தமிழோவியம்
தராசு : முன்னேறுகிறது குஜராத்
- மீனா

கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதியைப் போலவே சித்தரிக்கப்படும் நரேந்திரமோடி ஆளும் குஜராத் தொழிற்புரட்சியில் ஒவ்வொரு நாளும் முன்னேறிக்கொண்டே செல்கிறது. குஜராத்தின் இந்த வியக்கத்தகு முன்னேற்றத்திற்கு மோடியும் அவரது திட்டமிட்ட செயல்பாடுகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது. சர்ச்சைக்குரிய நானோ கார் திட்டத்தை தனது சரியான அணுகுமுறையால் குஜராத்தில் காலூன்ற வைத்ததன் மூலம் மோடி கிட்டத்தட்ட குஜராத் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார். நானோ கார் தொழிற்சாலையால் பல விதங்களில் குஜராத் மக்கள் பயனடைவார்கள் - உள்ளூர் வேலை வாய்ப்புகள் நிச்சயம் பெருகும் என்று குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

குஜராத் இனப்படுகொலைகள் அனைத்திற்கும் மூல காரணம் என்றும் இன வெறியர் என்றும் எதிர்கட்சிகளால் தூற்றப்பட்ட மோடியை குஜராத்தின் அனைத்து தரப்பு மக்களும் இணைந்துதான் முதல்வராக்கியுள்ளனர். எந்த ஒரு இலவச திட்டத்தையும் அவர் அறிவிக்கவில்லை - இலவசத்திற்கு மயங்கி மக்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவும் இல்லை. அவரது திறமையான வேலை மற்றும் அணுகுமுறை மட்டுமே நம்பி மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கியுள்ளார்கள். அவரும் அவர்களது நம்பிக்கையை பொய்யாக்காமல் மக்களுக்காக உண்மையாக உழைத்துவருகிறார். ஆந்திரா கர்நாடகாவை விட குஜராத் தான் எங்களுக்கேற்ற இடமாக அமைந்தது என்று டாடா தலைவர் ரதன் டாடா கூறியுள்ளதிலிருந்து குஜராத் எந்த அளவிற்கு தொழிலதிபர்களின் அபிமான மாநிலமாக அமைந்துள்ளது என்பது நன்கு விளங்கும்.

கலவர பூமி குஜராத் நிலை இப்படி என்றால் அமைதிப் பூங்காவான தமிழகத்தின் நிலை?? ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது மின்சாரம் துண்டிக்கப்படும். நாங்கள் ஆட்சியை இழந்தால் இந்த மின்சாரப் பிரச்சனைதான் தனிப்பெரும் காரணமாக இருக்கும் என்று மின்சார அமைச்சரே கூறுவது இங்கு தான் நடக்கும். தண்ணீர் தட்டுப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம். பெருகிவரும் போக்குவரத்து நெரிசல், குண்டர்கள் அராஜகம் இதைப்பற்றியெல்லாம் பேசுபவர்கள் தேசப் பிரஷ்டம் செய்யத் தகுதியானவர்கள் என்ற நிலை, போதாத குறைக்கு அதிகரித்துக்கொண்டே போகும் குடும்ப அரசியல் - அது தொடர்பான மனஸ்தாபங்கள்.

ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலை எதற்கு? இத்தனைப் பிரச்சனைகளையும் மறக்கடிக்க இலவசத் திட்டங்கள் தான் கைவசம் நிறைய இருக்கிறதே ! ஜனங்களை ஏமாற்ற இது போதாதா ? ஆனானப்பட்ட அமெரிக்க நிதி நிறுவனங்களே தகுதிக்கு மீறி அனைவருக்கும் கடன் கொடுத்து ஓட்டாண்டியாகி நிற்கும் நிலையில் இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் இலவசம் - குறைந்த விலையில் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி அரசு கஜானாவை காலியாக்காமல் விடமாட்டார். என்ன இருந்தாலும் நம் முதல்வர்களைப் போன்ற ஒரு சமூக நீதி காவலரை - பிற மதத்தினரை அரவணைத்துச் செல்லும் தலைவரைப் பார்க்க முடியுமா? மோடி என்னதான் முயற்சி செய்தாலும் அவரால் தன் குடும்பத்தினரையும் நண்பர்கள் குடும்பத்தினரையும் அரசியலில் இப்படி தூக்கி வைக்க முடியுமா? வாழ்க தமிழ்நாட்டு அரசியல்.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors