தமிழோவியம்
தராசு : சினிமா போஸ்டர் ஒட்ட தடை
- கணேஷ் சந்திரா

பெங்களூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அழகுப்படுத்தவும் பெங்களூர் மாநகராட்சியின் முயற்சி செய்து வருகிறது. இதற்கு முழு ஒத்துழைப்பு தரும் வகையில் வரும் நவம்பர் முதல் சினிமா போஸ்டர்களை தெருவெங்கும் ஒட்டாமல் கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் புது வகையாக வினைல் போர்டில் (முக்கிய இடங்களில்) விளம்பரம் செய்ய இருக்கிறது.

திருட்டு வி.சி.டி மற்றும் மெகா சீரியல் மோகத்திலிருந்து மக்களை தியேட்டர் பக்கம் திருப்புவது இந்த போஸ்டர்கள்தான். மாநகரம் முதல் பட்டிதொட்டி வரை மக்களை தன் பக்கம் இழுக்க சினிமா போஸ்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தகத்தின் இந்த முடிவு மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. சினிமாவோடு இதை நிறுத்தாமல் அரசியல் கட்சிகளும் / ஜாதி சங்கங்களும் இதை பின்பற்றினால் இந்த முயற்சி எதிர்பார்த்த பலனை நிச்சயம் தரும். மேலும் போஸ்டர்களோடு நிறுத்தாமல் கட்-அவுட்/ பேனர் களுக்கும் இந்த வழியை செயல்படுத்துதல் மேலும் சிறப்பாக இருக்கும்.

5 ஆண்டுகளுக்கு முன் சென்னை மேயராக திரு. மு.க ஸ்டாலின் இருந்த போது "சிங்கார சென்னை", "எழில் மிகு சென்னை 2000" என பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். திட்டங்கள் தொடங்கியபோது இருந்த வரவேற்பு நாளடைவில் மக்களின் ஆர்வமின்மை மற்றும் ஆட்சி மாற்றம் போன்ற பல சங்கதிகளுக்கு நடுவே காணாமல் போனது.

இது போன்ற நல்ல திட்டங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடைமுறை படுத்துதல் அவசியமானதாகும்.

மீண்டும் தி.மு.க ஆட்சி தமிழகத்தில் இருக்கும் இந்த வேளையில் 'சிங்கார சென்னை' மீண்டும் வருமா ?

பொறுத்திருந்து பார்ப்போம் !

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors