தமிழோவியம்
இந்து மதம் என்ன சொல்கிறது ? : நாம் செய்யும் காரியங்கள் யாவற்றுக்கும் யார் பொறுப்பு?
-

நம்மைப் படைத்தவர் கடவுள். 'அவரன்றி ஓர் அணுவும் அசையாது' என்று கூறுகிறோம். அப்படியானால் நாம் செய்யும் காரியங்கள் யாவற்றுக்கும் பொறுப்பு அவர்தானே ? பாவ காரியங்களுக்கு நாம் பொறுப்பாளி என்று சொல்லுவது எப்படிப் பொருந்தும் ?


Saint Ramakrishnaஒரு தோட்டக்காரன் தனது கறிகாய்த் தோட்டத்தைப் பத்திரமாகக் காப்பாற்றி வந்தான். ஒருநாள் அதில் ஒரு பசுமாடு புகுந்து மேயத் தொடங்கிற்று. தோட்டக்காரன் கழியால் பசுமாட்டை அடிக்க அதன் கால் ஒடிந்து போய்விட்டது. பசுமாட்டின் சொந்தக்காரன் பஞ்சாயத்துக்குப் போனான். ப்சுமாட்டை விரட்டி இருக்க வேண்டுமே தவிர காலை ஒடித்திருக்கக் கூடாது என்று முடிவு செய்து, பஞ்சாயத்தார், தோட்டக்காரனுக்கு அபராதம் விதித்தார்கள்.

"அதற்கு நான் காரணமில்லை. கடவுள் என்னுடைய காரியத்தை அப்படிச் செய்யும்படி தூண்டிவிட்டார். நான் ஒரு கருவிதான். எனக்குத் தண்டனை கொடுப்பதானால் இந்தக் கழிக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் !" என்று வாதம் செய்தான் தோட்டக்காரன்.

அந்த கூட்டத்தில் ஒரு துறவி இருந்தார். அவர் தோட்டக்காரனிடம், "இந்தத் தோட்டம் யாருடையது ?" என்று கேட்டார். "என்னுடையது" என்று பதில் சொன்னான். "பாத்திகளை அழகாக அமைத்துத் தண்ணீர் பாய்ச்ச வசதியாகச் செய்து முடித்திருக்கிறார்களே? அது யார் செய்த காரியம் ?" என்று கேட்டார். "நான் செய்ததுதான். என் தந்தை எனக்குத் தோட்டக்கலையைக் கற்றுக் கொடுத்தார்", என்று பெருமையுடன் பதில் சொன்னான். "காய்கறி பிரமாதமாக விளைந்திருக்கிறதே ! இதற்கு யார் காரணம் ?" என்று கேட்டார். "நான் தான். என்னுடைய விரல்களுக்கு அப்படிப் பசுமை கொழிக்கச் செய்யும் ராசி உண்டு" என்று சொன்னான் அவன்.

யோகியோ, அவனைப் பார்த்து "ஐயா ! தோட்டம் உம்முடையது என்கிறீர். அதை அமைத்தவிதம் உம்முடைய சாமர்த்தியம் என்கிறீர். நல்ல விளைச்சலுக்கு உம்முடைய ராசியும், திறமையும் என்கிறீர்.. மாட்டை விரட்டி அடித்தபோது, கால் ஒடிந்ததற்கு மட்டும் கடவுள்தான் காரணம் என்கிறீர் ? இது எப்படி நியாயம் ?"

தோட்டக்காரன் பதில் பேசாமல் அபராதத்தை ஏற்றுக் கொண்டான்.

- பகவான் ராமகிருஷ்ணரின் 'உபதேச மொழிகள்' நூலிலிருந்து.

Copyright © 2005 Tamiloviam.com - Authors