தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : பல்லணுகல் முறைகள்
- எழில்

அகலப்பட்டை ஸி டி எம் ஏ குறித்துக் காண்பதற்கு முன், பல்லணுகல் முறைகளைப் பற்றிப் பார்த்து விடுவோம்.
 
பல்லணுகல் முறை(Multiple Access) என்றால் என்ன?
 
ஒரு குறிப்பிட்ட தடத்தை (Channel- அது ஒரு அதிர்வெண் தடமாக இருக்கலாம் அல்லது கம்பிவழி செல்லும் இணைப்புத் தடமாக இருக்கலாம்) எவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் (அல்லது செலுத்திகள் ,Transmitters) சரியான முறையில் பகிர்ந்து கொண்டு தகவல் அனுப்பப் பயன்படுத்தலாம் என்பதை உறுதி செய்யும் முறைகளே பல்லணுகல் முறைகளாம். ஒரு குறிப்பிட்ட தடத்தைப் பலர் பயன்படுத்த நினைக்கையில், அனைவருக்கும் அத்தடத்தைப் பகிர்ந்தளிப்பது எப்படி என்பதை இந்தப் பல்லணுகல் முறைகள் விளக்குகின்றன.
 
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், தடத்தை ஒரு பயனாளருக்கு அனுமதித்து, அந்த நேரம் முடிந்ததும் அடுத்த பயனாளருக்கு அனுமதிப்பது நேரப் பகுப்புப் பல்லணுகல் ஆகும் (Time Division Multiple Access, TDMA). தகவல் அனுப்ப உதவும் தடத்தைச் சிறு சிறு அதிர்வெண் துண்டுகளாகப் பிரித்து ஒவ்வொரு பயனாளருக்கும் ஒரு அதிர்வெண் பட்டைத் துண்டு வழங்குவது அதிர்வெண் பகுப்புப் பல்லணுகல் ஆகும் (Frequency Division Multiple Access,FDMA). இந்த நேர மற்றும் அதிர்வெண் பகுப்பு முறைகள் ஜி எஸ் எம் திட்டத்தில் பயன்படுத்தப் படுவது குறித்து ஏற்கனவே பழைய பதிவுகளில் கண்டோம் . குறியீட்டுப் பகுப்புப் பல்லணுகல் முறையின் (Code Division Multiple Access, CDMA) சிறப்பம்சம் என்னவெனில் , எல்லா நேரங்களிலும் , எல்லாப் பயனாளர்களுக்கும் ஒரே அதிர்வெண்ணில் தகவல் அனுப்பப் படும் . அப்படி எல்லாப் பயனாளர்களுக்கும் ஒரே நேரத்தில் தகவல் அனுப்பினால் இடையூறு நிகழாதா? யாருக்கு எந்தத் தகவல் அனுப்பப் பட்டிருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது ?
 
மேலே குறிப்பிட்ட மூன்று வகை அணுகல் முறைகளையும் ( TDMA, FDMA & CDMA) ஒரு உதாரணத்துடன் விளக்கலாம். ஒரு பெரிய அறை. அந்த அறையில் பலர் அமர்ந்திருக்கிறார்கள் எனலாம். அந்த அறைதான் தடம் ( Channel). ஒவ்வொருவரும் ஒரு அனுப்புனர் (Transmitter) எனலாம். அனைவரும் ஒரே நேரத்தில் பேச ஆரம்பிக்கிறார்கள் எனலாம். யார் என்ன பேசினார்கள் என்பது ஒன்றும் புரியாது போய் இறுதியில் குழப்பமே மிஞ்சும். இது போல் தான் ஒரு குறிப்பிட்ட தடத்தில் அனைத்து செலுத்திகளும் ஒரே நேரத்தில் தகவல் அனுப்ப ஆரம்பித்தால், அந்தத் தகவல்களைச் சரியான் முரையில் பெற முடியாமற்போய் குழப்பமே ஏற்படும். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? அங்கு இருக்கும் அனைவரையும் அமைதிப்படுத்தி, ஒவ்வொருவரையும் ஒரு குறித்த நேரத்தில் பேசச் செய்யலாம். ஒருவர் பேசுகையில் மற்ற அனைவரும் அமைதி காத்தல் வேண்டும். அவர் பேசி முடித்ததும் அடுத்தவர் பேச ஆரம்பிக்கலாம். இது போல், ஒரு குறித்த நேரத்தில் ஒரு குறித்த செலுத்தி மட்டும் தகவல் அனுப்ப, மற்ற செலுத்திகள் அந்த நேரத்தில் தகவல் அனுப்பாமல், ஒவ்வொரு செலுத்தியும், தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் தகவல் பரிமாற்றம் செய்தால் தடத்தினை ( Channel) முறையாகப் பயன்படுத்தலாம் அல்லவா? இம்முறைதான் நேரப்பகுப்புப் பல்லணுகல் (Time Division Multiple Access, TDMA ). ஜி எஸ் எம் திட்டத்தில், ஒரு குறிப்பிட்ட தள நிலையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் செல்பேசிகள் நேரப்பகுப்புப் பல்லணுகல் முறையில் தான் தள நிலையத்துக்குத் தகவல் அனுப்புகின்றன. அதாவது ஒவ்வொரு செல்பேசியும், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தகவல் அனுப்புகின்றன.
 
அறையில் உள்ள அனைவரையும் சிறு சிறு குழுக்களாகப் பிரித்துக் கொள்வோம். ஒவ்வொரு குழுவினையும் சற்று இடைவெளி விட்டுப் பிரித்து, அக்குழுக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டால் (பிற குழுக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம்) அந்த அறையில் தகுந்த முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் தானே? அதுபோல், ஒரு அதிர்வெண் பட்டை 10 மெகாஹெர்ட்ஸ் அகலத்தில் இருப்பதாய்க் கொள்ளலாம். அந்த அதிர்வெண் பட்டையை ஒரு மெகா ஹெர்ட்ஸ் அகலம் கொண்ட சிறு சிறு பட்டைகளாகப் பிரித்து ஒவ்வொரு பயனாளர்/செலுத்திக்கும் ஒரு மெகாஹெர்ட்ஸ் அகலமுள்ள அதிர்வெண் பட்டையை அளித்துப் பயன்படுத்தச் சொன்னால், அந்தப் பத்து மெகா கெர்ட்ஸ் பட்டையைச் சரியான முறையில் பயன்படுத்த முடியும் அல்லவா? இவ்வாறு அதிர்வெண்ணைப் பகுத்துப் பலர் பயன்படுத்தும் முறையே அதிர்வெண் பகுப்புப் பல்லணுகல் முறையாம் ( Frequency Division Multiple Access). ஜி எஸ் எம் திட்டத்தில் இயங்கும் தள நிலையங்களுக்குள் இவ்வாறு தான் அதிர்வெண் பிரித்துத் தரப்படுகிறது. ஒவ்வொரு தள நிலையமும் ஒரு குறித்த அதிர்வெண்ணில் இயங்குகிறது.
 
சரி, அறையுள்ள அனைவரையும் அவரவர் விருப்பப் படி, எப்போது வேண்டுமானாலும் பேச அனுமதித்து விடலாம்.ஆனால் ஒரு கட்டுப்பாடு- அனைவரும் ஒரே மொழியில் பேசக் கூடாது. ஒருவர் தமிழ் பேசலாம். மற்றொருவர் ஆங்கிலம் பேசலாம். இன்னொருவர் தெலுங்கு பேசலாம். இப்படி ஒவ்வொருவரும் பல மொழிகளில் பேசினால் குழப்பம் வரும். ஆனால், தமிழ் மொழி பேசிக்கொண்டிருப்பவரைத் தமிழ் புரிந்த இன்னொருவர் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். ஆங்கிலம் தெரிந்தவருக்குத் தமிழ் மொழி இரைச்சல் போலத்தான். அவருக்கு தமிழ் பேசுபவரின் தகவல் எந்தவொரு பொருளையும் தருவதில்லை. தெலுங்கு பேசுபவரைத் தெலுங்கு அறிந்த மற்றொருவர் மட்டுமே கவனிப்பார். பிற மொழிகள் அவருக்கு வெறும் சத்தமே. 
 
மேற்சொCDMAன்ன உதாரணம் போல்தான் குறியீட்டுப் பகுப்புப் பல்லணுகல் முறையும் இயங்குகிறது. ஒவ்வொரு செல்பேசிக்கும் அனுப்பப் படும் தகவல்கள் தனித் தனி குறியீடு செய்து (Coded) அனுப்பப் படுகின்றன. தனக்கென அனுப்பப் படும் தகவல் எது என்பதனை, வரும் தகவலைக் குறியிறக்கம் செய்து, அத்தகவல் தனக்குரியதுதான் எனத் தெளிந்த பின்னே செல்பேசிகள் பயன்படுத்துகின்றன. எந்தெந்தப் பயனாளருக்கு எந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தகவல் பரிமாற்றம் நிகழ்வதற்கு முன்னே முடிவு செய்யப்படல் வேண்டும்.
கீழுள்ள படம் மூன்று விதமான பல்லணுகல் முறைகளைக் குறித்து எளிதாய் விளக்குகிறது.படத்தில் Fஎன்பது அதிர்வெண்ணையும் ( Frequency ) T என்பது நேரத்தையும் (Time) குறிக்கின்றன.


குறியீட்டுப் பகுப்புப் பல்லணுகல் முறையில் தகவல் பரிமாற்றம் நிகழ்த்த பரவல் நிறமாலை (Spread Spectrum) எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்தும், ஸி டி எம் ஏ முறையில் எவ்வாறு தகவல்கள் குறியீடு செய்யப்படுகின்றன என்பதனையும் இனி வரும் பதிவுகளில் காண்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors