தமிழோவியம்
திரைவிமர்சனம் : மதுர
- மீனா

திருமலை, கில்லி படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு வரப்போகும் மற்றொரு விஜயின் வெற்றிப்படம் என்று மதுர வை நினைத்தால் நினைப்பு பப்படமாகப் போகிறது. கதையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் பக்கா விஜய் மசாலாவாக படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் மாதேஷ்.

முதல் காட்சியிலேயே மதுரை மாநகரில் பசுபதி விஜய்க்கு திவசம் செய்கிறார். இவனுடைய ஆத்மா கூட எனக்கு எதிரியாக இருக்கக்கூடாது என்று வசனம் வேறு. அடுத்த காட்சியிலேயே காய்கறி வியாபாரியாக சென்னையில் வளையவருகிறார் விஜய். இதில் அவருக்கு அசிஸ்டெண்டாக வடிவேலு. அம்மா சீதா மற்றும் இரண்டு தங்கைகள் என்ற அளவான குடும்பம் விஜய்க்கு. கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் ராஜ்கபூருடன் நியாயத்திற்காக விஜய் அடிதடியில் இறங்குகிறார். நடுநடுவே சப்தஸ்வரங்கள் ரமணனுடன் சங்கேத பாஷையில் பேசிக்கொள்கிறார். அப்போதே தெரிகிறது இதற்குப் பின்னால் வேறு ஏதோ கதை இருக்கிறது என்று. இதற்கிடையே மார்க்கெட் ரிசர்ச் செய்யவரும் ரக்ஷிதாவுடன் காதல். ஒரு கட்டத்தில் விஜய் யார் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் அம்மா சீதாவே விஜயைச் சுட்டுவிடுகிறார். " அந்தக் கொலைகாரன் சாகணும்" என்று அவர் கத்துவதைப் பார்த்து, ஆத்திரமடையும் வடிவேலு விஜயுடைய பிளாஷ்பேக்கைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

மதுரை கலெக்டர் மதுரவேல் கலப்பட விஷயங்களை ரொம்பவும் தீவிரமாக விசாரிக்கிறார். இதில் முக்கிய கலப்படப் பிரமுகரான பசுபதியுடன் விஜய் அடிக்கடி மோதவேண்டி வருகிறது. விஜயின் உதவியாளார்கள் சோனியா மற்றும் வடிவேலு. சரியான ஆதாரங்கள் இல்லாததால் பசுபதி மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று வருத்தப்படும் விஜய்க்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் பசுபதியின் வீட்டுக்குள் நுழைந்து ஆதாரங்களை எடுத்து பேக்ஸ் செய்கிறார் சோனியா. வீட்டை விட்டு வெளியே வரும் நேரத்தில் பசுபதியின் ஆட்களிடம் மாட்டிக்கொள்கிறார். சோனியாவைக் காப்பாற்ற வரும் விஜயைக் கொல்ல பசுபதியின் ஆட்கள் முயலும்போது அதில் சோனியா இறந்துவிடுகிறார். அப்போது நடக்கும் வெடிவிபத்தில் விஜய் இறந்துவிட்டதாக பசுபதி நினைக்கிறார். சோனியாவைக் கொன்ற கொலைப் பழி விஜயின் மீதே விழுகிறது. இதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள விஜய் மதுரையை விட்டு வெளியேறி, சென்னையில் சோனியாவின் அம்மா சீதா, 2 தங்கைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த உண்மை தெரியாமல் சீதா, சோனியாவைக் கொன்றது விஜய் என்று நினைத்து வருகிறார். கடைசியில் வடிவேலு புண்ணியத்தில் உண்மையை உணர்ந்துகொள்கிறார். விஜய் தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் விதமாக ஆதாரங்களைத் திரட்டினாரா? வில்லன் பசுபதியைப் பழிவாங்கினாரா? ரக்ஷிதா - விஜய் காதல் என்ன ஆயிற்று என்பதெல்லாம் மீதிக்கதை.

மதுரவேலாக நடித்திருக்கும் விஜய் காய்கறி வியாபாரியாக கலக்குகிறார். ஆனால் கலெக்டர் - அவ்வளவாக ஒட்டவில்லை. மற்ற விஜய் படங்களுடன் ஒப்பிடுகையில் இதில் சண்டை அதிகமோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். டான்ஸ் - பைட் எல்லாம் ஓக்கே. திருமலை - கில்லி இரண்டு படங்களிலும் விஜயைப் பார்க்கும்போது விஜயாகத் தெரியாமல் அந்த கேரக்டராக கொஞ்சமாவது தெரிந்தது. ஆனால் இதில் விஜய் விஜயாகவேத் தெரிகிறார். படத்தின் மிகப்பெரிய டிராபேக் இதுதான்.

சோனியாவிற்கு என்ன சோகமோ? முகத்தில் சிரிப்பு என்பதே இல்லாமல் சதா சோகமாகவே இருக்கிறார். போனால் போகட்டும் என்ற எண்ணத்தில் இவருக்கு ஒரு பாட்டு. நடிப்பு சூப்பராக இல்லையென்றாலும் சுமாராக இருக்கிறது. படத்தில் சற்று நேரமே வந்தாலும் அவருடைய பாத்திரம் மனதில் நிற்கிறது. சோனியாவிற்கு நேர் மாறாக ரக்ஷிதா. காமெராவும் கையுமாகவே சுத்திக்கொண்டிருக்கிறார். எதற்காக மார்க்கெட் ஆராய்ச்சி என்றெல்லாம் கேட்கக்கூடாது. பொம்மை போல வந்து போகிறார் அவ்வளவே. விஜயைக் கவர இவர் செய்யும் அலும்புகள் எல்லாம் எரிச்சலை ஏற்படுத்துகின்றன.

ஏற்கனவே இரண்டு கதாநாயகிகள் இருப்பது போதாதென்று தேஜாஸ்ரீ வேறு. தன் பங்கிற்கு தன்னால் முடிந்த ஆட்டம் போட்டு இருக்கிறார். அம்மாவாக வரும் சீதாவைப் பற்றிக் குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை. பசுபதி இத்துடன் தான் நடிப்பதைக் கொஞ்ச காலத்திற்கு நிறுத்திக்கொண்டால் தேவலை. ஒரே மாதிரி ஸ்டீரியோடைப்பான நடிப்பு. அதிலும் பசுபதி அடாவடி நீதிபதியாக மாறி தன்னை ஏமாற்றியவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதெல்லாம்.. தாங்கலடா சாமி!!. வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளில் சிரிப்பைக் காணமுடியவில்லை. அதிலும் அந்த பாம்பு சீனும், குளியல் சீனும்.. அண்ணாமலையில் ரஜினி செய்ததைப் போல செய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனாலும் ஒரிஜினலில் இருந்த அளவு சரக்கு இதில் இல்லை.

ஷங்கரின் உதவியாளராக இருந்த காரணத்தாலோ என்னவோ, மாதேஷ் தானும் கிராபிக்ஸ் கலக்கல் செய்ய முயன்றிருக்கிறார். முன்னவருக்கே கையைச் சுட்ட விஷயம் இவருக்கு வாயையும் சேர்த்து சுட்டிருக்கும். புடலங்காய் டான்ஸ் சகிக்கவில்லை. பிரும்மாண்டத்தில் ரொம்பவே கவனம் செலுத்தியிருக்கும் மாதேஷ் அதில் கால் பங்கையாவது கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையில் நிறைய ஓட்டைகள்.. விஜய் ரசிகர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட படம் மதுர.. அவ்வளவே.

Copyright © 2005 Tamiloviam.com - Authors