தமிழோவியம்
திரைவிமர்சனம் : மஜா
- மீனா

மலையாள "தொம்மனும் மக்களும்" படத்தின் ரீமேக் தான் மஜா என்றாலும் மஜாவாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஷாபி.

Vikram Asinமணிவண்ணனின் வளர்ப்பு மகன்கள் பசுபதி மற்றும் விக்ரம் - மூவரும் பக்கா லோக்கல் திருடர்கள். ஒரு கட்டத்தில் திருட்டுத் தொழில் விக்ரமிற்கு வெறுத்துவிட நல்லவர்களாக மாறி ஏதாவது தொழில் செய்து பிழைக்க கிளம்புகிறார்கள் அப்பாவும் இரண்டு பிள்ளைகளும். மூவரும் பாடுபட்டு திருடிய பணத்தில் வாங்கிய
லாரி வழியில் மக்கர் செய்துவிட, நடு ராத்திரியில் ஒரு ஊரில் தங்க நேரிடுகிறது. பசியால் மணிவண்ணன் துடிக்க, தூரத்தில் தெரியும் வீட்டிற்குச் சென்று சாப்பாடு கொண்டு வர போகிறார் பசுபதி. விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்ட மணிவண்ணனை மகன்கள் இருவரும் எப்படியோ காப்பாற்றுகிறார்கள். சாப்பாட்டில் விஷம் எப்படி வந்தது என்று சாப்பாட்டை எடுத்து வந்த வீட்டுச் சொந்தக்காரர் விஜயகுமாரிடம்  சண்டை போடப்போகும் விக்ரமிற்கு அவர்கள் வீட்டு கஷ்ட நிலை தெரியவருகிறது. அந்த ஊரின் பெரிய மனிதரான முரளியால் விஜயகுமார் பாதிக்கப்பட்ட கதையைத் தெரிந்துகொள்ளும் விக்ரம், பசுபதி மற்றும் மணிவண்ணன் மூவரும் முரளியிடம் பஞ்சாயத்துப் பண்ணப் போக, சண்டையில் முடிகிறது விவகாரம்.

ஒரு கட்டத்தில் விக்ரம் எதிர்பாராத விதமாக முரளியின் மகள் அசினுக்கு திடீர் தாலி கட்டிவிட, விக்ரமின் நல்ல குணம் மற்றும் வீரத்தை மெச்சி முரளியும் அசினும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் அசினின் முறைமாமன் பிஜுமேனன் முரளியின் சொத்துக்கு ஆசைபட்டு செய்யும் வில்லத்தனத்தால்
பசுபதிக்கும் விக்ரமிற்கு இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தின் விக்ரம், பசுபதி இருவரையும் தீர்த்துக்க்கட்ட பிஜுமேனன் முயற்சி செய்ய, அதை முறியடித்து அசினை எப்படி விக்ரம் கைபிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

முதன்முதலாக ஒரு காமெடி படத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். மணிவண்ணன், பசுபதி உள்ளிட்ட அனைவரும் நடிக்க வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறார். ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார். அழகாக அசினுடன் காதல் செய்கிறார். ஒருகட்டத்தில் முரளி திருடர்களான அப்பா மற்றும் அண்ணனைப் பிரிந்து வரும்படி சொல்வதை ஏற்க மறுத்து அசினுடனான தனது திருமணம் நடக்காது என்பதை வெறுப்புடன் அனைவருக்கும் சொல்லும் காட்சியில் விக்ரமின் நடிப்பு பளிச்சிடுகிறது. ஆனாலும் விக்ரம் காமெடி பெரிய அளவில் ஒன்றும் செய்யவில்லை என்பது குறைதான்.

காமெடியில் விக்ரம் விட்டதை பிடித்து படத்திற்கு தெம்பூட்டுபவர்கள் பசுபதி, மணிவண்ணன் மற்றும் வடிவேலு. விருமாண்டியில் கமல் பசுபதியை ஒரு வித்தியாச வில்லனாக காட்டினார். அதிலிருந்து மற்ற இயக்குனர்களும் பசுபதியை வில்லனாகவே பார்த்தார்கள். அதே கமல் மும்பை எக்ஸ்பிரஸில் பசுபதிக்குள் இருக்கும் நகைச்சுவையை வெளிக்கொண்டுவந்தார். கப்பென்று பிடித்துக்கொண்டார் ஷாபி.. படத்தில் பசுபதியின் காமெடிக் கொட்டங்கள் சூப்பர். விஜயகுமாரின் மூத்தமகளைக் கண்டது காதல் கொள்கிற பசுபதி, தப்புத்தப்பாய் இங்கிலீஷ் பேசி வழியும் காட்சிகளில் சிரிப்பை அடக்க இயலவில்லை. தன் காதலை மணிவண்ணன் மற்றும் விக்ரமிடம் சொல்லும் காட்சிகளிலும் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார் பசுபதி. ஒரு கட்டத்தில் தம்பியே தன்னைத் திருடன் என்று சந்தேகப்படுவதைத் தெரிந்துகொண்டு உருகி மருகும் காட்சிகளிலில் தன் நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறார் பசுபதி.

ஆரம்ப காட்சியில் விக்ரமும் பசுபதியும் அடித்துக்கொண்டிருக்க ஜாலியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறாரே மணிவண்ணன் - அங்கிருந்து ஆரம்பிக்கிறது காமெடி பட்டாசு.. ஒரு விபத்தில் தன் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக இழந்த மணிவண்ணன் அனாதைகளான பசுபதி மற்றும் விக்ரமை எடுத்து வளர்க்கிற கதை -
மணிவண்ணன் இவர்கள் இருவர் மீதும் கொண்டிருக்கும் பாசம் - விக்ரம் பசுபதி இருவரும் மணிவண்ணன் மீது கொண்டிருக்கும் அன்பு ஆகியவை படத்தின் செண்டிமெண்ட் காட்சிகள்.

Asin and Vikramபுலிபாண்டியாக அறிமுகமாகும் வடிவேலு முதல் காட்சியிலேயே வேட்டி நழுவியது கூடத் தெரியாமல் தெனாவாட்டாக நடக்கிறாரே ஒரு நடை... தூள். அதைப்போலவே ஸ்லோமோஷனின் நடந்து வந்துவிட்டு அதை லூஸ்மோஷன் நடை என்று சொல்லும்போது நமக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறு வலிப்பது நிச்சயம். தான் வரும் ஒவ்வொரு சீனிலும் காமெடியில் கலக்குகிறார் வடிவேலு.

கதாநாயகி என்பதால் நாலு சீனில் தலையைக் காட்டிவிட்டு இரண்டு டூயட் ஆடுவதைத் தவிர அசினுக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. ஊர் பெரியமனிதரான முரளி முதலில் வில்லனாக இருந்து பிறகு விக்ரம் அண்ட் கோவின் நடத்தையால் கவரப்பட்டு நல்லவனாக பொசுக்கென்று மாறுகிறார். உடனே வில்லன் ரோலைச்
செய்யவருகிறார் பிஜுமேனன். பெரிசாக ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே. விஜயகுமாருக்கு வழக்கமான அப்பாவி கேரக்டர்.

விஜியின் வசனம் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு அருமை. வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ஒக்கே ரகம். மொத்தத்தில் தமிழக ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல், காமெடி என்று அனைத்தையும் கலந்துகட்டி மஜாவை இயக்கியிருக்கிறார் ஷாபி. தன் முயற்சியில் அவர் வெற்றிபெற்றுளார்
என்பது நிச்சயம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors