தமிழோவியம்
தராசு : அபுசலீம் கைது - அடுத்து??
- மீனா

பல வருடத் தேடலுக்குப் பிறகு மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு காரணமானவர்களில் ஒருவரான அபுசலீமையும் அவரது காதலி(மனைவி) மோனிகாவையும் கிட்டத்தட்ட ஐம்பது கோடி ரூபாய் செலவழித்து இந்திய அரசாங்கம் பிடித்திருக்கிறது. அதுவும் போர்ச்சுகல் அரசால் இடப்பட்ட ஏகப்பட்ட கட்டளைகளுக்கு நடுவே.. சரி எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது - அபுசலீமும் மோனிகாவும் கடகடவென எல்லோரையும் காட்டிக்கொடுக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது நம் புலனாய்வுத் துறைக்கு.

போர்ச்சுகலில் போலிபாஸ்போர்ட் வழக்கில் 2002ல் அபுசலீம் - மோனிகா இருவரும் கைது செய்யப்பட்டபோதுதான் அபுசலீம் அங்கிருப்பது பற்றி நம் அரசாங்கத்திற்கு தெரிய வந்துள்ளது. அப்போதிலிருந்து வழக்கு போட ஆரம்பித்து, அபுசலீமை நம் நாட்டிற்கு கொண்டு வரவேண்டிய அவசியங்களைப் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறி என்றெல்லாம் செய்ய 3 ஆண்டுகள் பிடித்துள்ளன. எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை வழங்கக்கூடாது என்ற போர்ச்சுகல் அரசின் கட்டளைக்கு இணங்கி அவர்களை இந்தியா கொண்டு வந்தும் உருப்படியாக அவர்களிடமிருந்து ஒரு தகவலையும் பெற முடியாதது துரதிஷ்டமே.

அபுசலீம் வாயையே திறக்காத நிலையில் மோனிகாவிடமிருந்தும் உருப்படியாக ஒரு விஷயத்தையும் பெற முடியவில்லை.. அபுசலீமின் நிழல் வாழ்க்கை எல்லாம் அமெரிக்காவில் இருக்கும் அவரது முதல் மனைவி சமீராவிற்குத் தான் தெரியும் - அவரைக் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டுவந்தால்தான் இந்த வழக்கில் ஏதாவது திருப்பம் ஏற்படும் என்று புதுக் கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் அதிகாரிகள்.

இந்நிலையில் நமது கேள்விகள் இதுதான் -  அரசியல் சம்மந்தப்பட்ட மற்ற வழக்குகளைப் போலவே இந்த வழக்கும் முடிய 10,20 வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டுமா? அபுசலீமிடமிருந்து உண்மைகளை நம் அரசாங்கம் வாங்குமா - அல்லது அவனுக்கு ராஜமரியாதைகளை செய்துகொண்டு அவன் ஒன்றுமே சொல்லாதிருப்பதை வேடிக்கைப் பார்க்குமா? ஏகப்பட்ட விரோதிகளை சம்பாதித்துக்கொண்டிருக்கும் அபுசலீமை - நேரமும் சமயமும் கிடைத்தால் அவனைக் கொல்லத் துடிக்கும் அவன் விரோதிகளிடமிருந்து நம் அரசாங்கம் காப்பாற்றுமா? இல்லை கோட்டை விட்டுவிட்டு கையைப் பிசையுமா? மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு இவரும் ஒரு முக்கிய காரணம் - இதைத் தவிர இன்னும் பல வழக்குகளிலும் இவர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டியவர்தான்.. ஆகவே இவருக்கு நாங்கள் மரண தண்டனை வழங்குகிறோம் என்று கோர்ட்டு முடிவு செய்யும் பட்சத்தில் அரசாங்கம் என்ன செய்யும்?

மொத்தத்தில் மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அபுசலீம் கைது ஒரு முக்கிய நிகழ்வுதான் என்றாலும் அவன் சொல்லப்போகும் வாக்குமூலத்தையும் அதைத் தொடர்ந்து நம் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கைகளையும் பொறுத்தே அவன் கைது பயனுள்ள விஷயமா - அல்லது பரபரபிற்காக வெடிக்கப்பட்ட வெறும் வெத்து வேட்டா என்பது தெரியவரும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors