தமிழோவியம்
திரைவிமர்சனம் : சிவகாசி
- மீனா

எப்படி திருப்பாச்சியில் விஜய் மற்றும் மல்லிகாவின் அண்ணன் தங்கை செண்டிமென்டை மட்டுமே வைத்து முழுப்படத்தையும் ஒப்பேற்றினாரோ அதே மாதிரி சிவகாசியிலும் அண்ணன் மற்றும் அம்மா, தங்கை செண்டிமென்ட் கூடவே கொஞ்சம் காதல் - கொஞ்சம் சண்டை என்று கலந்து கட்டி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பேரரசு.

சென்னை டி.நகர் ஏரியாவில் வெல்டிங் பட்டறை நடத்திவரும் விஜய், ஏரியாவையே கலக்கி வரும் ரெளடியை பந்தாடுகிறார்.. ஒரு மோதலில் அசினை சந்தித்து பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற தாத்தா காலத்து அட்வைஸை டன் கணக்கில் அவருக்கு வழங்குகிறார். வழக்கம் போல மோதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது இருவருக்குமான பழக்கம். அசின் பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் விஜய் அவர் மீது வைத்துள்ள உண்மைக் காதலை உணர்ந்து அசினின் அப்பா மற்றும் அண்ணன்கள் அசினை முழு மனதோடு விஜய்க்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கிறார்கள்.

மாப்பிள்ளையின் ஸ்டேடஸை கொஞ்சம் உயர்தலாம் என்று அசினின் அண்ணன்கள் விஜயிடம் பண விஷயங்களைப் பற்றி பேசப்போக, அடிதடியில் முடிகிறது பேச்சுவார்த்தை. தன் அண்ணன்களை விஜய் அடித்த விபரம் அறிந்து விஜயிடம் ஆத்திரப்படும் அசின், "அனாதையான உனக்கு எங்கே அண்ணன் தங்கை பாசம் எல்லாம் புரியப்போகிறது? " என்று வெடிக்கிறார். அப்போது தான் விஜய் தன் பிளாஷ்பேக்கை ஆரம்பிக்கிறார். நல்ல செல்வாக்கான குடும்பத்தில் ஒரு அண்ணன் மற்றும் தங்கையுடன் பிறந்த விஜய் சிறு வயதிலேயே அண்ணன் செய்த ஒரு தவறுக்கு தன் மேல் பழியைப் போட்டுக்கொண்டு ஊரை விட்டு 15 வருடங்களுக்கு முன்பாக தான் ஓடிவந்த கதையைச் சொல்கிறார். தன் குடும்பத்தோடு வந்து பெண் கேட்டுத்தான் அசினைக் கல்யாணம் செய்வேன் என்று அசினுக்கு வாக்கு கொடுத்துவிட்டு தன் சொந்தபந்தங்களைத் தேடி சொந்த ஊர் வருகிறார்.

அண்ணன் பிரகாஷ்ராஜின் அடாவடி செயல்களால் கிட்டத்தட்ட தெருவிற்கே வந்துவிட்ட தன் அம்மா, மற்றும் தங்கையின் நிலையைப் பார்த்து மனம் கொதிக்கும் விஜய் தான் யார் என்பதைச் சொல்லாமலேயே அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிறார். இதன் விளைவாக பல முறை பிரகாஷ்ராஜுடன் மோதுகிறார். உச்சகட்டமாக அந்தத் தொகுதி எம்.எல்.ஏ வாக பல முறை அதிகாரம் செய்துவந்த பிரகாஷ்ரஜுக்கு எதிராக தன் தங்கையையே நிறுத்துகிறார். தேர்தலில் யார் ஜெயித்தார்கள்? விஜய் யார் என்ற உண்மை எப்போது தெரிகிறது? அயோக்கியனாகவே வாழ்வைக் கழிக்கும் பிரகாஷ்ராஜ் என்ன ஆகிறார்? இதுவே மீதிக்கதை.

அப்படியே ரஜினி ஸ்டைலில் விஜய். ஊரில் உள்ள நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் கெட்டப்பை மாற்றி ஏகப்பட்ட கஷ்டப்பட்டு வரும் வேளையில் ரஜினி மாதிரியே கொஞ்சூண்டு செண்டிமெண்ட், காதல், கேரக்டரோடு கலந்த காமெடி, ஏகப்பட்ட ·பைட் என்று தன் பார்முலாவில் துளியும் மாற்றமிலாமல் நடித்திருக்கிறார் விஜய். பிரகாஷ்ராஜோடு மோதும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பு. மற்றபடி விஜயிடமிருந்து புதிதாக ஒன்றுமே இல்லை.

பிரகாஷ்ராஜ் - அண்ணனாக வந்து அராஜகம் பண்ணுகிறார். வெத்துப் பேப்பருக்கு 10 லட்சம் ரூபாயைத் தூக்கிக் கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது அவருக்கும் விஜய்குமான போட்டி. தேர்தல் பிரசாரத்திற்காக விஜய் கோஷ்டி எம்.ஜி.ஆர், ரஜினி போன்று வேஷமிட்டவர்களை மேடையேற்ற அதை முறியடிக்க நினைத்து நயன்தாராவை தனக்காக பிரசாரம் செய்யுமாறு வேண்டி அழைத்துவருகிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் முடிவில் நயன்தாரா விஜய்கோஷ்டிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய - மனுஷன் நொந்து போகிறாரே!! சூப்பர்.  படத்தின் பல இடங்களில் தனக்கும் காமெடி செய்யவரும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

விஜயைக் குழப்பும் விதமாக அவ்வப்போது அசின் தான் வேறு.. தன் தங்கை வேறு என்று உதார்விடும் காட்சிகளில் மட்டுமே கொஞ்சூண்டு நடித்திருக்கிறார். மற்றபடி டம்மியாக வந்து போகிறார் (பாடல் காட்சிகள் தவிர). விஜயின் அம்மாவாக கீதா. பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. படத்தில் பாஸ்கர், சிட்டிபாபு, கஞ்சா கருப்பு போன்றவர்களும் இருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. மொத்தத்தில் முதல் பத்தியில் குறிப்பிட்டபடி கதை - கெட்டப் என்றெல்லாம் ரொம்பவும் மெனக்கெடாமல் வெறும் மசாலா ஐட்டங்களை தூக்கலாக போட்டு ஒரு படம் பண்ண ரொம்பவும் துணிச்சல் வேண்டும். விஜய், பேரரசு, ஏ.எம் ரத்னம் - இவர்கள் அனைவருக்கும் அந்த துணிச்சல் நிறையவே இருக்கிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors