திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் தென் மாவட்டங்களில் விஜய் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவகாசி திரைப்படம் ஓடும் திரையரங்குகளுக்கு விசிட் அடித்து ரசிகர்களோடு படம் பார்த்து உற்சாகமாகிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்..
கேள்வி : இயக்குனர்கள் பல ரகங்களில் இருக்கிறார்கள். நீங்கள் எந்த வகை என்று சொல்ல முடியுமா?
பேரரசு : நான் ஒரு கமர்சியல் படங்களை வெற்றிகரமாக கொடுக்கக் கூடிய இயக்குனர். திருப்பாச்சி படம் பெற்ற வெற்றியை விட சிவகாசி அதிகளவு வசூலில் செய்து சாதனை படைத்து வருகிறது. குடும்பத்தோடு வந்து படம் பார்க்க வேண்டும் என்பது தான் நான் எடுக்கும் படத்தின் நோக்கம். எனது இந்த வெற்றி ஆண்டவன் கொடுத்த வெற்றி. இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வேன்.
கேள்வி : நடிகர் விஜயை வைத்து இரண்டு படங்களை எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். இந்த வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?
பேரரசு : மகிழ்ச்சியாக இருக்கிறது. திருப்பாச்சியை வெற்றி பெற வைத்ததை போலவே தற்பொழுது சிவகாசியையும் ரசிகர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். அதற்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய்யோடு நான் வைத்த கூட்டணி சாதாரண கூட்டணி கிடையாது. அது ஒரு கில்லி கூட்டணி என்று சொல்லலாம். தமிழ் படங்களில் காதலை மையமாகக் கொண்ட கதைகள் அதிகமாக வருகின்றன. அதனால் நான் பாசத்தை மையமாக கொண்டு படங்களை எடுக்க நினைத்து அதனை செயல்படுத்தினேன். அதில் வெற்றியும் பெற்று இருக்கிறேன். திருப்பாச்சியில் தங்கை பாசத்தை கருவாக கொண்டு எடுத்தேன். சிவகாசியில் அம்மா பாசத்தை மையமாக கொண்டு எடுத்துள்ளேன். அதுவும் வெற்றி பெற்றுள்ளது.
கேள்வி : நீங்கள் நடிகர் அஜித்தை வைத்து எடுக்கும் திருப்பதி எதனை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது?
பேரரசு : திருப்பதி படம் நட்பை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எனது சொந்த ஊர் பகுதியான சிவகங்கை பகுதியில் எடுக்க உள்ளேன்.
கேள்வி : நடிகர் அஜித், விஜய் எதிரும் புதிருமாக இருந்தவர்கள். அவர்களை நண்பர்களாக்கிய பெருமை உங்களை சேரும். இருவரையும் எப்படி பேச வைத்தீர்கள்?
பேரரசு : விஜய், அஜித் மோதல் என்ற செய்தி பெரும் வருத்தத்தை திரை உலகினருக்கு தந்தது. இருவரையும் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க வைத்தால் நல்லது என முடிவு செய்தேன். அதன்படி திருப்பதி பட பூஜையில் கலந்து கொள்ள விஜயை அழைத்தேன். அவரும் வந்தார். அஜித்தை கட்டி பிடித்து வாழ்த்தினார். அஜித்தும் வாழ்த்தினார். இது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. தேவையில்லாத சர்ச்சரவுகளுக்கு இவர்களது சந்திப்பு முற்றுப்புள்ளி வைத்தது.
கேள்வி : இருவரையும் வைத்து நீங்கள் படம் எடுக்கப் போவதாக பேச்சு கிளம்பி இருக்கிறதே?
பேரரசு : அஜித் விஜய் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படம் எடுப்பேன். அதற்கு முன்பாக அஜித் படத்தில் விஜயை கெஸ்ட் ரோலிலும், விஜய் படத்தில் அஜித்தை கெஸ்ட் ரோலிலும் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என் நினைக்கிறேன். அதற்கான முயற்சியை நான் கண்டிப்பாக செய்வேன்.
கேள்வி : சினிமா என்பதே ஆபாசம், ஒரு குத்துப் பாட்டுக்கு ஒரு நடிகையை ஆட வைப்பது என்ற கலாச்சாரம் பரவி வருகிறது. அதில் நீங்களும் அடக்கம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பேரரசு : ஆபாசம் இல்லாத படத்தை கொடுக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். இதில் நான் தெளிவாக, குறியாக இருக்கிறேன். திருப்பாச்சி படத்தில் சாயாசிங், சிவகாசியில் நாயன்தாரா ஒரு பாடலுக்கு ஆடி உள்ளனர். பெரும்பாலும் இத்தகைய பாடல்களில் கவர்ச்சி உடைகளைத் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் நான் சேலை கட்ட வைத்து ஆபாசம் இல்லாமல் தான் பாடல் காட்சிகளை எடுத்துள்ளேன்.
கேள்வி : படத்தை வெற்றி பெற வைப்பது. பணம் சம்பாதிப்பது தான் ஒரு இயக்குனரின் நோக்கமா?
பேரரசு : நான் வாங்கும் சம்பளத்திற்கு படம் எடுப்பதை விட ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்களின் ரசனைக்கு படம் எடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவன். ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். சாதாரண கிராமப்புற, அடித்தட்டு மக்களையும் தியேட்டருக்கு வரவழைத்து படம் பார்க்க வைக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதனை ஒரு லட்சியமாகவே கருதுகிறேன். அதன்படி தான் நான் படங்களை இயக்கினேன். இயக்குவேன்.
|