தமிழோவியம்
திரைவிமர்சனம் : தொட்டி ஜெயா
- மீனா

ஒரு தாதாவின் காதல் - அதை எதிர்க்கும் பெண்ணின் தகப்பனான பெரிய தாதாவின் குறிக்கீடு - எதிர்ப்பை மீறி இணையும் காதல் என்ற வழக்கமான பழைய கதை என்றாலும் சுறுசுறுப்பான திரைக்கதையால் படத்தை விறுவிறுக்கச் செய்த்ருக்கிறார் இயக்குனர்.

Simbu - Gopika - Thotti-Jayaசிறு வயதிலேயே அனாதையான தொட்டி ஜெயா, பிழைப்பிற்காக அடிதடியைத் தேர்ந்தெடுக்கிறார். இளம் வயதிலேயே சிம்புவைத் தன்னுடைய கூட்டத்தில் அடியாளாக சேர்த்துக்கொள்கிறார் சென்னையின் பிரபல தாதா சீனா தானா. ஒரு பிரச்சனையில் சிம்புவை சென்னை போலிஸ் வலைவீசித் தேட, கல்கத்தாவிற்கு செல்கிறார். அங்கே இக்கட்டான சூழ்நிலையில் சிக்கும் கோபிகாவை சிம்பு காப்பாற்ற - சிம்புவின் கண்ணியமான நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு கோபிகா சிம்புவைக் காதலிக்க, முதலில் கோபிகாவின் காதலை மறுக்கும் சிம்பு பிறகு கோபிகாவின் காதலை ஏற்க... கதையின் இடைவேளை...

இந்நிலையில் சிம்புவைக் கொல்லும் படி சீனாதானா தன் அடியாட்களுக்கு கட்டளையிடுகிறார். எதற்காக என்று ரொம்பவும் குழப்பாமல் சீனாதானாவின் முதல் மனைவியின் மகள் தான் கோபிகா என்ற உண்மை வெளிப்படுகிறது. கோபிகா சிம்பு காதலை முறியடிக்க சகலவிதமான முயற்சிகளையும் சீனாதானா செய்ய - அவைகளையெல்லாம் முறியடித்து உண்மைக் காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

பஞ்ச் டயலாக்காலேயே முக்கால் படத்தை ஓட்டும் சிம்புவா என்று வியக்க வைக்கிறார் இந்தப்படத்தில் சிம்பு. படத்தில் மொத்தமாக சிம்பு எத்தனை வரி வசனம் பேசுகிறார் என்று போட்டியே வைக்கலாம் என்ற அளவிற்கு மிக அளவான வசனமே (கடைசிக் காட்சிகளில் வெட்டுபட்டுக்கொண்டே அவர் பேசுவதை மன்னிக்கலாம்).. வார்த்தைகளால் சொல்ல முடியாததை தன் நடிப்பாலும், ஆக்ரோஷ அடிதடியாலும் சொல்லியிருக்கிறார்.  சிம்புவின் புதுப்பரிமாணம் நிச்சயம் ரசிக்க வைக்கிறது.

கோபிகா தன்னுடைய பாந்தமான நடிப்பால் அசத்தியிருக்கிறார். காதல், பயம், பதபதைப்பு என்று உணர்சிக் குவியலாக உலா வருகிரார். ஆனால் பாவம் படம் முழுவதும் கோபிகாவை ஓடவிட்டிருக்கிறார் இயக்குனர்.

வில்லன் சீனாதானாவாக வரும் புதுமுகம் பிரதீப் ஏதோ பெரிதாகச் செய்யப்போகிறார் என்று நினைத்தால் தொண்டை கிழியக் கத்துவதைத் தவிர உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. இவருக்காக எதற்கு கமிஷ்னர், கலெக்டர் உள்பட ஊரில் உள்ள தாதாக்கள் அனைவரும் பயந்து சாகிறார்கள் என்பதை விளக்க இயக்குனர் தவறியிருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை ஓக்கே. பாதிப்படத்தை இருட்டிலேயே படம் பிடித்திருந்தாலும் தெளிவான ஒளிப்பதிவிற்காக ஒளிப்பதிவாளர் ராஜ்சேகருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். மேலும் சிம்புவின் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளுக்கு காரணமான சண்டை இயக்குனர் சிவாவிற்கும் பாராட்டுகள்.

முதல்பாதிப்படம் எப்படி போனது என்றே தெரியாத அளவிற்கு விறுவிறுப்பாக செல்லும் கதை, இரண்டாம் பாதியில் சற்று தொய்கிறது. படத்தின் முடிவில் சிம்பு நீதி நேர்மை நியாயம் என்று வசனம் பேசுவார் என்று எதிர்பார்த்தால் அப்படி எல்லாம் செய்யாமல் நல்ல பிள்ளையாக ஹனிபா சொல்வதைக் கேட்கிறார். அந்த மட்டும் இயக்குனர் துரை தப்பித்தார். இல்லையென்றால் கிளைமாக்ஸ் ரொம்பவும் தொய்ந்திருக்கும்.

மொத்ததில் தொட்டி ஜெயா - வழக்கமான சிம்பு படம் இல்லை. வித்தியாசமான சிம்புவை நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors