தமிழோவியம்
திரைவிமர்சனம் : அது ஒரு கனாக்காலம்
- மீனா

கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு 10 ஆண்டு ஜெய்ல் தண்டனை அனுபவிக்கும் கைதி தனுஷ். சிறையிலிருந்து தனுஷ் தப்புவதிலிருந்து துவங்குகிறது படம். சண்முகராஜன் தலைமையில் போலீஸ் தனுஷை வலைவீசித் தேட ஆரம்பிக்கிறது. எப்படியோ போலீசிடமிருந்து தப்பும் தனுஷ் ஊட்டி போக ஒரு லாரிக்காரரின் உதவியைக்
கேட்கிறார். பாதி வழியில் லாரிக்காரர் தனுஷ் போலீஸிலிருந்து தப்பியர் என்பதைத் தெரிந்துகொண்டு அவரை போலீஸில் ஒப்படைக்க நினைக்க, அவரிடம் தன் கதையைக் கூற ஆரம்பிக்கிறார் தனுஷ்.

பி.ஏ முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தனுஷ். எப்போதும் மகனைப் பற்றிக் கவலைப்படும் அப்பா டெல்லி கணேஷ். ஒரு கட்டத்தில் தனுஷின் பெற்றோர் இருவரும் ஒரு வேலையாக 10 நாட்கள் வெளியே செல்ல நேருகிறது. அப்போது தனுஷின் வீட்டிற்கு வழக்கமாக வரும்
வேலைக்காரிக்கு பதிலாக அவரது மகள் பிரியாமணி வருகிறார். சிறு வயதில் நண்பர்களாக பழகிய தனுஷ¤ம் பிரியாமணியும் இந்த சந்திப்பினால் காதலர்களாகிறார்கள். ஒரு நாள் எதேச்சையாக மகனை வீட்டு வேலைக்காரி மகளுடன் நெருக்கமாக பார்த்துவிடும் டெல்லிகணேஷ் தாம் தூம் என்று கத்த - என்ன ஆனாலும் இன்னும் 6 மாதத்தில் உன்னை நான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிரியாவிற்கு உறுதியளிக்கிறார் தனுஷ்.

Dhanush, Priya Maniவேலை ஏதும் இல்லாத நிலையில் அப்பாவைப் பகைத்துக்கொண்டு தான் எப்படி கல்யாணம் செய்துகொள்வது என்று தனுஷ் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது நின்று கொண்டிருக்கும் போலீஸ் வண்டி மீது காரை இடித்துவிடுகிறார் தனுஷின் நண்பர். விளைவு நண்பர்கள் அனைவரையும் கைது செய்கிறது போலீஸ். ஒரு நாள் லாக்கப்பில் இருந்தால்தான் மகனுக்கு புத்திவரும் என்று நினைத்து தனுஷை அன்று இரவு ஜாமினில் எடுக்க மறுத்துவிடுகிறார் டெல்லிகணேஷ். இந்நிலையில் லாக்கப்பில் தன்னுடன் தகாத உறவில் ஈடுபட நினைக்கும் ஒருவனை எதிர்பாராதவிதமாக தனுஷ் கொன்றுவிட - 10 வருட ஜெயில் தண்டனை கிடைக்கிறது. காதலிக்கு தான் கொடுத்த வாக்குறுதி எபோதும் நினைவில் இருக்க, சரியான சமயம் பார்த்து சிறையிலிருந்து தப்புகிறார் தனுஷ். இது வரை பிளாஷ்பேக்.

சிறையிலிருந்து தப்பியவன் எப்படியும் காதலியைப் பார்க்க வருவான் என்று யோசித்து தனுஷைப் பிடிக்க பிரியாவின் வீட்டில் காத்திருக்கிறது சண்முகராஜன் தலைமையிலான போலீஸ் படை. நினைத்ததைப் போலவே தனுஷ் அங்கே வர கோழி அமுக்குவதைப் போல அமுக்கிப் பிடிக்கிறார்கள். தனுஷ் - பிரியாவின் காதல் என்ன
ஆயிற்று? இருவரும் எப்போது சேர்கிறார்கள் என்பதே படத்தின் முடிவு.

இந்தப் படத்தில் தனுஷ் ஒன்றுமே செய்யவில்லை போலிருக்கிறது. பாலுமகேந்திரா என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் எப்படி நடிப்பது என்று தனுஷிற்கு ஏற்கனவே அவரது அப்பா மற்றும் அண்ணன் வேண்டிய டியூஷன் எடுத்துவிட்டதால் பிரியாவுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் புகுந்து
விளையாடியிருக்கிறார். மற்றபடி தனுஷை சண்டைக் காட்சிகளில் பார்க்கும்போது சிரிப்பு வருவதை தவிர்க்க இயலவில்லை. உடம்பை கொஞ்சமாவது தேற்றினால் நல்லது (எலும்பும் தோலுமாக ஓமக்குச்சி நரசிம்மனுடன் போட்டிபோட தயாராக இருக்கிறார்).

தனுஷ¤டன் போட்டி போட்டுக்கொண்டு சில இடங்களில் முத்தங்களைப் பதிக்கும் பிரியாமணி பல இடங்களில் நடிப்பில் முத்திரையும் பதிக்கிறார். காதல் - கோபம் - கெஞ்சல் என்று எல்லாவிதமாக பாவங்களையும் அருமையாக முகத்தில் காட்டுகிறார்.  மேக்கப் இல்லமலேயே பார்க்க அழகாக இருக்கும் கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்று தைரியமாகச் சொல்லலாம்.

ஒரு சராசரி அப்பாவாக டெல்லிகணேஷ். மகனின் பொறுப்பற்ற தன்மையை கண்டு பொறுமுவது, காதலைக் கண்டு கொதிபது, கடைசியில் மனைவியை இழந்து மகனைச் சிறையில் பார்க்கும்போது உருகுவது என்று தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை அழகாகச் செய்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் சண்முகராஜன் புத்திசாலித்தனமாக தனுஷை பிடிக்கிறார். ஆனால் கடைசியில் .. கஷ்டம்.

இசை இளையராஜா. வழக்கம்போல பிண்ணனி இசையில் அசத்துகிறார். மற்றபடி பாடல்கள் எல்லாம் சுமார் ரகம்தான். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என்று பல அவதாரம் எடுத்திருக்கும் பாலுமகேந்திரா ஒளிப்பதிவில் அசத்தியிருந்தாலும் கதையில் ரொம்பவே கோட்டை விட்டிருக்கிறார். மேலும்
தனுஷ் - தேஜாஸ்ரீ யின் கவர்ச்சி ஆட்டம் ரொம்ப ஓவர். மொத்தத்தில் மூடுபனி போன்ற படங்களை எடுத்த பாலுமகேந்திரா தன் பழைய டச்சைத் தொலைத்துவிட்டார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors