தமிழோவியம்
கட்டுரை : குளிச்சா குற்றாலம் - 2
- திருமலை ராஜன்

(சென்ற வார தொடர்ச்சி..)

வெறும் அருவிகள் நிரம்பிய மலை மட்டும் அல்ல குற்றாலம். பக்திப் பெருவெள்ளமும் ஓடும் புண்ணியதலமும் கூட. சிவபெருமானின் திருமணத்தின் போது இமய மலையில் கூடிய கூட்டத்தில் வடக்கு தாழ, தெற்கை சரிசமைத்துப் பூமியை சமனமாக்க அனுப்பப்பட்ட அகத்திய முனிவர், இங்குள்ள விஷ்ணுவின் சிலையைக் குறுக்கி உருவாக்கிய ஸ்தலம் திருக்குற்றாலம் என்கிறது தல புராணம். திருக்குற்றாலநாதர் கோவிலும் , நடராஜனின் சித்திரசபையும் முக்கிய அருவியின் கரையில் அமைந்துள்ளன. திருக்குற்றாலநாதர் என்றும் குரும்பலாவீசர் என்றும் இங்குள்ள சிவபெருமான் வழங்கப்படுகிறார். அம்மன் பெயர் குழல்வாய்மொழியம்மை. இந்தக் கோவில் சங்கு வடிவில் பேரருவியின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. அருவிச் சாரலில் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க குற்றால நாதருக்கு சுக்கு மல்லிக் காப்பி படைக்கப் படுகிறதாகக் கூறுகிறார்கள். அழகிய சிற்பங்களும் மரத்தில் வரைந்த ஓவியங்களும் நிறைந்தது கோவிலும் சித்ரசபையும். அருள்மிகு திருக்குற்றால நாதர் திருக்கோவில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப் படுகிறது. சோழ, பாண்டியர் காலக் கல்வெட்டுக் குறிப்புகளும் இந்தக்கோவிலில் உள்ளன. திரிகூட ராசப்பக் கவிராயரால் குற்றாலக் குறவஞ்சி இயற்றப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்த மலையும் அருவிகளும், அடியார்களாலும் மக்களாலும் ரசிக்கப் பட்டும், தொழப்பட்டும் வந்துள்ள திரிகூட மலயெங்கள் மலையே திருக்குற்றால மலை. கவிராயர் குற்றாலநாதரைப் பாடும் பொழுது சாட்டி நிற்கும் அண்டம் எல்லாம் சாட்டையில்லாப் பம்பரம்போல் ஆட்டுவிக்கும் குற்றால்த் தண்ணலார் என்கிறார்.

குற்றலத்தின் புற அழகை அக அழகோடு இப்படி ஒப்பிடுகிறார்

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒண்டுங்கக் காண்பது யோகியர் உள்ளம்  என்று

குற்றாலக் குறவஞ்சி குற்றாலத்தின் அழகை வர்ணிக்கும் அழகே அழகு. குற்றாலக்
குறவஞ்சி மலையின் அழகையும், அருவியின் அழகையும், அங்கு வாழும் மிருகங்களைப்
பற்றியும், அங்கு கிடைக்கும் கனிவகைகள் பற்றியும் பாடுகிறது. அதில் சில வரிகள்.


வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

தேன்ருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்க்காலுந் தேர்க்காலு வழுகும்

கிழங்குகிள்ளித் தேனெடுத்து வனம்பாடி நடப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்

என்று குற்றால அழகைப் பாடிய திரிகூட ராசப்பக் கவியாராயர்
"இமயமலை என்னுடைய தமயன் மலையம்மே" என்று குற்றாலத்தின் வனப்பு குறித்து பெருமிதப்படுகிறார்.


Kutralamகுற்றாலச் சாரலை அனுபவித்த வண்ணம் கம்பனை ரசித்திருக்கிறார்கள் டி கே சியும், ராஜாஜியும், கல்கியும். இன்றும் இலக்கியவாதிகள் கூடி இலக்கியம் பேச அல்லது சண்டை போட்டுக்கொள்ள ஆண்டுக்கொருமுறை குற்றாலம் செல்கிறார்கள். எண்ணற்ற திரைப்படங்களிலும், திரையிசைப் பாடல்களிலும் குற்றாலத்தின் அழகு அலுக்காமல் வர்ணிக்கப் படுகிறது. இயக்குனர் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்த ஒரு இயற்கை எழில் வாய்ந்த இடம் குற்றாலம். பூவாத் தலையா என்ற படத்தில் ஆரம்பித்து, அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் என்று குற்றாலத்தை அலுக்காமல் காட்டிக் கொண்டே இருந்தார். பாலச்சந்தரின் குற்றாலத்தில் மட்டும் ஆள் நடமாட்டமின்றி கதாநாயகனும் நாயகியும் மட்டுமே அருவிகளில் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருப்பார்கள், ஓடுகின்ற தண்ணியில அரைச்சு விட்டேன் சந்தனத்த சேந்துச்சோ சேரலியோ என்று கவலைப்படவோ அல்லது பாலாடை மேனி என்று நாயகியும் தோழியும் மட்டுமோ சாவகாசமாகப் பாட்டுப் பாடிக் கொஞ்சிக் குளித்துக் கொண்டிருக்க முடியும். பூவாத் தலையா படத்தில் குற்றாலமும் ஒரு முக்கிய பாத்திரமே. விகடனில் குற்றாலக் காடுகளிலும் மலைகளிலும் நடப்பதாக ஒரு மர்மத் தொடர்கதை வந்தது. இரா.முருகனது சிலிக்கான் வாசல் என்ற கதையில் வரும் கடுமையாக உழைத்து, ஓயாது நிரலிகளில் பூச்சி பிடிக்கும் ஒரு ப்ரோகிராமருக்கு லைன் ப்ரிண்டர் ஓடும் ஒசை ஒயாது விழும் அருவியின் ஓசையை நினைவுபடுத்துகிறது என்று அருமையாக உவமை ஒன்றைச் சொல்லியிருப்பார்.

புனிதத் தலம், காடுகளும் அருவிகளும் நிறைந்த மலை, மூலிகைக் குளியல், குளிச்சியான வனப்பிரேதம், இத்தகையச் சிறப்பு வாய்ந்த குற்றாலத்தை, உலகத்தில் வேறு எங்கும் காண முடியாத இயற்கை அதிசயத்தை நாம் எந்த லட்சணத்தில் வைத்திருக்கிறோம் என்பதை கொஞ்சம் ஒவ்வொரு அருவியாகப் போய் பார்த்து விடலாமா? அட குளிக்க வேண்டாங்க சும்மா கூட மாத்திரம் வாங்க, அட குளிராது, ஜல்பு பிடிக்காது, சும்மா ஜிலு ஜிலுன்னு இருக்கும் சும்மா பயப்படாம வாங்க.

Kutralamகுற்றாலத்தை அனுபவிக்க ஒரு முறை உள்ளது. நல்ல சீசன் தருணங்களில் அருவிகளில் வெள்ளம் விழுகிறது என்று பேப்பரில் செய்தி வரும் சமயங்களில் துணிந்து கிளம்ப வேண்டும். வெள்ளம் என்று பார்த்தவுடனேயே மக்கள் பலரும் பயந்து கொண்டு வரமாட்டார்கள். கூட்டமில்லாமல் இருக்கும். அந்த தருணங்களில் மலைச்சாரலில் ஒரு காட்டேஜ் வாடகைக்கு எடுத்துக் கொண்டு, கூடவே ஒரு நல்ல சமயல்காரரையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். அருவியில் குளிக்கக் கூடாது சும்மா அப்படியே அதைப் பார்த்துக் கொண்டே அழகை அணு அணுவாக ரசிக்க வேண்டும், சாப்பிட வேண்டும், நண்பர்களுடன் அரட்டையே, சீட்டோ, புத்தகம் படிப்பதோ, அடித்துக் கொள்ளாமல் இலக்கியம் பருகுவதோ செய்து கொண்டு சாரலில் நனைய வேண்டும். கொஞ்ச நேரத்தில் வெள்ளம் நின்று குளிக்க அனுமதிக்கும் பொழுது ஆட்கள் இருக்க மாட்டார்கள். நாம் மட்டும் நிம்மதியாகக் குளிக்கலாம். அப்பொழுது தலையில் இருந்து கால் வரை எண்ணெய் தேய்த்துக் கொண்டு போய் அருவியின் அடியில் நிற்க வேண்டும். முதலில் முதுகை, இடுப்பை, பின் தலையை என்று ஒவ்வொரு பாகமாக இடியென கீழே இறங்கும் அருவி நீரில் காட்டினால் இயற்கை என்னும் இளைய கன்னி, அப்படியே தண்ணீராலான மசாஜ் செய்து விடுவாள். அந்த மசாஜுக்கு முன் நிஜ அழகிகள் செய்யும் மசாஜ் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். பின்னர் அப்படியே குற்றாலம் துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டு, ஈர வேட்டி காய நடக்க வேண்டும் , சாரலில் முழுக்க முழுக்க மீண்டும், மீண்டும் நனைய வேண்டும், காற்றில் காய வேண்டும், மீண்டும் இன்னொரு அருவி, இன்னொரு சாரல், இன்னொரு காயல், பசி வந்தால் சமையல்காரர் சமைத்த அருமையான உணவை வெட்டி விட்டு, மீண்டும் சாரலை ரசிக்க உட்காரலாம். ஓயாது கானகங்கள் எழுப்பும் பேரோசையை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சீட்டுக் கட்டோ, புத்தகமோ போரடிக்கையில், நடு இரவில் அருவிக்குச் சென்று குளித்து விட்டு வரலாம். இடையிடையே மலையேறி காடுகளுக்குள் செல்வதோ, பாறைகளில் ஏறிப் பழகுவதோ, பறவைகளையும், பிற காட்டு மிருகங்களையும் அடையாளம் கண்டு படம் பிடிப்பதோ அல்லது சும்மா உட்கார்ந்து கொண்டு சுத்தமான பொதிகைத் தென்றலை உள்வாங்கிக் கொண்டு தியானம் இருப்பதோ என்று எது வேண்டுமானாலும் செய்யலாம். அந்த நேரத்தில், அந்தச் சூழலில், அதன் அருகாண்மையில் இருப்பதுதான் முக்கியம். அருகில் உள்ள பிற ஊர்களுக்குச் சென்று அங்குள்ள கோவில்களையோ, மலைகளையோ, காடுகளையோ, அந்தக் காடுகளில் உள்ள அருவிகளையோ கண்டு வரலாம். தண்ணீர் அடிப்பவர்கள் அடித்த பின் அறையில் அமர்ந்து கொண்டு இயற்கையை ரசிப்பதோடு, சாரலை ஸ்பரிசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், அருவிப் பக்கம் போனால அநாவசியமாக போலீஸ்காரரின் லத்தியை ஸ்பரிசிக்க வேண்டி வரும்.

முதலில் பழைய குற்றாலம் என்ற அருவியைப் பார்த்து விடலாம். இந்த அருவியை அடைய சற்று மலை மேல் ஏறிச் செல்ல வேண்டும், கீழே உள்ள சாலையிலிருந்து அருவி வரை சாலை செல்கிறது. சாலையின் உள்ளே நுழைந்தவுடனே துவாரபாலகர்கள் கடமையாக 20 ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு அருவிக்கும் நிறுத்தக் கட்டணமாகக் காருக்கு 20 ரூபாய் தட்சணை. சீசன் நேரங்களில்  அருவியை அடையும் முன்பே சிலு சிலுவென தண்ணீர்த் திவலைகள் நம்மேல் பூவாரிப் பொழியும், இந்த முறை அருவியில் ஏதோ போனால் போகிறது, இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள்  லேசாக தலையை நனைத்துக் கொண்டு போகட்டும் என்பது போல சோம்பலாக வழிந்து கொண்டிருந்தது. கீழே ஆயிரக்கணக்கான மக்கள் பெர்முடா டிரவுசர்களிலும், துண்டுகளிலும், நைட்டிகளிலும், தலை நிறைய எண்ணெய் தடவிக் கொண்டு தங்கள் தலையைக் கொடுக்கக் காத்திருக்கின்றனர்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors