தமிழோவியம்
கவிதை : ஏன் பிரிந்தோம் ?
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

   எத்தனை
   முழுநிலா இரவுகளில்
   நாம் இருவராக
   வந்த போது
   நம்மைத்
   தழுவித் திளைத்திருக்கிறது
   கடற் காற்று!
   வரவேற்றுப் பூரித்திருக்கின்றன
   கடல் அலைகள்!
   வந்திருந்த
   அனைவரின் பாதங்களையும்
   கழுவி முத்தமிட்டு
   மகிழ்ந்திருக்கிறது
   கடல் நீர்!

   இன்று
   தனிமையில்
   கண்டதாற் போலும்
   எனை சுட்டுச் செல்கிறது
   கடற் காற்று!
   ஆர்ப்பறிக்கின்றன
   கடல் அலைகள்!
   நுரை நுரையாய்
   காரித்துப்பிச் செல்கிறது
   கடல் நீர்!

  நம்மில்
  யார் யாரைப் பிரிந்தோம்?
  ஏன் பிரிந்தோம்?
  எதற்குப் பிரிந்தோம்?
  விடை நமக்கே
  புலப்படாத போது
  பாவம் அவைகள்!
  வேறென்ன செய்யும்?

Copyright © 2005 Tamiloviam.com - Authors