தமிழோவியம்
திரைவிமர்சனம் : கண்ணாமூச்சி ஏனடா
- மீனா

மகளின் காதலை வெறுக்கும் அப்பா அக்காதலை உடைக்க திட்டம் போடுகிறார் - இந்த முயற்சியில் உடைகிறது  அவரது சொந்த வாழ்க்கை - தன் காதல் தோற்றாலும் காதலியின் பெற்றோரை இணைத்து வைக்க முயல்கிறார் நாயகன் - முடிவு என்ன - இதுதான் கண்ணாமூச்சி ஏனடாவின் கதைச் சுருக்கம்.

Sathyaraj, Prithvirajகாவல்துறை அதிகாரியான சத்யராஜின் அன்பு மகள் சந்தியா. மனைவி ராதிகா. மலேஷியாவுக்கு படிக்கச் செல்லும் சந்தியா அங்கு தானுண்டு தன் படிப்புண்டு என்றிருக்கும் நேரத்தில் பிருத்விராஜை சந்திக்க நேர்கிறது. பிருத்வி சந்தியாவைக் கண்டதும் அவரைக் காதலிக்க ஆரம்பிக்க - முதலில் அவரது காதலுக்கு நோ சொல்லும் சந்தியா போகப்போக பிருத்வியின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

காதலனைப் பிரிந்து தன்னால் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு சந்தியா தள்ளப்பட - இந்தியாவில் நடைபெற இருக்கும் சத்யராஜ் ராதிகாவின் வெள்ளிவிழா மணநாளுக்கு சந்தியாவை வலுக்கட்டாயமாக அழைத்துவருகிறார் பிருத்வி. மகளின் காதலையும் காதலனையும் பெருந்தன்மையாக ராதிகா ஏற்றுக்கொள்ள - சத்யராஜ் பிருத்வியை சதா சந்தேகக்கண்கொண்டே பார்க்கிறார்.

மலேசியாவில் இருந்து வரும் பிருத்வியை சத்யராஜ் ஒரு குற்றவாளியைப்போல போலீஸ் ஜீப்பில் அழைத்து செல்வதும்,ரவுடியை திட்டுகிற மாதிரி பிருத்வியை வறுத்தெடுப்பதும் கலகல கலாட்டா. சத்யராஜின் லொள்ளுகளுக்கு ஈடுகொடுத்து கிச்சுகிச்சுகிறார் பிருத்வி. காமெடி சென்டிமென்ட் இரண்டையும் பிருத்வி கையாள்கிற விதம் அநாயாசம். தோன்றும் காட்சிகளிலெல்லாம் அவர் பேசிக்கொண்டே இருப்பது அநாவசியம். விரைப்பு, முறைப்பு,. சிரிப்பு என கலந்து கட்டி அடித்திருக்கிறார் சத்யராஜ்.

கடைசி வரை எந்த அளவிற்கு காமெடி செய்தாரோ அத்தனையையும் மிஞ்சும் வகையில் சத்யராஜின் கிளைமாக்ஸ் நடிப்பு உருக்கமாக அமைந்தது படத்திற்கு பெரிய பிளஸ். மனைவி ராதிகாவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க தயங்கி, பின்பு உடைந்து நொறுங்குகிறபோது சென்ட்டிமென்டில் அசத்துகிறார்.

பிருத்விராஜுக்கு ஏற்ற கேரக்டர். நிறைவாகச் செய்துள்ளார். அழகாக பேசி யதார்த்த நடிப்பில் கவர்கிறார். சத்யராஜை முதன்முதலாக சந்தித்து அவருடன் வீட்டிற்கு செல்லும்போது போலீஸ் ஜீப்பில் வயர்லெசில் கைதியின் விசாரணை லைவ்வாக வந்து கொண்டேயிருக்க அதை காதில் வாங்கிக் கொண்டே பிருத்வி சத்யராஜுக்கு பதில் சொல்லி சமாளிப்பது சூப்பரோ சூப்பர். சத்யராஜ் அவமானப்படுத்தும்போது அமைதியாக பிருத்விராஜ் நிற்பது அருமை.

பாந்தமான மனைவியாக ராதிகா. முற்பாதியில் அடக்கமாக வருபவர் பிற்பாதியில் சத்யராஜை எதிர்த்து அதிர்ந்து பேசும்போது சத்யராஜுடன் சேர்ந்து நம்மையும் அதிர வைக்கிறார்.

மகளாக வரும் சந்தியாவின் நடிப்பு ஓக்கே. சதா சந்தேகப்படும் அப்பாவை சமாளிக்க முடியாமல் திணறும்போதும் தாயுடன் சேர்ந்து வீட்டைவிட்டு வெளியேறும்போதும் சந்தியா காட்டும் முகபாவங்கள் சபாஷ் போட வைக்கின்றன.

Prithviraj, Sandhyalபிருத்வியின் மாமாவாக வரும் ராதாரவி அடிதடி செய்யாமலேயே வில்லத்தனம் செய்திருக்கிறார். ஸ்ரீ£ப்ரியா சத்யராஜின் சகோதரி என்று தெரியவரும் காட்சி சூப்பர். சத்யராஜை ஸ்ரீப்ரியா வெறுப்பேற்றும் காட்சிகள் நகைச்சுவை விருந்து.

அறிமுக ஒளிப்பதிவாளர் ப்ரீதாவின் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். யுவனின் இசை சுமார்.

வழக்கமான சினிமாத்தனம் இல்லாமல் இயல்பான கதையை இயல்பான சம்பவங்களைக் கொண்டு பின்னியிருக்கும் இயக்குனரின் திறமை பாராட்டத்தக்கது. கதையில் திடீர் திருப்பங்கள் அதிரவைக்கும் சம்பவங்கள் என்று ஒன்றும் இல்லை. முக்கியமாக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இல்லவே இல்லை. இதனாலேயே படத்தின் சில குறைகள் கூட பெரிதாகத் தெரியவில்லை. நீள வசனங்களை கொஞ்சம் குறைத்து காமெடியில் இன்னும் கொஞ்சம் கவன்ம் செலுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

படத்தின் கதையில் அங்கங்கே குற்றம் குறைகள் இருந்தாலும் குத்துப் பாட்டு, அடிதடி, வெட்டுக் குத்து, ரத்தக்களறி, கண்ணை உறுத்தும் ஆபாசம் என எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும்படி கண்ணியமான கலகலப்பான வகையில் படம் எடுத்ததற்காக இயக்குனர் பிரியாவிற்கு வாழ்த்துக்கள்!!

Copyright © 2005 Tamiloviam.com - Authors