தமிழோவியம்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : இத்தனை கொடுமையா முதுமை ?
- ஜெயந்தி சங்கர்

சிங்கப்பூரின் இப்போதைய தலையாய பிரச்சனை கடந்த ஆண்டுகளில் குறைந்துள்ள மக்கத்தொகை. அதனைக் கூட்டவேண்டிய சவால்கள் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. மிகவும் சாதுர்யமாகப் பல சலுகைகள் அறிவித்துள்ளது. இளையதலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்து மூத்தோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. அரசாங்கத்தின் இரண்டாவது சவால் என்ன தெரியுமா? இந்த மூத்தோர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதே. ஆக அண்மையில் வெளியான செய்திகளின்படி, இந்தச்சவாலைச் சமாளிக்கவென்று அறிவிக்கப்படவிருக்கும் சலுகைகள் மற்றும் மாற்றங்கள் இளைய சமுதாயத்தின் தோள்களில் அழுந்திவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது அரசாங்கம்.

பல ஆண்டுகள் குடும்பத்திற்குத் தூண்களாக வீட்டிலேயே இருந்து பெரும் ஆதரவு தந்து வந்தவர்கள், இன்றோ அவர்களில் சிலர்  குழந்தைகளின் ஆதரவு இல்லாமல் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். வாழ்நாளில் வேலைக்கே போகாததால் இவர்களுக்கு மத்திய சேமநிதியும் (CPF- Central Provident Fund) இல்லை.  50 வயதைக்கடந்த இத்தகையோர் இப்போது அரசாங்கம் மற்றும் சமூகசேவை நிறுவனங்களின் கவனத்திற்கு வந்திருக்கின்றனர். 50 முதல் 80 வரை வயதுடைய சமூகத்தின் இந்தப்பிரிவினருக்கு இப்போது அதிக உதவி தேவை என்கின்றனர் இந்த நிறுவனத்தினர். மாதாந்திர குறைந்தபட்ச பென்ஷன் தொகை, மத்திய சேமநிதியில் இவர்களுக்குச் சாதகமான சில மாற்றங்கள் போன்றவை பரிந்துரைக்கப்பட்டன. இவ்வகை முதியோர்களில் ஆண்கள் கொஞ்சபேர் இருந்தாலும், ஆண்களைவிட வயதான பெண்களே அதிகம் இப்பிரிவில் அடங்குவர்.

வருமானப் பாதுகாப்பு குறித்து, 12 குழுக்களாகப்பிரிக்கப்பட்ட  55 வயதுக்கும் மேற்பட்ட 150 பேர்களிடம் பலவித கலந்துரையாடல்கள் நடத்தி ஆய்வுகள் மேற்கொண்டது AWARE / Association of Women for Action and research மற்றும் Tsao Foundation ஆகிய நிறுவனங்கள். முதியோர்களின் முக்கியமான அக்கறை/கவலை சுகாதார மற்றும் மருத்துவச் சேவைகளின் செலவுகளாகவே இருந்தது. சிக்கனமாக, மிக எளிமையாகவே வாழ்ந்துவரும் இவர்கள் நோய் வரும்வரை சமாளிக்கிறார்கள். நோய் வந்துவிட்டாலோ செலவுகளைச் சமாளிக்கமுடியாது மிகவும் திண்டாடுகிறார்கள். கிட்டத்தட்ட 86% முதியோர்கள் குழந்தைகளோடு வாழ்கிறார்கள். இருந்தாலும் அவர்களும் பிள்ளைகளைக்குப் பாரமாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தங்களையும் தங்களின் தேவைகளையும் அலட்சியப்படுத்திக் கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகள் செப்டம்பர் 7 அன்று சன்டெக் ஸிடியில் இருக்கும் அரங்கில் நடந்த உலகமாநாட்டில் முன் வைக்கப்பட்டது. " இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் மூதாட்டிகளின் நிலை மாறும். ஆனால், இப்போது உடனடியாகத்தகுந்த நடவடிக்கை தேவை ", என்று AWARE நிறுவன அதிபர் டாக்டர். திரு. கன்வல்ஜித் சொயின் கூறுகிறார். எலும்பு (Orthopaedic) சம்பந்தமான துறையில்
மருத்துவராயிருக்கும் இவர் மிகுந்த அக்கறையோடு கூறும் விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியளிக்கக் கூடியதே. Osteoporosis என்னும் எலும்புருக்கி நோயினால் பாதிக்கப்படும் முதியோர்கள், முக்கியமாகப் பெண்கள் அதற்கான மருந்தின் விலை மிக அதிகம் என்பதால், தங்களின் பிள்ளைகளுக்குப் பாரமாகிவிடக் கூடாது என்று சிகிச்சையைப் புறக்கணிக்கிறார்கள். மருந்தில்லாமல் இருக்கமுடியுமா என்று அப்பாவியாகக் கேட்கிறார்கள். மருந்து உட்கொள்ளாமல் விட்டுவிட்டு இடுப்பெலும்பை (fracture) உடைத்துக்கொள்கிறார்கள். இதனால், அவர்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும், சமூகத்திற்கும் இன்னும் அதிகசெலவும் பிரச்சனையுமே வருகிறது.

நடத்தப்பட்ட ஆய்வின் படி 60 திற்கும் மேற்பட்ட வயதுடைய பெண்கள் மத்திய சேமநிதியில் மிகக்குறைவாகவோ அல்லது ஒன்றுமேயில்லாமலோ இருக்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் வாழ்நாள் முழுவதையும் குடும்பத்தைப்பராமரிக்கவென்றே செலவிட்டவர்கள். 2000 ஆம் ஆண்டு 40 க்கும் மேற்பட்ட வயதுடைய பெண்களின் மொத்த மத்தியசேமநிதித்தொகை $19.9 மில்லியனாக இருந்தது. அதே வயதுப் பிரிவினரான ஆண்களின் மொத்த மத்தியசேமநிதித்தொகை $33.1 மில்லியனாக இருந்தது. 60க்கும் மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு உயர்நிலைக்கும் கீழான கல்வியே இருந்தது. ஆகவே இவர்களுக்கு வேலைகிடைப்பது அரிது. அதுவுமில்லாமல் இந்தப்பெண்களில் 54% கணவனையிழந்தவர்கள். இது அவ்வகை ஆண்களின்
எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம். கணெக்கெடுப்புத் துறை கூறும் செய்தியின்படி 290,200 பெண்கள் 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்கள். இளைய தலைமுறைப்பெண்கள் கல்வியறிவு பெறுகிறார்கள். ஆகவே இனிவரும் எதிர்கால மூத்த பெண்கள் சேமிப்பு மற்றும் வேலை வாய்ப்புச் சிக்கல்களில்லாமல் இருப்பர்.

வேலைக்குப் போகாதவர், அவரது கணவனின் அல்லது மனைவியின் மத்திய சேமநிதியிலிருந்து உதவி பெறும்படி மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த முதியவர்களில் பெரும்பாலோர் பெரும்தொகையை பேரப்பிள்ளைகளுக்காகவே செலவிடுவர். அவ்விதத்தில் மீண்டும் நிதி சமூகத்தையே அடைகிறது என்கிறார் டாக்டர். திரு. கன்வல்ஜித் சொயின்.

மூதாட்டி டான் என்பவருக்கு எழுபது வயதாகிறது . படிப்பறிவு துளியும் இல்லாத இவர் மணமுடித்ததில்லை. தன் வயதான தாயைத் தனியே விட்டுவிட மனமில்லாமல் வீட்டு வேலைகள் செய்திருக்கிறார். பிறகு உணவகத்தில் எடுபிடி வேலை. இந்த விதமான வேலைகளில் கிடைக்கக்கூடிய சொற்ப சம்பளத்தில் அம்மாவிற்கு சரிபாதி கொடுத்து வந்திருக்கிறார். "நான் மணமுடித்துக் கொண்டு போய்விட்டால், அம்மாவை எப்படிப் பார்த்துக்கொள்வது? என் சம்பளத்தில் பாதியை அம்மாவிற்குக் கொடுக்க அனுமதிக்கும் புருஷன் கிடைக்கவேண்டுமே?", என்கிறார் மூதாட்டி. 1981ல் தன் அம்மா இறக்கும்போது அவருக்குக் கல்யாண வயது கடந்துவிட்டிருந்தது. அப்போது அவரிடம் கொஞ்சமும் சேமிப்பு இருக்கவில்லை. கப்பல்பட்டறையில் எடுபிடி வேலை செய்தார். $4.70 ஒரு நாளைக்கு கிடைக்கக்கூடிய சம்பளம். ஓவர்டைம் இருந்தால் $8- $9 கிடைக்கும். 15 வருடங்களுக்கும் முன்பு மாடிப்படிகளில் விழுந்ததில் ஒரு மாதம் மருத்துவமனையில் இருக்கவேண்டியதாயிருந்தது. அப்போதிலிருந்தே நடக்கவே சிரமப்படுகிறார். வேலைக்கு எப்படிப்போவது ? தீவிர மனவுளைச்சலுக்கு ஆட்பட்ட மூதாட்டி 2002 இரண்டு முறை தற்கொலைசெய்துகொள்ள முயன்றிருக்கிறார்.

முதலில் இவர் ப்ளீச்(bleach) எனப்படும் திரவத்தைக்குடித்துப் பார்த்திருக்கிறார். இறப்போமென்று நினைத்து இறக்கமுடியாமல் எரிச்சலால் அவதியுற்று, மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டுத் திரும்பியதுமே மறுபடியும் கத்தியைக்கொண்டு தன் மணிக்கட்டை வெட்டிக்கொண்டார். ஆனால், இம்முறையும் அவர் எண்ணம் மட்டும் ஈடேறவில்லை. பொதுச் சமூக நிதியிலிருந்து மாதம் $200 கிடைக்கிறது இவருக்கு. ஒரே அறைகொண்ட வீட்டில் தனியா வாழ்கிறார். " பிறரிடம் காசுக்குப் பிச்சையெடுக்கப் பிடிக்கவில்லை. ஆனால், மத்திய சேமநிதியில் காசு தீர்ந்து விட்டது. ஒவ்வொரு நாளும் படுக்கப்போகும்போதும்," நாளை நான் எழக்கூடாது, ஆண்டவா என்னைக்கூட்டிக்கொள் ", என்று வேண்டிக்கொள்கிறாராம்.

முதுமை நிச்சயம் இளமையைப்போன்ற உற்சாகம் நிறைந்த பருவம் இல்லை தான். ஆனால், இத்தகைய செய்திகளைப் படிக்கும்போது, முதுமை இத்தனை கொடுமையா என்றே நம்மை அதிரவைக்கிறது இல்லையா ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors