தமிழோவியம்
சிறுகதை : ஆப்கானிஸ்தான் பூக்கள்
- குகன்

afghan_warநெடும் பாலைவன நகரம். அங்கே பூக்கள் எப்படி ? அமெரிக்க இராணுவத்தால் தாக்கப்பட்ட இடங்கள். நீர் ஊற்றி நெல்வளர்த்தால் உண்ண உணவு கிடைக்கும். ஆனால் வெடி குண்டால் பல மனித இரத்தங்கள் மண்ணில் ஒட விட்டு எதை அமைதியா வளர்க்க போகிறார்கள் ? தனிமனிதன் சுதந்திரம் தலையிட உரிமை இல்லாத காலத்தில், இன்னொரு நாட்டின் சுதந்திரத்தில் தலையிடும் அமெரிக்க தேசம்.

அந்த போர்களத்தில் பெற்றோர்களை இழந்த ஷாகுல் செய்வதறியாது நின்றான். தன் தாய் மரணத் தாகத்தை கூட அவனால் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை. விமான குண்டுகளiல் அவன் இழந்தது பெற்றோர்களை மட்டுமல்ல இடது காலையும் தான். ஷாகுலை சுற்றி எல்லாம் பாலைவனம். இரத்தவாடை அடிக்கும் பிணங்கள். காற்று தான் வருமென்று தெரியாமல் நீருக்காக நீர் குழாய் திறந்து பார்க்கிறான். இத்தனை உயிர்களை வாங்கி எந்த ஒருவனை பிடிக்க முயற்சித்தார்களோ அந்த ஒருவன் மட்டும் அமெரிக்க இராணுவத்தின் கண்களiல் தென்படவில்லை.

பெற்றோர்களுக்காக அழுது ஷாகுல் கண்கள் நீர் கூட வற்றி விட்டது. அந்த பாலைவனம் மனிதனின் கண்ணீர் கூட வற்ற செய்துவிட்டது. எந்த திசைப் போவதென்று அந்த பத்து வயது சிறுவனுக்கு தெரியவில்லை. சற்று தொலைவில் நான்கு வயது சிறுமி இறந்த அன்னையை அழுதுக்கொண்டு எழுப்பினாள். ஷாகுல் அந்த சிறுமியை தேற்ற தன் ஒற்றை காலில் நடந்து அருகில் சென்றான். அந்த சிறுமி முகத்தை பார்த்து அதிர்ந்து அழுதுவிட்டான். ஒரு புறம் அழகாய், மறுபுறம் விகாரமாய் அந்த சிறுமி இருந்தாள். அமெரிக்காவின் குண்டுகள் அந்த சிறுமியின் எழிலை கூட விட்டு வைக்கவில்லை. தன் மனதை தினப்படுத்திக் கொண்டு அந்த சிறுமியின் அருகில் சென்றான் ஷாகுல். அந்த சிறுமியை எவ்வளவோ தேற்ற முயற்சித்தான். பாவம் அந்த சிறுமி.... பசிக்கு அழுவதா? இறந்த அன்னைக்காக அழுவதா ? என்று தெரியாமல் அழுதுக் கொண்டு இருந்தாள். ஷாகுலுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

சற்று தொலைவில் அமெரிக்கா விமாபத்தின் குறி தவறிய தோட்டாக்களை பார்க்கிறான். அந்த தோட்டாக்கள் ஒவ்வொன்றும் கை அளவிற்கு நிலமாக இருந்தது. அந்த தோட்டாக்களை இன்னொரு தோட்டாவைக் கொண்டு மூன்று ஓட்டைகள் போட்டான். தோட்டாவின் நுணியிலும் இன்னொரு ஓட்டைப் போட்டான். தோட்டாவின் நுணியை வாயில் வைத்துக் கொண்டு பீடில் வாசிப்பதுப் போல் வாசித்தான். அழுதுக் கொண்டு இருந்த சிறுமி அழுகை நிருத்தி ஷாகுலை உற்றுபார்த்தாள். ஷாகுல் அருகில் சென்று அந்த தோட்டாவை வாங்கி வாசிக்க தொடங்கியது. பசியிலும் அந்த சிறுமி ஷாகுலை பார்த்து புன்னகை செய்தாள். ஷாகுலிடம் மற்ற சிறுவர் சிறுமியர்கள் சுழ்ந்துக் கொண்டார்கள். பிறகு ஷாகுல் மற்ற தோட்டாக்களையும்  பீடில்ப் போல் தயார் செய்தான். அங்கு இருக்கும் ஒவ்வொரு சிறுவர் சிறுமியர்களுக்கு கொடுத்தான். எல்லா சிறுவர் சிறுமியர்களுக்கு விமானத் தோட்டாக்களைக் கொண்டு பல ராகங்கள் இசைத்தார்கள். அவர்கள் வாசத்தது கல்யாணியோ, பிலஹுரியோ, மோஹுனமோ இப்படி எந்த ராகமும் இல்லை. அவர்கள் நாட்டில் அமைதி வேண்டி ராகம் இசைத்தனர். மனிதனின் உயிரை வாங்கிய தோட்டாக்கள் இசைப்பாட தொடங்கிவிட்டன. காதில் வாங்கிக் கொள்ளாத இராணுவம் மட்டும் இன்னும் அந்த ஒரு மனிதனை தேடிக் கொண்டே இருக்கிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors