தமிழோவியம்
திரைவிமர்சனம் : மலைக்கோட்டை
- மீனா

Vishal,Priya Maniஓர் அடிதடி வழக்கில் பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. கண்டிஷன் பைலில் கையெழுத்து போட திருச்சிக்கு வரும் விஷால் அங்கே ப்ரியாமணியைச் சந்திக்கிறார். கண்டதும் காதல்.. ஆனால் விஷாலிடமிருந்து தப்பிக்க ப்ரியா யாரோ ஒருவனைக் காட்டி தான் அவனை காதலிப்பதாக சொல்கிறார். முதலில் ப்ரியா சொல்வதை நம்பி விலகிப் போகும் விஷால் ஒரு கட்டத்தில் ப்ரியா தான் காதலிப்பதாக குறிப்பிட்ட நபர் திருச்சியையே கலக்கும் ஒரு ரவுடியின் தம்பி என்பதையும், ப்ரியா உண்மையில் அந்த ரவுடியைக் காதலிக்கவே இல்லை என்பதையும் தெரிந்து கொள்கிறார். தன் தம்பிக்குத்தான் ப்ரியா என்று தாதா வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்க, காதலையும் காதலியையும் காப்பாற்ற விஷால் எவ்வாறு போராடுகிறார் என்பதே கதை.

சண்டைக் காட்சிகளில் தூள் படுத்தும் விஷால் முதன்முறையாக காமெடியிலும் கலக்கியுள்ளார்.  இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்தால் காமெடியில் மெருகேறி ஜொலிக்கலாம். கிளிக்கூண்டில் காக்காவை அடைத்துவந்து சித்தப்பா ஆசிஷ்வித்யாத்தியிடம் அசடு வழிவதும், ஊர்வசியிடம் கலாய்ப்பதும் சூப்பர்.

பருத்தி வீரனில் நடிப்பில் அசத்திய ப்ரியாமணி இதில் 2 பாட்டிற்கு ஆடிவிட்டு போகும் சாதாரண நாயகியாக ஏன் மாறினார் என்று தெரியவில்லை. நாயகி விஷயத்தில் இயக்குனர் இன்னமும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

படத்தில் களைகட்டும் ஒரு விஷயம் ஊர்வசி - ஆசிஷ்வித்யார்த்தி பிளாஷ்பேக். அவர்களது ·ப்ளாஷ்பேக் காட்சி காமெடியின் உச்சம். வில்லனாக வந்து மிரட்டிய ஆசிஷே காமெடியில் கலக்குகிறார் என்றால் இயல்பாகவே நகைச்சுவை ரசனை உள்ள ஊர்வசி புகுந்து புறப்படுகிறார். டீக்கடையில் பன்னைப் பார்த்தால் இவர்களது காமெடி நிச்சயம் நினைவிற்கு வரும். இவர்கள் காமெடி போதாத குறைக்கு பொன்னம்பலம் வேறு நாய் பாஸ்கராக வந்து அதகளம் செய்கிறார். ஆர்த்தி, மயில்சாமி, மனோபாலா என்று ஏகப்பட்ட காமெடியன்கள் வேறு.. காதல் காட்சிகளாகட்டும் சண்டைக்காட்சிகளாகட்டும் எல்லாவற்றிலும் நகைச்சுவை பின்னிப் பிணைந்துள்ளது ரசிக்கும்படி உள்ளது. ஆனால் வில்லன் தேவராஜின் வில்லத்தனத்தில் ரசிக்கும்படி ஒன்றுமே இல்லை. வில்லன்களைப் பொறுத்தமட்டில் அரைத்த மாவையே இன்னும் எத்தனை நாட்களுக்கு அரைப்பார்களோ தெரியவில்லை.

வைத்தியின் ஒளிப்பதிவும் கனல் கண்ணனின் ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு பெரும் பலம். மணிசர்மாவின் இசை ஓகே ரகம். முதல் காட்சியிலேயே கடைசி காட்சியில் ஹீரோ யாருடன் மோத போகிறார் என்று யூகிக்க முடிந்துவிடுவதால், படத்தில் பெரிய சுவாரசியம் இல்லை. மேலும் இடையில் வரும் காட்சிகளிலும் சுவையான திருப்பங்களோ, எதிர்பார்ப்புகளோ இல்லாதது திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம். இயக்குனர் பூபதி பாண்டியன் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் மலைக்கோட்டை இன்னும் சிறப்பாக கட்டப்பட்டிருக்கும்.


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors