தமிழோவியம்
தராசு : வெள்ள நிவாரணமும் தொடரும் துயரச்சம்பவங்களும்
- மீனா

தமிழகத்தில் இந்த வருடம் பெய்து வரும் கன மழையால் ஏகப்பட்ட அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கடும் மழையால் மக்கள் பெருமளவில் பாதிக்கபட்டுள்ளார்கள்.  சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நிவாரண உதவியை பெற மக்கள் நின்றிருந்த போது அந்த இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் ஞாயிறு அன்று பலியாகியுள்ளார்கள்.  ஏற்கனவே கடந்த 6ஆம் தேதி வியாசர்பாடியில் நிவாரண நிதி பெற நின்றிருந்தவர்களில் 6 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரை விட்ட துக்கத்தின் சுவடு மறைவதற்கு முன்னதாகவே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னையை விட இன்னும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் எல்லாம் இதைப் போன்ற நிவாரண நிதி வழங்கும் முகாம்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அங்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் நிவாரண உதவிகளைப் பெற வந்த வண்ணம் உள்ளார்கள். ஆனால் அங்கெல்லாம் சென்னையில் நடப்பதைப் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றதாக தகவலே இல்லை. அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் செய்ல்பாடுகள் குறித்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் சென்னையில் மட்டும் தொடர்ந்து இவ்விதமான அசம்பாவிதங்கள் நடைபெற காரணம் என்ன என்று ஆராய்ந்தால் தமிழகத்தின் தலைநகரில் வாழும் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இவ்வளவு அசம்பாவிதங்களும் நடைபெற காரணம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும். ஏகப்பட்ட ஆய்வுகள் நடத்தி "வியாசர்பாடியில் நடந்த துயரச் சம்பவத்திற்கு அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கவனக் குறைவே காரணம்.." என்றும் "தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.." என்றும் முதல்வர் அறிக்கையெல்லாம் வெளியிட்டார். ஆனாலும் போலீஸ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே தற்போது நடந்திருக்கும் சம்பவம் உணர்த்துகிறது.

கிட்டத்தட்ட 1 லட்சம் மக்களுக்கு ஒரே நேரத்தில் நிவாரண உதவிகளை அளிக்க முற்பட்டதே தவறு.. அதிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் போலீசார் அலட்சியமாக இருந்தது பெறும் தவறு.. நடந்த தவறுகளையெல்லாம் மறைக்கும் விதத்தில் "அசம்பாவிதங்களுக்கு விஷமிகள் பரப்பிய வதந்திகளே காரணம்.." என்று முதல்வர் கூறுவது அழகல்ல.. அவ்விதமான வதந்திகள் பரவ இடம் கொடுத்ததே தவறு.  அதிகாரிகள் நிவாரண நிதி வழங்கும் விஷயத்தில் போதிய கவனமும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்திருந்தால் இத்தனை மக்கள் ஒரே இடத்தில் கூடிய சம்பவமே நடந்திருக்காது.

இச்சம்பவத்தால் இறந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். என்னதான் விசாரணைக் கமிஷன் எல்லாம் அமைத்தாலும் அதில் சுட்டிக்காட்டப்படும் - தவறு செய்த அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அவப்பெயர் நீங்கும். தவறு செய்த அதிகாரிகளின் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகள் தான் மீண்டும் இம்மாதிரி ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க உதவும். இதை விடுத்து தவறு செய்தவர்களை முதல்வர் தன்னுடைய தனிக்கருணையாலும் சிபாரிசுகளாலும்  காப்பாற்ற முற்பட்டால் விளைவுகள் எவ்விதம் இருக்கும் என்பதை தனியாகச் சொல்லத் தேவையே இல்லை.....

Copyright © 2005 Tamiloviam.com - Authors