தமிழோவியம்
திரைவிமர்சனம் : அழகிய தீயே
- மீனா

Prassana , Navya nayarசினிமா மூலம் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே செலவழிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மிகச் சிலரில் ஒருவர் பிரகாஷ்ராஜ். வித்தியாசமான பல படங்களைத் தயாரித்த அவர் இம்முறையும் வித்தியாசமான கதையைத் தான் தேர்வு செய்துள்ளார். வழக்கமான சினிமா மசாலாக்கள் எதுவுமில்லாமல், எந்த ஒரு பெரிய நடிகர்களும் இல்லாமல் நல்ல கதை மற்றும் இயக்குனரை மட்டுமே நம்பி படம் தயாரித்து, அதில் வெற்றியும் பெற்றுளார்.

கதையே வித்தியாசமாக ஆரம்பிக்கிறது. தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் தேவதர்ஷிணியைத் தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க நினைக்கிறார் ஹீரோ பிசன்னாவின் நண்பர். அப்போது தனது நண்பர்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

சினிமா ஆசையால் ஆளுக்கு ஒரு திக்கிலிருந்து ஓடி வந்த பிரசன்னா மற்றும் 3 பேர்கள் நண்பர்களாகிறார்கள். இதில் ஒருவர் ஹீரோவாக நினைக்கிறார். மற்ற மூவரும் உதவி இயக்குனர்களாக இருக்கின்றனர். இந்த 4வர் கூட்டணியில் சேரும் 5 வது நபர் தான் கல்யாண மாப்பிள்ளை. அவர் மட்டும் இவர்களைப் போல சினிமா மீது ஆசைப் படாமல் ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பெரிய தொழிலதிபர் மற்றும் தாதாவான பிரமிட் நடராஜனின் ஒரே மகள் நவ்யா நாயர். தன் தந்தை தனக்குச் செய்து வைக்கப்போகும் கட்டாயக் கல்யாணத்திலிருந்து தன்னைக் காப்பாற்ற பிரசன்னாவின் நண்பர் மூலமாக பிரசன்னாவின் உதவியைக் கேட்கிறார் நவ்யா.

நவ்யாவிற்காக பிரமிட் பார்த்திருக்கும் மாப்பிள்ளை தான் பிரகாஷ்ராஜ். கல்யாணத்தை நிறுத்த வேறு வழியேதும் தோன்றாமல் பிரகாஷ்ராஜிடம் தானும் நவ்யாவும் காதலர்கள் என்று பொய் சொல்லுகிறார் பிரசன்னா. முதலில் கோபப்படும் பிரகாஷ்ராஜ், பிறகு நவ்யாவிற்கும் பிரசன்னாவிற்கும் கல்ய¡ணமே செய்து வைத்துவிடுகிறார். கல்யாணத்திற்கு மறுத்தால் எங்கே தன் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயே பிரசன்னாவைத் திருமணம் செய்துகொள்ளுகிறார் நவ்யா. என்னதான் கல்யாணம் ஆனாலும் நாம் இருவரும் நண்பர்கள் தான். கொஞ்ச காலத்தில் அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு போய்விடவேண்டும் என்ற ஜென்டில்மேன் ஒப்பந்தப்படி வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். முதலில் எலியும் பூனையுமாய் இருக்கும் இருவரும் காலப்போக்கில் மிகவும் நல்ல நண்பர்களாகிவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் நவ்யாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் பிரசன்னா.

நல்ல வேலை கிடைப்பதே தனது லட்சியம் என்று வாழும் நவ்யாவும், சினிமா படம் ஒன்றை இயக்க வேண்டும் என்பதையே தனது லட்சியமாகக் ¦காண்டு வாழும் பிரசன்னாவும் ஒரே நேரத்தில் தங்கள் லட்சியத்தை அடைகிறார்கள். இருவரும் பிரியும் வேளை நெருங்குகிறது. தனது காதலை நவ்யாவிடம் கூறினாரா? பொய் கல்யாணம் செய்து கொண்டவர்கள் நிஜக் கல்யாணம் செய்து கொள்கிறார்களா? என்பதே மீதிக் கதை.

தமிழ் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு நல்ல ஹீரோ பிரசன்னா. சினிமா மேல் அளவிலாத காதலுடன் - அதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிற ஒரு இளைஞன். அப்பாவித் தனமும் அருமையான நடிப்பும் அனாயாசமாக வருகிறது. பிரகாஷ்ராஜிடம் பேசும் போது தனது சினிமாக்காதலை நிஜக் காதல் போலச் சொல்வதில் அபாரமாக நடித்திருக்கிறார். நடுநடுவே தனது அப்பாவித்தனமான பேச்சிலேயே நல்ல காமெடி வேறு செய்கிறார். அருமை பிரசன்னா.

மலையாளக் கரையோரத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் இன்னொரு ஹீரோயின். அப்பாவிடம் பயந்து சாவதில் தொடங்கி, பிடிக்காத கல்யாணத்தை நிறுத்தத் தவிக்கிறாரே ஒரு தவிப்பு. அதுவே இவருக்கு ஓரளவு நடிக்க வருகிறது என்பதற்கான சாட்சி.

கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவான பாத்திரம் பிரகாஷ்ராஜிற்கு. முதலில் பிரசன்னாவின் மீது கண்மண் தெரியாமல் கோபப்படும் பிரகாஷ்ராஜ், சில நாட்களிலேயே அவரிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியும், பிரசன்னா-நவ்யாவின் காதல் கதையைக் கேட்டு ரசிக்கும் காட்சியும் சூப்பர்.

பிரசன்னாவின் நண்பர்களாக வரும் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ஆனாலும் கதையில் கொஞ்சம் சோகம் வேண்டும் என்று நினைத்து, 4 நண்பர்களில் ஒருவரை அனியாயமாகச் சாகடித்துவிடுகிறார் இயக்குனர். நகைச்சுவைக்காக தனியாக ஒரு ஆள் போடாமல் படத்தில் அ¨னவருமே காமெடி சீன்களில் நன்றாக கலக்கியிருக்கிறார்கள்.

ஆபாசம் இல்லாத, அமைதியான பாடல் காட்சிகள் - பாடல் வரிகள், நறுக்குத் தெரித்தாற்போல வசனங்கள். இயக்குனர் ராதா மோகனுக்கு ஒரு பெரிய சபாஷ். ஒளிப்பதிவு மற்றும் இசை அருமை. மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான - நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors