தமிழோவியம்
திரைவிமர்சனம் : ஒரு கல்லூரியின் கதை
- மீனா

தமிழ் திரையுலகில் கொஞ்ச நாட்களாக காணாமல் போயிருந்த சொல்லாத காதல் - மனநோயாளி ஹீரோ இதுதான் ஒரு கல்லூரியின் கதையின் ஒன்லைன் கதை.

Arya Soninaகல்லூரிக் காலம் முடிந்து 5 வருடங்கள் கழித்து நண்பர்கள் அனைவரும் சந்திக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் சத்யா(ஆர்யா) நினைவிழந்த நிலையில் அவரது அப்பாவால் கொண்டுவரப்படுகிறார். தங்களின் உயிரான சத்யாவிற்கு என்ன ஆனது என்று நண்பர்கல் அனைவரும் கதறித்
துடிக்கிறார்கள். சத்யாவின் நிலையை நண்பர்களுக்கு விளக்குகிறார் மனோதத்துவ நிபுணரான சாருஹாசன்.

கல்லூரி காலத்தில் அவர்களுடன் படித்த ஏதோ ஒரு பெண்ணை சத்யா காதலித்ததாகவும், தன் காதலை அந்தப் பெண்ணிடம் சொல்லாமல் சத்யா மறைத்ததால்தான் அவருக்கு இந்த நிலை என்றும் சக நண்பர்களிடம் விளக்கும் சாருஹாசன் - சத்யாவைப் பிழைக்கவைக்க 5 வருடங்களுக்கு முன்பான கல்லூரி நாட்களை மறுபடியும் உருவாக்க வேண்டும். சத்யா தன் காதலை அந்தப் பெண்ணிடம் சொல்லவேண்டும். அதுதான் அவரைப் பழைய நிலைக்கு கொண்டுவரும் என்று கூறுகிறார்.

நண்பணின் உயிரைக் காப்பாற்ற சக நண்பர்கள் அனைவரும் இணைந்து பழைய கல்லூரி நாட்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். சத்யா காதலித்தப் பெண் தங்களது சக மாணவி ஜோதி(சோனியா அகர்வால்) என்பதை அறிந்து அப்போதுதான் திருமணம் நிச்சயமான அவரையும் கல்லூரிக்கு அழைத்துவருகிறார்கள். சத்யாவும் மெள்ள பழைய நிலைக்குத் திரும்புகிறார். ஒரு கட்டத்தில் சத்யா காதலித்தப் பெண் தான் தான் என்பது ஜோதிக்குத் தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் தன் மனதும் அவரை நாடுவதை அறிந்து பதறும் ஜோதி யாரிடமும் சொல்லாமல் ஊருக்கே திரும்புகிறார். ஜோதி இல்லாத சத்யாவின் வாழ்க்கை மீண்டும் சூன்னியமாகிறது. இறுதியில் சத்யாவின் நிலை என்ன ஆனது? ஜோதி மனம் மாறி சத்யாவைத் திருமணம் செய்து கொள்கிறாரா? நண்பர்களின் முயற்சி வெற்றியடைந்ததா? இவைகளே கதையின் இறுதிக் காட்சிகள்.

Arya heroபடத்தின் நாயகன் ஆர்யா என்பதைத் தவிர பெரிதாக அவர் ஒன்றுமே செய்யவில்லை. பேசாமல் மெளனமாகவே பல காட்சிகளில் வெறித்த பார்வையுடன் படம் முழுவதும் வருகிறார். சண்டைக் காட்சிகளில் மட்டும் துடிப்பாக செயல்படுகிறார். நாயகனுக்கு நாயகி தேவலை. பல இடங்களில் சோனியாவின் நடிப்பு பளிச்சிடுகிறது.  குறிப்பாக ஆர்யா காதலித்தது தன்னைத் தான் என்பதை அறிந்து கொள்ளும் இடத்தில் சோனியாவின் நடிப்பு அருமை. மற்றபடி படத்தில் முக்கால்வாசி வசனம் பேசி நடித்திருப்பதெல்லாம் ஆர்யாவின் நண்பர்கள் தான். சார்லி, மெளலி, லொள்ளு சந்தானம், சசி என்று தெரிந்த முகங்களுடன் பல புதியவர்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ஓக்கே ரகம் என்றாலும் பாடல்கள் ரொம்ப சுமார். படத்தில் அசத்தியிருப்பவர் ஒளிப்பதிவாளர் மதி என்றால் மிகையில்லை. அருமையான ஒளிப்பதிவு. இயக்குனர் நந்தா பெரியசாமி வித்தியாசமான கதையை யோசித்த அளவிற்கு பாத்திரப்படைப்புகளைப் பற்றியும் யோசித்திருந்தால் இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும். ஆனால் பல இடங்களில் கதை மற்றும் காட்சி அமைப்புகளில் அப்பட்டமாக கோட்டை விட்டிருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் நந்தா.

Copyright © 2005 Tamiloviam.com - Authors