதில் தேடி ரொம்பவும் கஷ்டப்படவேண்டியதில்லை. மனிதனுக்கும் மெஷினுக்கும் நடந்த பே¡ராட்டத்தில் மெஷின் ஜெயித்தது. பெரும்பாலான ஒப்பந்தக்காரர்கள் டிராக்டர், கிரேன் உதவியோடு வேலையை ஓரிரு நாளில் முடித்து கொடுத்து விட்டார்கள். மனித ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளாமைக்கு அவர்கள் சொன்ன காரணம். 'ஆளுங்களை வெச்சு வேலை வாங்குனா கட்டுப்படியாதுங்க..!'

இந்தியாவில் இயந்திரங்களின் வருகை பல இந்தியர்களை திண்ணையிலேயே உட்கார வைத்துவிட்டதென்னவோ உண்மைதான். காந்திஜியை பொறுத்தவரை இயந்திரமயமாக்கலை தீவிரமாக எதிர்த்தார் என்று எல்லோரும் சொல்வதுண்டு. இவ்விஷயத்தில் காந்திஜிக்கும் நேருவுக்கும் நடுவே பலத்த வாத பிரதிவாதங்கள் நடந்தாக நிறைய புத்தகங்களில் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், காந்திஜி இயந்திரமயமாக்கலை எதிர்த்ததற்கு முக்கியமான காரணம், நம்முடைய இந்திய தொழில்கள் நசிந்துவிடாமல் இருப்பதற்காகத்தான்.

'இயந்திரத்திற்கு என்று உரிய இடம் உண்டு. தேவையான மானிட உழைப்புக்கு மாற்றாக அதனை அனுமதிக்கவே கூடாது.'  (யங் இந்தியா, 5.11.1925)

இந்தியாவில் அப்போதுதான் விவசாயத்திற்கென்று பல புதிய கருவிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு இயந்திரத்தை நம்பி இந்திய விவசாயம் இருப்பதெல்லாம் காந்திஜிக்கு பிடிக்கவில்லை. விவசாயத்தை இயந்திரக் கருவிகள் ஆக்ரமிக்கும் பட்சத்தில் லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்து வீட்டிலேயே உட்கார்ந்துவிடுவார்கள். விவசாயத்தை தவிர அவர்களுக்கு வேறு ஓன்றும் தெரியாத காரணத்தால் அவர்களது குடும்பமும் நொடிந்துவிடும் என்றெல்லாம் அவர் கவலைப்பட்டார். அதேபோல் கையால் நூற்பதை விட இயந்திரங்களின் மூலம் நூற்பதும் அறிமுகமாகி இருந்த நேரம்.

'இயந்திரங்கள் அவசியமான ஒன்று என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டே போனானல், வேலையற்றோர் நம்மிடையே அதிகமாகிவிடுவர். நாம் சுயசார்புடையவர்களாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நிறையபேர் சோம்பேறிகளாகிவிடுவர். இயந்திரங்கள் அதிகமாக உற்பத்தி செய்துவருவதால் நன்மையை விட தீமைதான் அதிகமாக இருக்கும்' (டுவார்ட்ஸ் நியூ ஹாரிஸன்ஸ்) மக்களின் மனநிலையை புரிந்து வைத்திருக்கும் காந்திஜி, மக்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகி அதனால் வாழ்க்கைமுறையிலும் ஆடம்பரம் அதிகமாகிவிடும் என்று நினைத்து பயப்பட்டார். ஆனால், காந்திஜி ஒட்டுமொத்தமாக எல்லா இயந்திரங்களுக்கும் எதிரானவர் அல்ல. இயந்திரங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கவும் அவர் சொல்லவில்லை. அவர் சொன்னதெல்லாம் அவற்றின் எல்லையை ஒரு வரையறைக்குள் வைக்கவேண்டும் என்பதுதான். மனிதன்தான் இயந்திரத்தை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர எந்நாளும் இயந்திரம் மனிதனை கட்டுப்படுத்தக் கூடாது என்கிற அவரது வாதம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவேண்டிய விஷயம். தவிர்க்க முடியாத நிலையிலும், மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத பட்சத்தில் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு அவர் பச்சைக் கொடி காட்டினார்.

'இயந்திரங்கள் மூலம் இந்தியாவின் ஏழ்மையையும் வேலையின்மையையும் தவிர்க்கமுடியுமானால் அத்தகைய இயந்திரங்களை நான் ஆதரிப்பேன். கைராட்டை கூட ஒரு அருமையான இயந்திரம்தான். கையால் நூற்பதை நான் வலியுறுத்துவதற்கு காரணம் ஏழ்மையை விரட்டி வேலை மற்றும் பணப் புழக்கத்தை சாத்தியப்படுத்துவதற்கான எளிமையான சாதனம் அது.  (யங் இந்தியா 3.11.1921)

'எந்த இயந்திரம் அனைவரின் நலனுக்கும் உகந்ததாக இருக்கின்றதோ அதனை பயன்படுத்துவது நியாயமானதே'   (யங் இந்தியா, 15.4.1926) 

எண்பதுகளின் இறுதிகளில் பள்ளி நாட்களில் கம்ப்யூட்டர்களின் வருகையால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று மனப்பாடம் செய்து ஒப்பித்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் கம்ப்யூட்டரை நம்பி இருக்கும் காலமும் வருமென்பதை காந்திஜி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors