தமிழோவியம்
பெண்ணோவியம் : சமையல் - சாப்பாடு டிப்ஸ்
- மீனா


* இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

* பிரட்டை ஸ்லைஸ் செய்யாமல் வாங்கி நீளவாக்கில் வெட்டவும். அதன்மீது வெண்ணெய் அல்லது ஜாம், சாஸ், சட்னி, கடலை, குருமா என எது வேண்டுமானாலும் தடவி ரோல் பண்ணி வட்டமாகக் கட் பண்ணிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

* தட்டை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.

* பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

* வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

* தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

* கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

* அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

* சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்தால் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

* வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ அதிகமாகிவிட்டால் ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால் சரியாகிவிடும். ரஸ்க் இல்லையென்றால் பிரெட் தூளையும் உபயோகிக்கலாம்.

* கர்ப்பிணி பெண்கள் தினமும் கேழ்வரகில் செய்த உணவுப் பொருளை சாப்பிட வேண்டும். அதில் கால்ஷியம், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது.

* வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

* பாகற்காய், கோவைக்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளை வட்ட வட்டமாக நறுக்கி இரண்டு கரண்டி அரிசி மாவு, ஒரு கரண்டி கடலை மாவு, ஒரு கரண்டி சோள மாவு, உப்பு. மிளகாய்ப் பொடி பெருங்காயப் பொடி ஆகியவற்றுடன் கலந்து (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை) பிசிறி, சிறிது நேரம் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் அருமையான, கரகரப்பான வறுவல் ரெடி. எண்ணெயும் குடிக்காது.

* 2 மாவடு, 1 பத்தை தேங்காய், 2 பச்சை மிளகாய், கொஞ்சம் கொத்தமல்லி, தேவையான உப்புடன் அரைத்து, தயிரில் கலந்து, கடுகு தாளிக்கவும். இந்த மாவடு தயிர் பச்சடி சூப்பர் சுவையாக இருக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors