தமிழோவியம்
திரைவிமர்சனம் : சண்டைக்கோழி
- மீனா

Vishal, meera jasminஎந்த ஒரு சாதாரணமான கதைக்கும் சிறப்பாக திரைக்கதை அமைத்தால் அந்தப் படம் கமர்ஷியல் ரீதியில் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற சினிமா ரகசியத்தை தெளிவாக அறிந்து வைத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அலுப்பே தெரியாதவண்ணம் விறுவிறுப்பாக படம் எடுப்பது ஒரு கலை. சண்டைக்கோழியை அந்தப் பார்முலாவிற்கேற்ப விறுவிறுப்பான இயக்கியதன் முலம் வெற்றி இயக்குனர்கள் வரிசைப் பட்டியலில் தனக்குரிய இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார் லிங்குசாமி.

இஞ்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் விஷால் கல்லூரி விடுமுறையில் சிதம்பரத்தில் உள்ள தன் நண்பனின் வீட்டிற்குச் செல்கிறார். அங்கே நண்பனின் தங்கை மீரா ஜாஸ்மின் செய்யும் குறும்புகளையும் அலும்பல்களையும் பார்த்து மீராவின் மீது காதல் கொள்கிறார். இதற்கிடையே சிதம்பரத்தில் உள்ள மிகப்பெரிய தாதாவான காசி (மலையாள இயக்குனர் லால்) செய்யும் பல அடிதடிகளை பார்க்கும் விஷால் ஒரு கட்டத்தில் லாலுடன் நேருக்கு நேராக மோதி அவரை துவம்சம் செய்துவிட்டு தன் சொந்த ஊரான மதுரைக்கு செல்கிறார்.

அடிபட்ட கோபத்தில் துடிக்கும் லால் விஷாலைக் கொல்லத் துடிகிறார். விஷாலில் பூர்வீகம் பற்றி ஆராயத் துவங்கும் லாலுக்கு விஷாலில் அப்பா ராஜ்கிரண் என்பதும், ராஜ்கிரணின் ஒரு வார்த்தைக்கு மதுரையைச் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களுமே கட்டுப்படும் என்பதும் விஷாலில் மீது கைவைக்க தன்னுடைய நண்பர்களான ஒரு ரவுடியும் முன்வரமாட்டார்கள் என்பதும் தெரிய வருகிறது. ஆகவே வேறு வழியில்லாமல் விஷாலைப் பழிவாங்க தானே விஷாலில் சொந்த ஊருக்குச் செல்கிறார். ராஜ்கிரணால் வெகுகாலத்திற்கு முன்பு பாதிக்கப்பட்ட தலைவாசல் விஜய் விஷாலைப் பழிவாங்க லாலுக்கு உதவி செய்கிறார். பல தடவை லாலின் பழிவாங்கும் முயற்சி தோல்வியில் முடிய, ஒரு கட்டத்தில் விஷாலை வெட்டுவதற்கு பதிலாக ராஜ்கிரணின் மீது கைவைத்து விடுகிறார். இதனால் ஊரே வெகுண்டு எழுகிறது. யார் ராஜ்கிரணை வெட்டியது என்பதை ஆராயப் புறப்படும் அவரது ஆட்கள் அதை செய்தது லால் தான் என்பதை கண்டுபிடிக்கிறார்கள். அப்போதுதான் லால் விஷாலிடையே சிதம்பரத்தில் நடந்த மோதல் தெரியவருகிறது. கடைசியில் ராஜ்கிரண் தலையீட்டால் பிரச்சனை புதுவிதமாக திரும்புகிறது. முடிவு என்ன என்பதை கொஞ்சம் வித்தியாசமாக சொல்ல நினைத்து பழைய சினிமா பாணியிலேயே சொல்லி முடித்திருக்கிறார் லிங்குசாமி.

செல்லமே-யில் அறிமுகமான விஷாலா இவர் என்று அதிசயப்படவைக்கும் அளவிற்கு நடிப்பு, சண்டைக்காட்சிகள், காதல் என்று அனைத்திலும் புகுந்து விளையடியிருக்கிறார். அதிலும் குரிப்பாக சண்டைக் காட்சிகளில் விஷாலில் புட்வொர்க் அபாரம். விஜயகாந்திற்குப் பிறகு அருமையாக புட்வொர்க் செய்யும் அடுத்த நடிகர் விஷால் தான் என்று நிச்சயம் ஒப்புக்கொள்ளலாம். கருப்பாக இருந்தாலும் ஹீரோன்னா களையாக, நடிக்கத் தெரிந்திருந்தால் போதும்.. நிச்சயம் தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்ற வார்த்தை விஷால் விஷயத்தில் நிருபணமாகும் காலம் ரொம்ப தூரத்தில் இல்லை.

Meera Jasminஹீரோயின் என்றால் ஒரு நாலு வார்த்தை பேசி நாலு டூயட் ஆடிவிட்டுப் போவதுதான் சம்பிரதாயம் என்ற பார்முலாவை ஒழிக்கும் ஆசையோடு படத்தில் மீரா ஜாஸ்மின் லூட்டி அடிக்கிறார்.  டுடோரியல் காலேஜிற்கு கட் அடித்து விட்டு சந்திரமுகி படம் பார்க்கப் போய் தியேட்டரில் மீரா செய்யும் ஆர்பாட்டங்களும், தன்னை துரத்தி துரத்தி அடிக்கும் அப்பாவிடமிருந்து தப்பிக்க சாமி வந்த மாதிரி ஆடுவதும், சிகரெட்டை வைத்துக்கொண்டு விஷாலிடம் தீப்பெட்டி கேட்கும் காட்சியிலும், தன்னை மறைந்திருந்து பார்க்கும் விஷாலில் முறைப் பெண்கள் முன்னால் கண்களை சொருகிக்கொண்டு கால்களைக் கோணிக்கொண்டு நடக்கும் போதும் மீரா ஜாஸ்மின் கலக்கல் ஜாஸ்மினாக மாறிவிடுகிறார்.

ஊரே மதிக்கும் பெரிய மனிதராக வரும் ராஜ்கிரண் தன் கம்பீரமான நடிப்பால் கவர்கிறார். "ஏதோ நாங்க தான் பரம்பர பரம்பரையா கத்திய தூக்கிக்கிட்டு அலையறோம்.. நீங்க எல்லாம் நல்லா இருக்கணம்னு தானே உங்களை பெரிய படிப்பு படிக்க வைச்சேன்.. இப்போ நீங்களும் அடிதடின்னு இறங்கினா எப்படி.." என்று மகனிடம் உருக்கமாக கேட்கும் காட்சியில் தேவர்மகன் சிவாஜி கமல் நினைவிற்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. வில்லன் லால் முதலில் ஆர்பாட்டமாக பெரிய தாதாவாக அறிமுகமாகிறார். ஆனால் பிறகு விஷாலில் பூர்வீகம் தெரிந்து அவர் மிரளும் காட்சிகளில் சப்பென்று ஆகிறார்.

பின்னணி இசையில் அப்பாவைப் போலவே அசத்தியிருக்கும் யுவன் பாடல்களில் "தாவணி போட்ட தீபாவளி" பாடலில் மட்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் கணல் கண்ணன் தன் திறமையை முழுமையாக காட்டி அசத்தியுள்ளார். அடிதடி ஆக்ஷன் களத்திலும் காதல் பூ பூக்கும் என்பதை மற்றொரு தடவை அழகாக நிரூபித்திருக்கிறார் லிங்குசாமி. 

வாழ்த்துக்கள் !!

Copyright © 2005 Tamiloviam.com - Authors