தமிழோவியம்
சமைத்து அசத்தலாம் : குடமிளகாய் சமையல் பகுதி 1
- காயத்ரி

Bell Pepper


குடமிளகாய் சாம்பார்

தேவையான பொருட்கள்

குடமிளகாய்-1
கேரட்-1
தக்காளி-1
துவரம்பருப்பு-1 கப்
சாம்பார்பொடி-2 டீஸ்பூன்
காயம்-சிறிதளவு
புளி-எலுமிச்சை அளவு
எண்ணெய்-1 டீஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 இணுக்கு

செய்முறை

1.காய்கறிகளை அலம்பி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் விட்டு குடமிளகாய்,தக்காளி,கேரட் போன்ற காய்கறிகளைச் சேர்த்து மூடி வைத்து வதக்கவும்.
3.1 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு,மஞ்சள் பொடி,சாம்பார் பொடி போட்டு வேக விடவும்.
4.ஓரளவு கொதித்தவுடன் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
5.காய்கறிகள் வெந்தவுடன் வெந்த பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும்.
6.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளிசம் செய்ய சுவையான குடமிளகாய் சாம்பார் தயார்.

கூடுதல் குறிப்புகள்

1.மற்ற காய்கறிகளை விடக் குடமிளகாய் விரைவில் வேகக்கூடியது என்பதால் அவசரமாக சமையல் செய்யும் போது இந்த சாம்பாரைச் செய்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
2.புளித்தண்ணீரை காய்கறிகளுடன் ஆரம்பத்திலே சேர்த்தும் சாம்பார் செய்யலாம். பொதுவாக புளித்தண்ணீரிலும் உப்பு கலந்த நீரிலும் காய்கறிகள் வேக நேரம் எடுக்கும். எனவே தான் நீர் விட்டு காய் வெந்த பிறகு புளி நீரைச் சேர்க்க நேர விரயம் தவிர்க்கப்படும்.
3.குடமிளகாயுடன் வெங்காயம் முருங்கைக்காய் சேர்த்தும் பூசணிக்காய் சேர்த்தும் சாம்பார் செய்யலாம்.
4.சாதத்துடன் மட்டுமில்லாமல் இட்லி,தோசை,பொங்கல் போன்ற டிபன் வகைகளுக்கு உற்ற குழம்பு.


குடமிளகாய் தயிர்ப்பச்சடி

தேவையான பொருட்கள்

குடமிளகாய்-1
தயிர்-4 டீஸ்பூன்
எண்ணெய்-1 டீஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 இணுக்கு

செய்முறை

1.குடமிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலையைத் தாளிசம் செய்து கொண்டு நறுக்கிய குடமிளகாயைச் சேர்த்து உப்பு,மஞ்சள்பொடி போட்டு வதக்கவும்.
3.குடமிளகாய் நன்கு வதங்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் ஆறவிட்டு, தயிரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

கூடுதல் குறிப்புகள்

1.சுவையான சத்து மிகுந்த குடமிளகாய்ப் பச்சடியைப் பத்தே நிமிடங்களில் செய்து விடலாம்.
2.ஒரே மாதிரி பச்சடி சேர்த்து அலுத்தவர்களுக்கு இது வித்தியாசமான ருசியைத் தரும்.


டிப்ஸ்

1.குடமிளகாயில் விட்டமின் சி முழுமையாக இருப்பதால் உணவில் குடமிளகாயை அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

2.பச்சைக் குடமிளகாயை விட சிவப்பு, மஞ்சள் நிறக் குடமிளகாய்கள் விலை அதிகம் என்றாலும் அவற்றில் தான் அதிகச்சத்துக்களும் இருக்கின்றன.

3.குடமிளகாய் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கும், சர்க்கரையால் அவஸ்தைப்படுபவர்களுக்கும் ஏற்ற சிறந்த அருமருந்து குடமிளகாய்.

4.கர்ப்பிணி பெண்களில் சிலருக்கு கர்ப்பகால 5,6ஆம் மாதங்களில் ஜி.டி எனப்படும் ஜெஸ்டெஷனல் டயபடீஸ் வருகிறது. ஆரம்ப நிலை என்றால் மாத்திரைகளும் அடுத்த நிலை என்றால் அக்யுசெக்கைப் பயன்படுத்தி உணவு உண்ட பிறகு சுயபரிசோதனை செய்து கொள்வதும் முற்றிய நிலை என்றால் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதும் நிகழ்கிறது. அதற்குத் தீர்வாக அவர்கள் தினமும் குடமிளகாயைத் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். எந்தச் சக்கரையும் அண்டாது. இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நிலையும் வராது.

5.குடமிளகாயைப் பிடிக்காதவர்கள் கூட அதன் மருத்துவ குணங்களை மனதில் கொண்டு உணவில் சேர்த்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors