தமிழோவியம்
திரைவிமர்சனம் : மனதோடு மழைக்காலம்
- மீனா

முதலில் மோதிக்கொள்ளும் ஒரு ஆணும் பெண்ணும் பிறகு சமாதானமானாலே அவர்கள் காதலர்களாகிவிடுவார்கள் என்ற எண்ணம் தவறு - கடைசி வரையில் அவர்களால் நல்ல நண்பர்களாக இருக்க முடியும். இதுவே மனதோடு மழைக்காலம் படத்தின் கதை.

கல்லூரியில் படிக்கும் ஷாமிற்கு அதே கல்லூரியில் படிக்கும் நித்யாதாஸை தெரியவே தெரியாது. ஆனால் ஷாமின் தைரியமான - நேர்மையான குணத்தைப் பற்றி தெரிந்து வைத்துள்ள நித்யாதாஸ் ஷாமிற்கு ஒரு இக்கட்டில் அவரது நண்பர்களே உதவ மறுக்கும் நேரத்தில் அவருக்கே தெரியாமல் உதவி செய்கிறார். பிறகு இதைப்பற்றி நித்யாவின் தோழிகள் மூலமாகத் தெரிந்துகொள்ளும் ஷாம், தன்னை நண்பனாக ஏற்றுக்கொள்ளுமாறு நித்யாவிடம் கூற இருவருக்கிடையே நட்பு மலர்கிறது.

Shyam Samikshaசரி.. இருவரும் காதலிக்கிறார்கள் போலிருக்கிறது என்று எண்ணி இவர்களது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை கவனிக்க, "நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.. அப்படியே இருப்போம்.." என்று கூறுகிறார்கள் ஷாமும் நித்யாதாஸ¤ம். கல்லூரி நாட்களில் ஷாமை விழுந்து விழுந்து காதலித்த சமிக்ஷாவுடன் ஷாமிற்குத் திருமணம் நடக்க, நித்யாதாஸ் ஜெயசூர்யாவைக் கைபிடிக்கிறார். குழந்தை இல்லாத சோகத்தில் நித்யா - ஜெயசூர்யா வாட, குழந்தை பிறந்தவுடன் இறக்கிறார் சமிக்ஷா. கைக்குழந்தையுடன் தனியாக நிற்கும் ஷாமிற்கு துணையாக வருகிறார் நித்யாதாஸ் தன் கணவருடன்.

வயோதிகத்திலும் தொடர்கிறது இவர்களின் நட்பு. ஷாம் - நித்யாவின் நட்பை புரிந்துகொள்ள முடியாமல் ஷாமின் மருமகள் கண்டபடி ஏசுகிறார். ஒரு கட்டத்தில் நித்யா இறக்க - அதுவரை எந்தத் துன்பத்திற்கும் துவளாத ஷாம் துவண்டு போகிறார். ஆனால் அதற்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என்பதை ஷாமிற்கு யார் உணர்த்துகிறார்கள் ? தோழியை இழந்த சோகத்திலிருந்து அவரை மீட்டது யார் ? இதுதான் கிளைமாக்ஸ்.

ஷாமின் வயோதிக நடிப்பிலிருந்து தான் படமே ஆரம்பிக்கிறது. ஆனால் பாவம் ஷாமிற்கு வயதான கெட்டப்பும் சரியில்லை - அவருடைய வயதான நடிப்பும் சரியில்லை. கல்லூரி நாட்களில் துள்ளலாக வரும் பாத்திரத்தில் ஓரளவு ஓகே சொல்ல வைக்கிறார். கல்லூரித் தோழியாக வரும் நித்யாதாஸ் தன் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சமிக்ஷா ஓகே ரகம். ஷாமின் மகனாக வரும் ஷ்யாம் கணேஷ், ஜெயசூர்யா ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்துள்ளார்கள்.

படத்தில் பல குறைபாடுகள். முப்பது வருடங்களுக்கு முன்பாக நடப்பதாக கூறப்படும் கதையில் வரும் அனைவரும் நவீன செல்போன்கள் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் வேலை கிடைத்தால் என்ன செய்வது என்று நாயகி குறைபட்டுக் கொள்ள, அதற்கு நாயகன் "ஈ மெயில் அனுப்பு, சாட் பண்ணலாம்.." என்றெல்லாம் கூறுகிறார். உடைகள் விஷயத்திலும் அப்படியே. இயக்குனர் இதையெல்லாம் கவனிக்கவே இல்லை போலிருக்கிறது. அதைப்போலவே எதனால் ஷாம் - நித்யா நட்பு இந்த அளவிற்கு பலப்பட்டது என்பதைச் சொல்லவே இல்லை.. கதை அருமையாக - புதுமையாக இருந்தாலும் இத்தகைய திரைக்கதை அபத்தங்களால் பல இடங்களில் சலிப்பு தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.

எது எப்படியோ  கல்லூரி - முட்டிக்கொள்ளும் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகிறார்கள். சில நாட்களில் அவர்களுக்குள் காதல் மலர்ந்து கல்யாணம் செய்து கொண்டு ஜாம் ஜாம் என்று வாழுகிறார்கள் - இந்தக் கருத்தை உடைத்ததற்காகவே இயக்குனர் அற்புதனுக்கு சபாஷ் போடலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors