தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : பொதுப்பொட்டல வானலைச் சேவை (GPRS) - 3
- எழில்

பொதுப்பொட்டல வானலைச் சேவை குறித்து இவ்வாரமும் அலசுவோம்.

இச்சேவையைச் செல்பேசியில் ஏற்படுத்திக்கொள்ள செல்பேசியின் செலுத்தி / பெறுனர் (Transmitter/Receiver ) ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டோம். எவ்வகையான மாற்றங்கள் ? இச்சேவை அறிமுகப் படுத்துமுன் இருந்த செல்பேசிகளின் செலுத்தி/பெறுனர், ஒரு நேரத்துண்டில் மட்டுமே இயங்குமாறு வடிவமைக்கப்பட்டவை . ஜி பி ஆர் எஸ் சேவையானது ஒன்றுக்கு மேற்பட்ட நேரத்துண்டுகளில் தகவல் அனுப்ப/பெறும் அடிப்படையில் அமைந்தது , எனவே செல்பேசியின் செலுத்தியும் , பெறுனரும் ஒன்றுக்கு மேற்பட்ட நேரத்துண்டுகளில் இயங்கும் வண்ணம் மாற்றியமைக்கப்படல் வேண்டும் .அதிகபட்சம் எட்டு நேரத்துண்டுகளில் தகவல் அனுப்பவோ பெறப்படவோ வேண்டும். ஆனால் எல்லா நேரத்துண்டுகளிலும் பெற /அனுப்பும் வண்ணம் மாற்றியமைப்பதால் வடிவமைப்பில் சில சிக்கல்கள் தோன்றலாம்.

ஜி பி ஆர் எஸ் சேவை வழங்கும் ஒரு செல்பேசியின் வரைமுறைகளைக் (Specifications) கவனித்தீர்களேயானால் GPRS : 4+ 2 என்றோ 5+3 என்றோ பல்வேறு குறிப்பீடுகளைக் காணலாம் . அதன் பொருள் என்ன? 4+2 எனில் அந்தச் செல்பேசி நான்கு நேரத்துண்டுகளில் தகவல் பெறவும் (Receive) இரண்டு நேரத்துண்டுகளில் தகவல் அனுப்பவும் (Transmit) முடியும். 5+3 எனில் 5 நேரத்துண்டுகளில் ஒரே சமயத்தில் பெறவும் 3 நேரத்துண்டுகளில் அனுப்பவும் முடியும்.சாதாரணமாய் , இணையத்திற்கு நாம் அனுப்பும் தகவல்களை விட இணையத்திலிருந்து பெறும் தகவல்களே அதிகம் . ஆகவே செல்பேசியின் பெறுனர் , செலுத்தியை விட அதிக நேரத்துண்டுகளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் தரவுப்பரிமாற்றமும் (Data) பேச்சுப்பரிமாற்றமும் (Voice) செய்ய முடியுமா? இது, செல்பேசியின் வகையைப்பொறுத்தது. ஜி பி ஆர் எஸ் சேவை வழங்குவதன் அடிப்படையில் செல்பேசிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. வகை A (Class A) : இவ்வகைச் செல்பேசிகளைப்பயன்படுத்தி ஒரே நேரத்தில் பேசவும் இணையத்தில் உலவி, தரவுப்பரிமாற்றமும் செய்ய இயலும். ஆனால் இவ்வகையை நடைமுறைப்படுத்த முயன்றால் செல்பேசியைத் தயாரிப்பதில் சிக்கல்களும், அதிக செலவும் ஏற்படும் . எனவே இவை பரவலாக உபயோகத்தில் இல்லை.

2. வகை B. (Class B): இவ்வகைச் செல்பேசிகளைப் பயன்படுத்தி ஒரு நேரத்தில் பேசவோ அல்லது தரவுப்பரிமாற்றம் செய்யவோ மட்டும் முடியும் . இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய இயலாது. தரவுப் பரிமாற்றம் நிகழ்கையில் அழைப்பு ஏற்பட்டால் என்னவாகும் ? அழைப்பை ஏற்றுக்கொண்டு தகவல் பரிமாற்றத்தினை ஒத்தி வைக்கலாம். அழைப்பு முடிந்ததும் மீண்டும் தரவுப் பரிமாற்றத்தினைத் தொடரலாம். இந்த B வகைச் செல்பேசிகளே சந்தையில் அதிகம் புழங்குகின்றன.

3. வகை C(Class C). இந்த வகைச் செல்பேசிகளைப்பயன்படுத்தி தரவுப்பரிமாற்றம் மட்டும் செய்ய முடியும் . அழைப்பிற்குப் பயன்படுத்த முடியாது. தரவுப்பரிமாற்றத்திற்கு மட்டும் எவரேனும் செல்பேசியைப் பயன்படுத்தப்போகிறார்களா என்ன ? எனவே இவ்வகைச் செல்பேசிகள் உபயோகத்தில் இல்லை.

இச்சேவையைப் பயன்படுத்தி இணைய இணைப்பினை ஏற்படுத்திக்கொண்டவுடன் ஒரு முகவரி (IP address) இந்தச் செல்பேசிக்கு வழங்கப்படும். இம்முகவரியானது ஒவ்வொரு முறை இணையம் இணைக்கும் போதும் மாறிக்கொண்டே இருக்கும், நிரந்தரமானதல்ல (Dynamic). உங்கள் செல்பேசியில் ஜி பி ஆர் எஸ் வசதி இருந்தாலும், இச்சேவையினை உங்களது சேவை வழங்குனரும் ஏற்படுத்தித் தரவேண்டும். ஒவ்வொரு சேவையாளரின் வலையமைப்பிலுள்ள இச்சேவையை ஏற்படுத்த அச்சேவையாளர் தரும் அமைப்புத் தகவல்களை (Settings) உங்கள் செல்பேசியில் உள்ளீடு செய்தல் அவசியம். உங்கள் செல்பேசியில் அமைப்பு அல்லது இணைய வசதியை ஏற்படுத்தி தரும் பட்டியைச் (GPRS settings) சுட்டி இந்தத் தகவல்களை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். இந்த அமைப்புகளில் முக்கியமானது அணுகு புள்ளி ( Access Point Node, APN) எனப்படும் . அதாவது, ஒரு சேவையாளரின் வலையமைப்பிலிருந்து இணையத்திற்கு இணைக்கையில் எதன் மூலம் இணைப்பது (எந்த நுழைவாயில் ) என்பதைக் குறிப்பதே இந்த அணுகு புள்ளியாகும். ஒரே வலையமைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட அணுகு புள்ளிகள் இருக்கலாம்.

170 கிலோபிட்ஸ் வேகம் என்று சொன்னாலும் நடைமுறையில் 50 கிலோபிட்ஸ் வேகம் வரை ஜி பி ஆர் எஸ் சேவை மூலம் பெறலாம். அடிக்கடி பயணம் செய்பவர்கள் இணைய இணைப்பினைச் செல்பேசி மூலம் தங்கள் மடிக்கணினிகளில் ஏற்படுத்திக் கொள்ளலாம். செல்பேசியில் இணைய வேகத்தினை இன்னும் அதிகரிக்க மேலும் சில நுட்பங்கள் உள்ளன. இனி வரும் வாரங்களில் அவற்றினைக் காண்போம்.

சந்தையில் புதுசு

Sony Ericsson W800iஸோனி எரிக்ஸன் சென்ற மாதம் "உலகின் முதல் வாக்மேன் செல்பேசி"யை (Sony Ericsson W800i) சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஸோனியின் பிரபலத் தயாரிப்பான "வாக்மேன்" அடையாளத்துடன் வந்திருக்கும் இச்செல்பேசியில் பாடல்களையும் கேட்க முடியும். 2 கிகாபைட்ஸ் அளவு MP3 பாடல்களைச் சேமித்து வைக்கும் நினைவுக்குச்சி (Memory Stick)யை இச்செல்பேசியில் செலுத்தி பாடல்களைக் கேட்க முடியும். இந்தச் செல்பேசியில் இரண்டு மெகாபிக்ஸெல் கேமெராவும் உள்ளது. வட்டிலிருந்து செல்பேசிக்கு பாடல்களை ஏற்ற ஒரு குறுந்தகடும், நல்ல தரத்தில் இசை கேட்க உதவும் காதுபேசிகளும் ( Earphones) செல்பேசியுடன் தரப்படுகின்றன. விலை சற்று அதிகம் தான். இசையின் தரம் நன்றாகவே உள்ளது, எனினும் ஆப்பிள் அளிக்கும் ஐபாட் (I pod) - இனை மிஞ்சும் அளவுக்கு இல்லை. ஐ-போடில் 60 கிகாபைட்ஸ் வரை பாடல்கள் சேகரித்து வைக்கலாம். என்றாலும் இந்த வாக்மேன் செல்பேசியில் கேமெரா மற்றும் செல்பேசி சேர்ந்து பல்வேறு சேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதால் சந்தையில் சூடாக விறபைனை ஆகிறது. நோக்கியாவும் மோடரோலாவும் தங்களது இசை பேசிகளை விரைவில் வெளியிட இருக்கும் நிலையில் இசைபேசிகள் சந்தையில் முக்கிய இடம் பிடிக்கப்போகின்றன.

Copyright © 2005 Tamiloviam.com - Authors