தமிழோவியம்
திரைவிமர்சனம் : பொன்னியின் செல்வன்
- மீனா

வெளித்தோற்ற அழகை வேண்டி, மனதின் அழகை இழந்து - உற்றார் உறவினர்களை இழந்து வாடும் நிலை ஏற்படவே கூடாது என்பதுதான் பொன்னியின் செல்வனின் ஒன்லைன் கதை.

Ponniyin Selvanஅப்பா இல்லாத ரவிகிருஷ்ணாவிற்கு ஆதரவு அவரது அம்மா ரேவதி, அக்கா தேவதர்ஷிணி, பக்கத்துவீட்டு கோபிகா, ரவியுடன் வேலைபார்க்கும் சீனியரான பிரகாஷ்ராஜ் மற்றும் நண்பர்கள் மட்டுமே. அப்பா இல்லாத குறை தெரியாமல் தன்னுடைய அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கும் அளவிற்கு பொருப்பான ரவி பக்கத்து பிள்ளையார் கோவிலுக்கு தினமும் தேங்காய் உடைப்பதிலிருந்து வேலை இல்லாத தன் நண்பர்களுக்காக பணம் செலவழிப்பதாகட்டும், பிச்சைக்கார பாலாஜிக்கு கேட்காமலேயே தருமம் செய்வதாகட்டும்.. தன் மேல் அன்பு செலுத்துபவர்களுக்காக தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகளைச் செய்து வருகிறார்.

சிறு வயதில் ஏற்பட்ட விபத்தால் முகத்தில் ஒருபக்கம் வெந்து விட, கோரமான தழும்புகளுடன் உலாவும் ரவியை பலரும் பலவிதத்தில் கிண்டலும் கேலியும் செய்ய, நண்பர்களின் தூண்டுதலால் ஒரு டாக்டரைச் சென்று பார்க்கிறார். ரவியின் முகத்தில் ஆபரேஷன் செய்ய ஒன்னரை லட்ச ரூபாய் செலவாகும் என்று டாக்டர் கூறுகிறார். இளம் வயது முதல் முகத்திலுள்ள தழும்பால் தான் பட்ட அவமானங்களை போக்க எப்பாடுபட்டாவது தான் நிச்சயம் ஆபரேஷன் செய்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்கிறார் ரவி. அதற்காக பணம் சேர்க்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபடுகிறார். விளைவு பிள்ளையாருக்கு தேங்காய் கட்- பிச்சைக்கார பாலாஜிக்கு பிச்சை கட் - நண்பர்களுக்கு டீ காசு கட்- அக்கா உறவினருக்கு சீர் செய்வது கட் என்று ஏகப்பட்ட கட்கள். மேலும் பார்ட்டைம் வேலை வேறு பார்பதால் ரவியுடன் அம்மா ரேவதி பேசுவதே அரிதாகிறது.

மகனுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்தால் நிலைமை சரியாகிவிடும் என்று எண்ணி ரேவதி பக்கத்து வீட்டு கோபிகாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதமா? என்று யதார்த்தமாக ரவியைக் கேட்கப் போக அம்மாவிற்கும் மகனுக்கும் இடையே பெரும் சண்டை ஏற்படுகிறது. இதன் விளைவாக ரேவதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கும்போதுதான் அவருக்கு இதய நோய் இருப்பது தெரியவருகிறது. ரேவதியின் உயிரைக் காக்க உடனடியாக அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட அம்மாவின் உயிரைக் காக்க ரவி என்ன செய்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

முகவிகாரமுள்ள பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் ரவி. அவருடைய பேச்சு, எல்லோரிடமும் எரிந்து விழும் தன்மை என எதுவுமே நடிப்பில்லை - எல்லாம் நிஜம் என்ற தோற்றம் ஏற்படும் அளவிற்கு மிகத் தத்ரூபமான நடிப்பு. தன் முகத்தோற்றத்தால் பெரும்பான்மையான இடங்களில் அவமானப்பட்டு தலைகுனிவதும், அதற்கு காரணமான தன் முகத்தைச் சீராக்கியே தீருவது என்ற ரவியின் வெறியும் நிஜமாகவே அப்படி ஒரு தலைகுனிவைச் சந்தித்தவர்களால் தான் புரிந்துகொள்ள முடியும். அதிலும் தன்னை ஒரு அழகான இளைஞனாக வரைந்து கொடுக்கும்படி ரவி ஓவியர் தலைவாசல் விஜயிடம் கேட்பதும், வரைந்த தன் ஓவியங்களை பிரமிப்புடன் பார்ப்பதும் - ஒரு சராசரி இளைஞனின் மன உணர்வுகளை அருமையாக காட்டியுள்ளார்.

ரவியின் உண்மையான நலனில் அக்கரையுள்ள தோழியாக கோபிகா. பாந்தமான நடிப்பு. அம்மாவாக ரேவதி. நல்ல நடிப்பு என்றாலும் ரேவதியால் இதை விட நிச்சயம் சிறப்பாக செய்திருக்க முடியும். இயக்குனர் அதை தவறவிட்டுவிட்டார். மேலும் ரவியின் சீனியராக வரும் பிரகாஷ்ராஜ். அசத்தலாக தத்துவங்களைக் கொட்டுகிறார். இதைத் தவிர ரவியின் நண்பர்களாக வரும் அந்த இருவரும் தங்கள் பங்கிற்கு இயக்குனர் சொன்னதைச் சரியாக செய்திருக்கிறார்கள்.

வித்யாசாகரின் இசை ஒக்கே. வித்தியாசமான கதையை தைரியமாக படமாக்க முன்வந்ததற்கு, முகத்தில் தழும்பு என்றாலே அசிங்கமாக எதையோ காட்டாமல் கொஞ்சம் நாகரீகமாகக் காட்டியிருப்பதற்கு, ரொம்பவும் மிகைப்படுத்தாமல் குறையுள்ள ஒரு இளைஞனின் மனநிலையைக் காட்டியிருப்பதற்கு, சுயநலமா அல்லது தன் சொந்தங்களா என்ற மனப்போராட்டத்தை அருமையாக காட்டியிருப்பதற்கு என்று பல காரணங்களுக்காக இயக்குனர் ராதாமோகனுக்கு சபாஷ்.

பொன்னியின் செல்வன் - உண்மையிலேயே ஒரு வித்தியாசமான பார்க்கவேண்டிய படம் தான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors