தமிழோவியம்
கட்டுரை : குழந்தை வளர்ப்பும் அன்பும்
- செல்வராஜ்

பார்க்கின்ற எவரையும் கவர்ந்திழுக்கும் அழகான கண்கள் அங்கும் இங்கும் அலைந்தபடி, 'இனி எல்லாமும் உங்கள் கையில்' என்று முழு நம்பிக்கையையும் நம்மில் வைத்து, நம் கைகளில் ஒரு பிஞ்சு தவழ வருவது ஒரு உன்னத அனுபவம். 'உங்கள் அருகாமையில் நான் நிறைவாய் இருக்கிறேன்' என்று காட்ட விழைவதைப் போல் விரிந்த விரல்களோடு சிறு கரங்களும் கால்களும் மேலும் கீழும் உதற, அவசர அவசரமாய் மூச்சுக் காற்று உள்ளும் வெளியுமாகத் ததும்பும். விரல் நீட்ட, தளிர்க்கரங்கள் இறுகப் பற்றும். மெய் சிலிர்க்கும். சங்கீத அறிவே துளியும் இல்லாதவனைக் கூடத் தாலாட்டுப் பாடி மெய்யுருகச் செய்யும். அது ஆழ்ந்து உறங்கையிலே, அமைதியாக அருகமர்ந்து தலை கோதி, 'யார் நீ?', 'எங்கிருந்து வந்தாய்?', 'என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?' என்று வினவத் தோன்றும். ஒரு குழந்தைக்குத் தாயாக, தந்தையாக இருப்பது ஒரு பேரானந்தம். பேரனுபவம்.

குழந்தை வளர்ப்பு என்பது பெரும் பொறுப்பும் கூட. ஆனால் அதைச் சரியாகக்கற்றுக் கொள்ளப் பாடங்களும் இல்லை. பள்ளிகளும் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால் பிற அனுபவித்தவர்களின் பட்டறிவையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இது நமக்கே உரித்தான ஒரு தனி வாழ்க்கைப் பாடம். பொதுவான திசையை அறிந்து கொண்டு, அன்பு ஒன்றையே அடிப்படையாக வைத்துக் கொண்டு பிறவற்றை எல்லாம் போகப் போகக் கற்றுக் கொள்ள வேண்டியது தான். சில சமயம் இந்தச் செலுத்தத்தில் நாம் தவறுகள் செய்துவிட நேரிடலாம். ஆனால் அவையும் இயல்பே என்று வாழ்வில் பாடங்கற்றுக் கொண்டு பயணம் செய்ய வேண்டும்.

தனி உயிராய், முழுச்சுயத்தோடு இருப்பதால் தளிர்கள் வளர்கையில் நமக்கு ஆனந்தத்தோடு கூடவே ஆச்சரியங்களும் சோதனைகளும் உண்டாவதும் இயற்கையே. நல்ல பெற்றோர்களாய் இருப்பதெப்படி, வளர்ப்பது எப்படி என்று யோசித்தபடி காலத்தில் நாம் நகர்ந்து கொண்டிருப்போம். அதே வேளையில், தம் எல்லைகள் என்ன, விருப்பு வெறுப்புக்கள், திறமைகள், பயங்கள், மகிழ்வுகள், மனச்சோர்வுகள் என்னவென்று தம் சுயத்தை ஆய்ந்து கொண்டு அந்த உயிர்களும் தம் பயணத்தைத் தொடரும்.

குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம் பேணுவதற்குக் கண்டிப்பும் தேவை. அவர்களின் உற்சாகத்தைக் குலைக்காதவண்ணம் இருக்கச் செல்லமும் தேவை. இரண்டுமே அளவாக இருக்க வேண்டும். எது அளவு எது சமநிலை என்பதும் பொதுவாய்க் கூறிவிட முடியாது.

அளவு கடந்த கண்டிப்பும் மிரட்டலும் கொண்டு வளர்க்கப் படும் குழந்தை 'ஒழுக்கமாக' நடந்து கொள்ளலாம். ஆனால், அதில் ஏற்படும் பயமும், உள்மனக் காயங்களும் ஆற்ற முடியாதவை. இயற்கையான துறுதுறுப்பையும் உற்சாகத்தையும் வெட்டக் கூடியவை. நான் அறிந்த சில நண்பர்கள் சிறு வயதில் அளவு மிஞ்சிப் பயந்து கிடந்தது நினைவுக்கு வருகிறது. 'அப்பா' என்று சொன்னாலே அவர் இடுப்பில் அணிந்திருக்கும் 'பெல்ட்' மட்டுமே அதிகமாய் நினைவுக்கு வருவது கொடுமை தானே!

கட்டாயத்திற்கும் அதீத கண்டிப்பான வளர்ப்பிற்கும் மறுகோடியில் இருப்பது அளவு கடந்த செல்லம். எந்தக் காரணத்திற்காகவும் குழந்தையை மிரட்டவோ அடிக்கவோ கூடாது என்று, அவர்கள் என்ன செய்தாலும் ஏற்றுக் கொண்டு விட்டு விடுவதும் தவறு. பொது இடத்தில் ஐந்தாறு வயதேயான ஒரு குழந்தை பெற்றவரைப் பார்த்துத் திமிராக 'என்னடி முறைக்கிற?' என்று பெயர் சொல்லித் தரக்குறைவாய்ப் பேசுவதையும், ஏன், கை நீட்டி அன்னையை அடிப்பதையும் பார்த்திருக்கிறேன். அதையும் தாங்கிக் கொண்டு, ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். இதுவும் தவறு. குழந்தைகளுக்கு அவர்களின் எல்லைகள் சொல்லித் தரப் பட வேண்டும். தெரிய வேண்டும். அப்படிச் சொல்லித் தந்த பிறகும், அவர்கள் அந்த எல்லைகளைப் பரிசோதிக்கும் வண்ணம் நடந்து கொள்வதும் இயல்பு தான். எனினும் அப்போதும் உறுதியாக இருப்பது அவர்களுக்கும் குழப்பம் தராத ஒன்று. எல்லைகள் மீண்டும் வரையறுக்கப் பட்டுப் புரிந்து கொள்ளத் தெளிவாக இருக்கும்.

அதீத கண்டிப்பு, மிகையான செல்லம் என்று இரண்டு எல்லைகளையும் விட்டுவிட்டு இடையில் அளவான செல்லமும் கண்டிப்புமாக இருக்க வேண்டும். இதில் இரண்டு வழிமுறைகள். ஒன்று, பெரும்பாலான விஷயங்களில் கண்டிப்பும், சிறு சிறு இடங்களில் மட்டும் செல்லமுமாய் இருப்பது. இரண்டாவது, தொட்டதற்கெல்லாம் சட்டம் என்றில்லாமல், ஒரு சில விஷயங்களில் மட்டும் சரியான, ஆனால் உறுதியான எல்லைக் கோடுகளை வகுத்து விட்டு, அதன் பிறகு எல்லாவற்றிலும் இயல்பாகவும், சற்றுக் குறும்புகளையும் அனுமத்தும் வளர்க்கலாம். இந்த இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வது அவரவருடைய விருப்பம். இரு பெற்றோரில் ஒருவர் ஒன்றையும் மற்றவர் இன்னொன்றையும் கூடத் தெரிவு செய்யலாம்.

இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி. அன்பைப் பொழிந்து வளர்த்தல் அவசியமாகிறது. கண்டிப்போ செல்லமோ எதுவாக இருந்தாலும் அடிப்படையில் பெற்றோர் நம் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து வளரும் குழந்தைகள் இனியவர்களாக வளர்கிறார்கள். தம் மீது வைக்கப் படும் அன்பை உலகத்தின் மீது பிரதிபலிப்பவர்களாய் அமைகிறார்கள்.

புதிதாய்க் குழந்தைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களோ, இப்போது தான் பெற்றோர்களாய் ஆகியிருப்பவர்களோ, இந்தப் புதிய பொறுப்பிற்குப் பயப்பட வேண்டாம். உங்கள் பக்கத்து வீட்டுக்காரரோ, நண்பரோ, இது போன்ற வலைப்பதிவு வைத்திருப்பவரோ(!) சொல்வதை எல்லாம் கேட்க வேண்டாம். உங்கள் இயல்பு போலிருங்கள். அழுத்தம் கொள்ளாதீர்கள். அளவற்ற அன்பைக் கலந்து உங்கள் உள்ளுணர்வை நம்பி அதன் படி நடந்து வருவீர்களானால் இது அவ்வளவு ஒன்றும் கடினமான செயல் அல்ல. குழந்தை வளர்ப்பு பெற்றோர்களின் சுய வளர்ச்சியிலும் ஒரு முக்கியப் படி.

சந்தேகம் இருப்பின் நாற்பதுகளில் வெளியாகிப் பல பதிப்புக்கள் கண்டு, சுமார் நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட Dr.Spock's Baby and Child Care புத்தகத்தில் ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் முதல் அத்தியாயத் தலைப்பே "உங்களை நம்புங்கள்" (Trust Yourself) என்பது தான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors