தமிழோவியம்
அடடே !! : தலைகீழாய் ஒரு சாதனை
- திருமலை கோளுந்து

சாதனை என்ற மூன்றெழுத்து தான் மனிதர்களை எதையும் செய்யத் தூண்டுகிறது. சென்னை எல்.ஜ.சி கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தலைகீழாக இறங்கி சாதனை செய்வதே தனது லட்சியம் என்று சொல்லும் நீராத்திலிங்கம் அந்த முயற்சியை செய்து முடிக்க வழி முறைகள் தெரியாமல் முழிக்கிறார்.  

பொதுவாக நாம் படிக்கட்டுகளில் வேகமாக இறங்கி வந்தாலே தடுமாறி கீழே விழுந்து விடுவோம். ஆனால் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த இளைஞரான நிராத்திலிங்கம் படிகளில் சர்வ சாதாரணமாக தலைகீழாக இறங்கி சாதனை செய்து கொண்டிருக்கிறார். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சிறுவயதில் இருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி எனக்கு இருந்து வந்தது. அதன் காரணமாக யோகா, ஜிம்னாஸ்டடிக் போன்ற பயிற்சிகளை கற்று வந்தேன். இந்த நிலையில் படிக்கட்டுகளில் தலைகீழாக இறங்கி சாதனை செய்தால் என்ன என்று எனக்கு தோன்றியது. அதனால் மலை உச்சிகளில் இருக்கும் கோவில்களின் படிக் கட்டுகளில் தலைகீழாக இறங்கி பயிற்சி எடுத்தேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பயிற்சியை செய்தேன். இந்த சாதனையை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்ட வேண்டும் என்பதற்காக 2002ம் ஆண்டு திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையில் உள்ள 204 படிகளை 1 நிமிடம் 25 நொடிகளில் தலைகீழாக இறங்கி சாதனை செய்தேன். இச்சாதனையை தற்போழுது விளையாட்டுத்துறை அமைச்சரான இன்பத்தமிழன் முன்னிலையில் செய்து காட்டினேன். அதே போல முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் பாராட்டி பரிசு கொடுத்துள்ளார்.

இவரது சாதனையின் மற்றொரு முயற்சியாக சமீபத்தில் ராஜபாளையம் அருகே இருக்கும் சஞ்சீவி மலையின் உச்சிப் பகுதியில் இருந்து 301 படிகளை தலைகீழாக 4 நிமிடம் 29 விநாடிகள் இறங்கி சாதனை செய்துள்ளார். இவரின் இச்சாதனையை அனைத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் பாராட்டி பெருமைப் படுத்தியுள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள அனைவரும் இவரது அபார திறமையை பார்த்து வியந்தாலும் இவரது மனதில் பெரும் கவலை இருந்து கொண்டே இருக்கிறது.

படிக்கட்டுகளில் தலைகீழாக இறங்குவது சாதாரண ஒன்றல்ல என்றாலும் இதற்கு மருத்துவர்களின் ஆலோசனைப் படி தான் செயல்படுகிறேன். மருத்துவர்கள் உடல் தகுதி சான்றிதழ் கொடுத்தால் தான் படிக்கட்டுகளில் இறங்குவேன். அப்படி தலைகீழாக இறங்கும் பொழுது உயிருக்கு ஆபத்து என்றால் நானே பொறுப்பு என்று எழுதி கொடுத்து விட்டுத் தான் தொடங்குவேன் என்று சொல்லும் இவர் நான் ஒரு தனியார் மூலிகை நிறுவனத்தில் சாதாரண பணியாளராக வேலை பார்த்து வருகிறேன். சொற்ப மாத வருமானத்தில் எனது குடும்பத்தை நடத்தி வரும் என்னை பலரும் பாராட்டுகின்றனர். ஆனால் அந்தப் பாராட்டால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பது தான் உண்மை. எனது வருமானத்தில் பெரும் பகுதியை சாதனை செய்ய வேண்டும் என்பதற்காக செலவிட்டு வருகிறேன். அதனால் குடும்பத்தை நடத்துவதில் பெரும் சிரமமாக இருக்கிறது  என்கிறார் வருத்தத்தோடு.

இவரது சாதனையை பல தன்னார்வ அமைப்புக்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், சென்னையில்  செயல்படும் பாலம் அமைப்பு போன்றவை பாராட்டி பரிசுகள் கொடுத்துள்ளன. இந்தப் பரிசுகளை வீட்டில் வைக்க இடம் இல்லாமல் கில்லி படத்தில் விஜய் வாங்கும் கோப்பைகளை மரப் பெட்டியில் போட்டு வைத்திருப்பது போல் இவரும் ஒரு பெரிய பையில் போட்டு வைத்துள்ளார்.

எனது வாழ்நாள் கனவு என்று சொன்னால் சென்னை எல்.ஜ.சி. கட்டிடத்தில் தலைகீழாக இறங்கி சாதனை செய்ய வேண்டும் என்பது தான் என்கிறார். ஆனால் அதற்கு உதவும் படி  தமிழக அரசிற்கும், விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் பல முறை மனு அனுப்பியும் பயன் இல்லாததால் என்ன செய்வது என்று முழிக்கிறார். தமிழக அரசும், விளையாட்டு அமைச்சரும் இதற்கு அனுமதி அளித்தால் உலக அளவில் இச்சாதனையை செய்து கின்னஸ் சாதனை படைப்பேன் என்கிறார். சென்னைக்கு சென்றால் பல ஆயிரங்கள் காலியாகிவிடும் என்பதால் இவரிடம் தயக்கம் இருக்கிறது. இவரது முயற்சியை உள்ளுர் பிரமுகர்கள் பாராட்டி உதவி செய்து வருகின்றனர் என்பது இவருக்கு ஆறுதலான ஒன்று. தமிழகத்தின் பெருமையை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய காத்திருக்கும் இவரிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது என்பது தான் விஷேசம். இவர் டீ, காபி இவைகளை தொடுவதே கிடையாதாம். இவர் யோகா மாஸ்டராகவும் இருக்கிறார். இவரிடம் யோகா கற்கும் மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் பரிசுகளை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சாதாரணமாக ஒரு மனிதன் தலைகீழாக ஒரு நிமிடம் நிற்பது என்பது எளிதல்ல. காரணம் ரத்த ஓட்டம் முழுவதும் தலை பகுதிக்கு வந்து மனிதனை மயக்கம் அடையச் செய்து விடும். ஆனால் நீராத்திலிங்கம் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் பயிற்சி எடுத்து சாதனைகளை செய்து வருகிறார். தலைகீழாக வேகமாக இறங்குவது எளிதில் செய்ய முடியாத காரியம். அதனால் அவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்கிறார் அவரை கவனித்துவரும் மருத்துவர் ஒருவர்.

35 வயதான நீராத்திலிங்கம் இன்னும் சில ஆண்டுகளில் எவ்வளவு சாதனை செய்ய முடியுமோ அத்தனையும் செய்து விட வேண்டும் என முனைப்புடன் அதற்கு தமிழக அரசும், தொண்டு அமைப்புகளும் உதவ வேண்டும் என்பது தான் இவரின் எதிர்பார்ப்பு. செய்வார்களா? அதே போல இவரது சாதனையை இந்தியாவில் உள்ள லிம்கா, மற்றும் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்வது எப்படி என்றும் வழி தெரியாமல் இருக்கிறார். அதற்கும் யாராவது வழி காட்டினால் நன்றாக இருக்கும் என்கிறார் கனிவோடு.

Copyright © 2005 Tamiloviam.com - Authors