தமிழோவியம்
கவிதை : புதைந்து போன இரகசியம்!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

  சாலையில் விபத்து!
  விபத்துக்காளானவர்
  பலத்த தலைக் காயம்
  உடற் காயம்
  எலும்பு முறிவுகளுடன்
  மருத்துவ மனையில்...
  தீவிர சிகிச்சைப் பிரிவில்
  உணர்வற்ற நிலையில்
  அசைவற்ற உடல்!
  செயற்கைப் பொறிகள் மூலம்
  சுவாசமும்
  இதய இயக்கமும்!

  வெளியில்
  கவலையில் தோய்ந்து
  வாடிய நிலையில்
  உறவுகள்!
  மனைவி
  தன் தாலிக்காகவும்
  குழந்தைகள் தந்தைக்காகவும்
  உடன்பிறப்புகள் சகோதரனுக்காகவும்
  தாய் தனயனுக்காகவும்
  இறைவனிடம்
  வேண்டுதல்கள்
  பிரார்த்தனைகள்
  விடுத்த வண்ணம்!

  முன்னேற்றமிருக்கிறதா?
  கேட்கும் போதெல்லாம்
  'அடுத்த 48 மணிநேரம்
  எதுவும் சொல்வதற்கில்லை'
  என்றே மருத்துவரின் பதில்!
  அவ்வப் போது
  சிகிச்சைக்காக எனக்கூறி
  மனைவியிடம்
  கையொப்பம் பெற்றுக் கொண்டது
  மருத்துவமனை நிர்வாகம்!

  இப்படியே
  வாரங்களிரண்டு ஓடிட
  'மூளை இறப்பின்
  காரணமாய்
  மரணம்'
  என்ற அறிவிப்புடன்
  சிகிச்சைக் கட்டணம்
  சில இலட்சங்கள் கேட்டு
  மருத்துவ மனையின்
  நிர்ப்பந்தம்!

  நிர்வாகம் கொடுத்த தொகை
  நண்பர்கள் உறவினர்கள்
  தந்த தொகை
  நகை நட்டுகள் விற்று
  வந்த தொகை
  இவை போதாமல்
  கடனாய் உடனாய்
  பெற்ற தொகையென
  அனைத்தையும்
  மொத்தமாய் செலுத்திவிட்டு
  உடலையும் கடனையும்
  சுமந்து சென்றது
  சுற்றம்!

  இதயம்
  ஈரல்
  சிறுநீரகமென
  இறக்கும் முன்பே
  உறுப்புகளைக்
  களவாடியவர்கள்
  பாகம் பிரித்துக் கொண்டனர்
  மருத்துவ மனையில்
  வெள்ளை உடுப்பில்
  சேவையின் பெயரில்
  சமுதாயத்தின்
  ஒட்டுண்ணி
  சாருண்ணிகள்!

  உண்மை
  உணராமலேயே
  (வெளிவராமலேயே)
  உடலை இடுகாட்டுக்குத்
  தூக்கிச் சென்றனர்
  உறவுகள்!
  புதைக்கப் பட்டது
  உடல்!
  புதைந்து போனது
  உறுப்புகள் களவு போன
  இரகசியம்!!

Copyright © 2005 Tamiloviam.com - Authors