தமிழோவியம்
திரைவிமர்சனம் : ஆரியா
- மீனா

சென்னையைச் சேர்ந்த தாதா பிரகாஷ்ராஜ். அவரது செல்லத்தங்கை பாவனா. தன் தங்கை எது கேட்டாலும் வாங்கித் தருவார் பிரகாஷ்ராஜ். மெடிக்கல் காலேஜில் படிக்க சீட் கேட்டால் அந்தக் காலேஜையே வாங்கி தருகிற அளவுக்கு பாசம். மெடிக்கல் காலேஜில் படிக்கும் பாவனா தன் அண்ணனின் தைரியத்தில் ஆடாத ஆட்டம் எல்லாம் போடுகிறார். சண்டிராணியாகத் திரியும் பாவனாவை அடக்க யாருமே இல்லையா என்று சக மாணவர்களும் ஆசிரியர்களும் புலம்பும்போது வந்து சேர்கிறார் ஆரியா(மாதவன்). தன்னைக் கண்டு பயப்படாமல் எதிர்க்கும் மாதவனைப் பழிவாங்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார் பாவனா. தன் உருட்டல் மிரட்டல் எல்லாம் மாதவனிடம் பலிக்காமல் போக - முடிவில் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் "உன்மேல் எனக்கு காதல் வரவில்லை.." என்று சொல்லி பாவனாவின் காதலை மறுக்கிறார் மாதவன்.

Bhavanaதன் அண்ணனிடம் சொல்லி எப்படி எப்படியெல்லாமோ மாதவனை மடக்க நினைக்கிற பாவனாவுக்கு தோல்விதான் மிஞ்சுகிறது. ரவுடி வீட்டில் பெண்ணெடுப்பதா என்று ஒதுங்கி போகும் அவரையே ரவுடியாக்கிவிட்டால் என்ன என்று அண்ணன் பிரகாஷ்ராஜுக்கு யோசனை தருகிறார் பாவனா. தங்கையின் யோசனையை ஏற்று பிரகாஷ்ராஜ் மாதவனை ரவுடியாக்க முயற்சி செய்கிறார். மாதவன் ரவுடியானாரா பாவனாவின் காதலை ஏற்றாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ரன் - தம்பி படங்களுக்குப் பிறகு மாதவன் முழுநேர ஆக்ஷன் ஹீரோவாக இதில் வருகிறார். குட்மார்னிங் சொல்ல சொன்ன பாவனாவுக்கு, அவர் குட்மார்னிங் சொல்லும் விதம் அசத்தல். பாவனாவை அவர் வெறுப்பேற்றும் கொஞ்சம் கூட சிரிக்காமல் கடுகடு முகத்துடனேயே படம் முழுக்க வருகிறார் பாவனா. கிட்டத்தட்ட மன்னன் விஜயசாந்தி, திமிர் ஸ்ரேயா போன்ற கதாபாத்திரம் பாவனாவிற்கு. என்ன அகங்காரம் இந்தப்பெண்ணிற்கு என்று நினைக்கும் போது " நான் அப்பா அம்மாவோடு இருந்திருந்தா இப்படி இருந்திருக்க மாட்டேன். என்னை தூக்கி வளர்த்தது ஒரு ரவுடி. என்னை ஸ்கூலுக்கு அழைச்சுட்டு போனது ஒரு ரவுடி, என்னை சுற்றி ரவுடிகள் மட்டுமே இருக்கும்போது நான் மட்டும் எப்படி நல்லவளா இருக்க முடியும்?" என்று அவர் கேட்கும் கேள்வி சூப்பர்...

கில்லியில் வந்தது போல இதிலும் காமெடி கலந்த வில்லத்தனத்தில் ஜொலிக்கிறார் பிரகாஷ்ராஜ்.  தன் தங்கை காதலிக்கிறாள் -  அவளுக்குப் பிடித்துவிட்டது என்பதற்காக மாதவனிடம் அவர் கெஞ்சி குழைகிற காட்சி அருமை.

Madhavan, Bhavanaபிச்சைக்காரனாக வந்து மக்களுக்காக அடி வாங்குவதைப் போல வாங்கி கவுன்சிலராக ப்ரமோஷன் ஆகும் வடிவேலு செய்யும் காமெடி களை கட்டுகிறது. அதிலும் மாதவனால் அவர் மக்களிடம் மொத்துபடும் காட்சி சூப்பரோ சூப்பர்.

மணிசர்மாவின் இசையில் பாடல்கள் ஓக்கே.. வழக்கமான தாதாயிசக் கதையில் தாதாவின் தங்கையும் தாதா.. நல்லவனை கெட்டவனாக பார்க்க விரும்பும் வித்தியாசமான காதலி.. என பல வித்தியாசங்களைக் காட்டிய இயக்குனர் பாலசேகரனுக்கு பாராட்டுகள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors