தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : கோடிட்ட இடங்கள் [பாகம் : 1]
- சித்ரன்

கிருஷ்ணாவின் டைரிக் குறிப்பிலிருந்து....

நான் கவிதைகள் எழுதுவதுண்டு. என் ஆரம்பநிலைக் கவிதைகள் வழக்கம்போல்தான் இருந்தன. இயற்கையைப் பற்றியும் தன்னம்பிக்கையைப் பற்றியும்தான் அவைகள் அதிகம் விளக்கம் தந்தன. எனக்கே சலித்து இவைகளை ஒதுக்கி நான் முதன் முதலாய் எழுதின கவிதை அம்மாவைப் பற்றித்தான். கல்லூரி ஆண்டு மலரில் அது பிரசுரமானது. அந்தக் கவிதைக்குத்தான் எத்தனை பாராட்டுக்கள்! நானும் ஒரு கவிதையை உணர்ந்தது அந்தப் படைப்பில்தான். எப்படி எழுதினாய்? அத்தனை உணர்வாய் அத்தனை நிஜமாய் எப்படி முடிந்தது என்றார்கள். நான் சொன்னேன். அதில் ஒரு வரிகூட என் கற்பனை அல்ல. அத்தனையும் நிஜம். காரணம் என் அம்மா மொத்தமாய் ஒரு கவிதைத் தொகுப்புதான். இந்தக் கவிதை அதில் ஒரு சாம்பிள் என்றேன்.


கோவை ரயில்நிலையம்.

அரை வட்ட வடிவக் கவுண்டருக்குள்ளிருந்து விசிறப்பட்ட ப்ளாட்பாரம் டிக்கெட்டைப் பொறுக்கிக்கொண்டு நகர்ந்தான் சத்யா. நீலகிரி எக்ஸ்பிரஸ் இரண்டாவது ப்ளாட்பாரம் என்று போர்டில் போட்டிருந்தது. அவனுக்கு முன்னதாக கிருஷ்ணா அதற்குள்ளாக பெட்டி படுக்கையுடன் வந்திறங்கியிருப்பானா என்று யோசித்தான். வண்டி கிளம்ப இன்னும் நிறைய சமயமிருக்கிறது.

தலையிலும் தோளிலும் லக்கேஜூகளைச் சுமந்தபடி நகர்ந்த குடும்பங்களுக்கு நடுவே புகுந்து நடந்தான். ப்ளாட்பாரத்துக்கு வழிநடத்தும் பாதையைப் பிடித்து பின் படிகளில் ஏறினான். வண்டி எண், வண்டியின் பெயர், ப்ளாட்பாரம், வருகிற அல்லது போகிற ஊர்ப்பெயர்களை பல மொழிகள் கலந்து துப்பிவிட்டு ஒலிபெருக்கி மெளனமாக, அடுத்த இரைச்சல் பொறுப்பை தலைக்கு மேலிருந்த டி.வி பெட்டிகள் எடுத்துக்கொண்டன.  ஈர தோசை மாவையும் முன்னணி நாளிதழ்களையும் விற்க முனைந்த டி.வி-யின் விளம்பரக் குரல்கள் பயணிகளின் கவனத்துக்குப் போட்டி போட்டன.

ப்ளாட்பாரத்தை வந்தடைந்து சாயா, காபி, புத்தக விற்பனைக் கடைகளைத் தாண்டி நடந்தான். நீலகிரி எக்ஸ்பிரஸில் இணைக்கப்படவேண்டிய பெட்டிகள் அடுத்த தண்டவானத்தில் காத்திருந்தன. வண்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து வரவேண்டும். தங்கள் உடைமைகளின் மேல் ஒரு கண்ணையும், தூரத்து சிக்னல் விளக்குகளில் ஒரு கண்ணையையும் வைத்துக்கொண்டு ஜனங்கள் காத்திருந்தார்கள். குளிர்ந்த பிஸ்லெரி பாட்டில்கள் சூடாக விற்பனையாயின.

ஒரு பெரிய கூவலை உதிர்த்துவிட்டு பக்கத்துப் ப்ளாட்பாரத்தில் என்ஜின் ஒன்று அதிர்ந்து கடந்தது. தண்டவாளத்தில் கிரீச்சிட்டு விரைந்த சக்கரங்களை பிரயாணக் குழந்தைகள் காதுகள் பொத்தி விரிந்த விழிகளுடன் பார்த்தார்கள்.

கிருஷ்ணாவைத் தேடி சத்யாவின் கண்கள் கூட்டத்துக்கு நடுவே புதைந்தது. அவன் எங்கே நின்றிருப்பான் என்று தெரியவில்லை. எந்தக் கோச் என்று கேட்டுவைத்திருந்தால் நேராக அங்கே போயிருக்கலாம். கேட்காமல் விட்டுவிட்டான். பரவாயில்லை. அதெல்லாம் பெரிய விஷயமேயில்லை. கண்டுபிடித்துவிடலாம். மேலும் வழியணுப்ப வருகிற சில பேரில் யாராவது ஒருத்தன் எங்கேயாவது கண்ணில் படாமலா போய்விடுவான்?

கிருஷ்ணாவை சென்னை ஏர்போர்ட் வரை போய் வழியனுப்ப அவனுக்கு ஆசையாகத்தான் இருந்தது. என்ன பண்ணுவது? நினைத்தபடி போக முடியவில்லை. போயிருந்தால் அவனும் அதற்காக சந்தோஷப்பட்டிருப்பான்.

ஓரமாக எங்கேயாவது நின்று பார்க்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று அவன் முதுகில் யாரோ அறைந்தார்கள். திரும்பாமலே அது கிருஷ்ணாதான் என்று அவனுக்குத் தெரிந்துபோயிற்று. மிதமான வலியைப் பொறுத்துக்கொண்டு அவன் திரும்பினான்.

அவன்தான்.

"என்னடா பராக்குப் பாத்துட்டு திரியறே?!' என்றான்.

முழங்கால் வரையிலான ட்ரெளசரும், வட்டக் கழுத்து பனியனும் ஆக பிரயாண கெட்டப்பில் நின்றிருந்தான் கிருஷ்ணா. ட்ரெளசர் பாக்கெட்டில் துருத்தித் தெரிகிற சிகரெட் பாக்கெட்டை அவன் மறைக்க முயன்றிருக்கவில்லை. எப்போதும் போல் மூக்குக் கண்ணாடி வழியே ஒளிர்கிற பெரிய கண்களால் சிரித்தான்.

"ஒரு பொறம்போக்கை வழியணுப்ப வந்தேன்." என்றான் சத்யா. அவன் மீண்டும் சிரித்தான்.

"இந்த மாதிரி முதுகுல அடிக்காதன்னு பல தடவை உங்கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணியிருக்கேன். நீ எப்ப திருந்துவே?"

"அடுத்த ஜென்மத்துல!.. சரி.. கோச்சுக்காத மச்சி.. உங்கம்மா அப்பவே வந்துட்டாங்க தெரியுமா?. நீ ஏண்டா லேட்டு? நான் உனக்காக வெயிட்டிங்." என்று சத்யாவைக் கூட்டிக்கொண்டு நடந்தான்.

"அப்பறம் டேய் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம்கூட சொல்ல வேண்டியிருக்கு. ஆனா அது சஸ்பென்ஸ்!"

"சொல்லுடா என்ன?"

"இப்ப சொல்ல மாட்டேன். நான் கிளம்பறதுக்குள்ள நீ மறக்காம எங்கிட்ட அதைக் கேட்டுக்க." என்றான்.

"ஆரம்பிச்சிட்டியா உன் புதிரை" என்றான் சத்யா.

"இல்ல மச்சி! இது ஸீரியஸ் மேட்டர். ஆனா இன்டரஸ்டிங். கேட்டா ஆச்சரியப்படுவே! சரி அத விடு.. இங்க என்னை வழியணுப்ப நீ மட்டுமில்ல, ஒரு பெரிய கூட்டமே வந்திருக்கு. அப்பா அம்மா, தங்கச்சி மட்டும் எங்கூடவே மீனம்பாக்கம் ஏர்போர்ட் வரை வராங்க. மத்தவங்க இங்கயே கழண்டுக்கிறாங்க. எல்லாரும் அங்க வெயிட்டிங்" என்றான் என்று ஜனத்திரளுக்கு நடுவே ஓரிடத்தைக் காட்டினான்.

"எல்லாரையும் அங்க விட்டுட்டு நீ இங்க எதுக்கு சுத்திட்டு இருக்க?"

அதற்கு அவன் பதில் சொல்லாமல் சில நொடிகள் மெளனமாயிருந்தான். மிக மெல்லிய சோகங்கலந்த புன்னகையொன்று அவனிடமிருந்து வெளிப்படுத்திவிட்டுச் சொன்னான்.

"இல்லடா நான் சிங்கப்பூர் போறனில்ல, நாலஞ்சு நாளா என்னைச்சுத்தி ஒரே கூட்டம். கொஞ்சம்கூட ப்ரைவஸி கிடைக்கல. இதோ இங்க ரயில்வே ஸ்டேஷன் வர்ர வரைக்கும் அப்படித்தான். அதான் படிக்க புக்ஸ் வாங்கிட்டு வந்துர்றேன்னுட்டு நைஸா நழுவி வந்துட்டேன். ஆனா பாரு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. பணம் சம்பாதிக்கலாம்னு வெளிநாடு போறேன். எல்லாரையும் விட்டுட்டு. திரும்பி வர ஒரு வருஷம் ஆகலாம். ரஞ்சனி ரொம்ப ஃபீல் பண்ணி அழுவறா.. அவளும் ஸ்டேஷனுக்கு வந்திருக்கா. என்னால சமாதானப்படுத்த முடியலை.  சரி.. இதோ இந்த ஜனங்களுக்கு நடுவில தனியா அஞ்சு நிமிஷம்  உலாத்திட்டு ரிலாக்ஸ் பண்ணிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். படுபாவி நீ வந்து கெடுத்தே"

"கிருஷ்! இப்ப ஒண்ணும் கெட்டுப் போகலை. நான் வெயிட் பண்றேன் நீ போயிட்டு வா!."

"சே! சும்மா சொன்னேன்டா. இட்ஸ் ஆல்ரைட்! வா போலாம்." சத்யாவின் தோளில் கை போட்டுக் கொண்டு அவனை வழியணுப்ப வந்தவர்கள் நின்றிருந்த திசை நோக்கி நடந்தான்.

"நீ போறதுல எனக்குக்கூட கொஞ்சம் வருத்தம் கலந்த சந்தோஷம்தான். சரி எங்கிட்ட ஏதோ முக்கியமா சொல்லணும்னியே..."

"பறக்காத.. அப்பறமா சொல்றேன்..." என்றான். "தோ பாரு வினோத், டகால்டி ரெண்டு பேரும் வந்துட்டானுக.. என்னை வழியனுப்ப அலைகடலென கூட்டம் திரண்டு வந்திருக்கு. நான் கிளம்பறதுல எத்தன பேருக்கு சந்தோஷம் பாரு."

கிருஷ்ணா ஹாய் ஹாய் என்று விளித்த குரல்களுக்கு நடுவே போய் ஐக்கியமானான். அவன் சொன்னபடி அங்கே நிறைய வந்திருந்தார்கள். கிருஷ்ணாவின் அம்மா, அப்பா, தங்கை தவிர, வேலை செய்கிற ட்ரூ ஃப்யூஷன் அட்வர்ஸை஢ங் கம்பெனி ஆட்களில் முக்கால்வாசிப்பேர், அப்புறம் ப்ரகாஷ், டைம்ஸ் பாலா, ராசி க்ராஃபிக்ஸ் சுபாஷிணி, கிருத்திகா, ப்ருந்தா, சுப்ரியா, மலர், ஜெயஸ்ரீ, கிருஷ்ணாவின் ஆள் ரஞ்சனி, வேணு அங்கிள் மற்றும் சத்யாவின் அம்மா. அப்புறம் இப்போது வந்து சேர்ந்து கொண்ட வினோத், டகால்டி என்றழைக்கப்படுகிற தன்ராஜ்.. மற்றும் சில அறிமுகமில்லாத கிருஷ்ணாவின் ஓரிரு நண்பர்கள்.

சத்யா பொதுவாய் எல்லாரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு அவர்களுடன் கலந்து கொண்டான். அவன் அம்மாவைப் பார்த்து "நீ யார் கூட வந்தே.." என்றான்.

"ரஞ்சனி கூட ஆட்டோ ல"

கிருஷ்ணா எப்போதும் மாறாத அவன் ட்ரேட் மார்க் சிரிப்புடன் எல்லோருடனும் கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டான். அவனை கிண்டலும், கேலியுமாக சீண்டி உற்சாகமாய் எழுந்த குரல்கள் ரயில் நிலைய இரைச்சலில் கலந்தது. தன் மகன் இத்தனை நண்பர்கள் வைத்திருக்கிறானே என்ற பெருமிதம் அவன் அப்பா முகத்தில் சிறு புன்னகையாய் நிலைத்திருந்தது. சத்யாவுக்கும்கூட அவர் ஆச்சரியம் தொற்றிக் கொண்டுவிட்டதுதான். கிருஷ்ணா அப்படிப்பட்ட ஆள்தான். யாருடனும் நெருப்பு மாதிரி உடனே ஒட்டிக்கொண்டுவிடுவான். ரொம்ப ஃப்ரீயாக பழகும் டைப். குறிப்பாய் பெண்களிடம்.

சத்யாவுக்கு முதன் முதலாய் அவனுடன் ஏற்பட்ட அறிமுகம் நிழலாடுகிறது. ட்ரூ ஃப்யூஷன் அட்வர்டைஸிங்கில் வேலைக்குச் சேர்ந்த முதல்நாள் கம்பெனி வரவேற்பரை ஸோபாவில் உட்கார்ந்திருக்கிறான். எதிரே கரப்ஷன் என்ற டைட்டிலில் வரையப்பட்டிருந்த மாடர்ன் ஆர்ட்டை வெறித்து ரசித்துக்கொண்டிருந்தபோது அதை மறைத்துக்கொண்டு வந்து
நின்றான். "ஹலோ மிஸ்டர் நியூ அப்பாயிண்ட்மெண்ட்" என்று கை நீட்டினான். "ஐ அம் கிருஷ்ணா.. கால் மி கிருஷ்! ஆனா இந்தக் கம்பெனில என்ன பண்ணிட்டிருக்கேன்னு கேக்காத.."

அவன் தயங்கி கை நீட்டினான். கிருஷ்ணா சிரித்துவிட்டு நல்ல உறுதியாய் கைகுலுக்கினான். புதிதாய் அறிமுகமான ஒருத்தனுடன் இத்தனை சகஜமாய் பேச முடியுமா?. சத்யா அவனை வியந்து உள்ளே போனான். அதைவிட வியப்பு மேலிடுகிற சம்பவம் அன்றைய காலை 11.00 மணிக்கே நடந்தது. முதல் விளம்பர அசைண்ட்மெண்ட்டை எப்படி லே-அவுட் பண்ணலாமென்று அவன் மண்டையைப் பிய்த்தபடி யோசித்துக்கொண்டிருந்த போது பின்னாலிருந்து முதுகில் பளார் என்று அறை விழுந்தது. அவன் அதிர்ச்சியடைந்து திரும்பினான். பின்னால் அந்த கிருஷ்ணா நின்றிருக்கிறான். சத்யா வலித்த முதுகை பரிதாபமாய் சொறிந்து நிற்க, அவனது அதிர்ச்சி பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிருஷ்ணா மிகக் கூலாக "டேய்.. மச்சி, வெளிய டீ சாப்பிடப் போறேன் வரியா?" என்கிறான். சத்யா ஒரு நிமிடம் புரியாமல் நின்றிருந்தான். எப்படி என் அனுமதியில்லாமல் இத்தனை உரிமை எடுத்துக்கொள்கிறான் என்று யோசிக்க ஆரம்பிப்பதற்குள் அவனைத் தள்ளிக் கொண்டு நடந்தான். ஆனாலும் அவனின் அந்த நடவடிக்கை புது இடத்தின் முதல்நாள் டென்ஷனை நிச்சயம் குறைத்துவிட்டதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுடனும் ஜாலியாக பிற்பாடு அவன் மூலம் அறிமுகப்படுத்திக்கொள்ளவும் முடிந்தது.

அதற்கு மேல் அவனிடம் சம்பிரதாயம் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை சத்யாவுக்குத் தோன்றிவிட்டது. ஆயிரத்தில் ஒருத்தன்தான் இப்படியிருப்பான். இப்படியொரு நண்பன் கிடைப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று பின்னாளில் அவன் நிறைய தடவைகள் நினைத்துப்பார்த்த சம்பவங்களுண்டு. ரொம்ப இயல்பாய் இருப்பான். நன்றாய் அதிர்ந்து சிரிப்பான். ஆஃபிஸ் பாய் ஆறுமுகத்துடன் அவன் பேசுவதை உற்றுக் கவனித்தாலே அவன் எல்லோரிடமும் பழகும் பாங்கு தெரிந்து போகும். எல்லோருக்கும் மிகப் பிரியமான ஒரு பையன் அவன்.

இதோ இன்றுவரை முதுகில் அவன் கொடுக்கிற அந்த அறை தொடர்ந்து வருகிறது. சத்யாவால் மட்டுமல்ல, எல்லோராலும் அனுமதிக்கப்பட்ட அறை. ஆனால் இப்போதெல்லாம் அவனுக்கு வலிப்பதில்லை. சுபாஷிணி முதுகில்கூட இப்படித்தான் உரிமையாய் அறைவான். ஆனால் மெதுவாய். அவன் நட்புக்குக் கொடுக்கிற விலையாக அந்த அறையை எத்தனை தடவை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது அவனுக்கு.

பயணிகளைக் கவனிக்கச் சொல்லி, நீலகிரி எக்ஸ்பிரஸ் ஸ்டேஷனுக்குள் பிரவேசித்துக்கொண்டிருப்பதாக ஒருபெருக்கியில் பெண்குரல் அறிவித்துவிட்டு அடங்கியது. கிருஷ்ணா குடும்பம் உடைமைகளை ஒரு முறை ஓரக்கண்ணால் சரிபார்த்துக்கொண்டு ரயில் வரும் திசையில் பார்வையை ஓட்டினார்கள். அதிக பட்சம் இன்னுமொரு பதினைந்து நிமிடத்தில் கிருஷ்ணா இவ்விடம்விட்டுக் கிளம்பி விடுவான். அவன் என்னமோ முக்கியமான விஷயம் சொல்லவேண்டும் என்று சொன்னானே. என்னவாக இருக்கும்? அவன் சொன்னதை மனதில் ரீவைண்ட் செய்து பார்க்கும்போது லேசாய் ஒரு ஆர்வம் தலைதூக்கியது. ஒரு வேளை என் வேலை பற்றி? அல்லது என் சம்பள உயர்வு பற்றி தேவ் எதாவது அவனிடம் சொல்லியிருக்கலாம்! இல்லையென்றால், சிங்கப்பூர் போவதற்கு முன்னால் எதற்கும் இருக்கட்டும் என்று யாருக்கும் தெரியாமல் ரஞ்சனிக்கு திருட்டுத் தாலி கட்டிவிட்டானா? ஆச்சரியப்படுமளவு என்ன செய்தி அது? ஏன்தான் எப்போது பார்த்தாலும் புதிர் போடுகிறானோ.. படுவாவி! எப்போதுமே அவன் அப்படித்தான். அவனிடமிருந்து ஒரு விஷயத்தை முழுசாகச் கேட்டுமுடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். சத்யா யோசித்துக்கொண்டே அவனிருந்த திசையைப் பார்த்தபோது.. சத்யாவின் அம்மாவுடன் அவன் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவன் கையைப்பிடித்து அம்மா என்னவோ சொல்வதும் அதற்கு அவன் தலையாட்டுவதும் தெரிந்தது.
 
அப்புறம் அவன் மெல்ல நகர்ந்து எல்லோரிடமிருந்தும் தள்ளி நின்றிருந்த ரஞ்சனியிடம் போய் கிசுகிசுப்பாய் என்னவோ பேச ஆரம்பித்தான். ரஞ்சனி கர்சீப்பால் லேசாய் கண்களைத் துடைத்துக்கொண்டாள். சத்யாவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாயிருந்தது. கிருஷ்ணாவின் மேல் லேசாகக் கோபம்கூட வந்தது. ஒரு அழகான பெண்ணை இப்படி அம்போ என்று தவிக்கவிட்டுப் போவதா?

நீலகிரி நிதானமாய் வந்து பெருமூச்சிட்டு நின்றது. ஓரிரு நிமிடங்களில் பக்கத்துத் தண்டவாளத்தில் காத்திருந்த பெட்டிகளை ஷண்டிங் இன்ஜின் இழுத்து வந்து எக்ஸ்பிரஸோடு கோர்த்தது. கோச்சில் ஒட்டியிருந்த ரிஸர்வேஷன் சார்ட்டில் தத்தம் பெயர் தேட பயணிகள் ரயிலை அணுகினார்கள். கிருஷ்ணாவின் அப்பாவும் இதர நண்பர்களும் அந்த மெகா சூட்கேஸை ரயிலுக்குள் திணிக்கிற பொறுப்பை ஏற்றுக்கொள்ள... தானும் ஏதாவது உதவலாமா என்று சத்யா யோசிக்கும்போது கிருஷ்ணா அவனை நோக்கி வந்தான். மற்றவர்களிடம் "ஒரு நிமிஷம்... தோ வந்துர்றேன்." என்று மறுபடி அவன் தோளில் கைபோட்டு தள்ளிக்கொண்டு போனான்.

"டேய்.. சத்யா.. உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு சொன்னேன்ல!.." என்றான்.

"நான் அதுக்குத்தான் ரொம்ப நேரமா வெயிட்டிங்"

"சொல்றேன். அதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒண்ணு ரெண்டு கேள்வி"

"ஏண்டா படுத்தறே? சொல்ல வந்ததை நேரா சொல்லித்தொலை!" என்றான் சத்யா கடுப்பாய்.

அவன் ஹாஹா என்று சிரித்துவிட்டு.. "சரி.. நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா? இல்ல பண்ணிட்டு இருக்கியா?" என்றான். அவன் அவனைக் குழப்பமாய்ப் பார்த்தான்.

"ஏதாவது காதல் அனுபவம், 'இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது' ன்னு பாட்டுப்பாடற மாதிரி.. படபடன்னு நெஞ்சுக்குள்ள புறா, பட்டாம்பூச்சியெல்லாம் துடிக்கிற மாதிரி... இல்லைன்னா மனசுக்குள்ள ஒரு பெரிய அலை, இல்ல மழை, குளிர் அப்பறம்..."

எதற்கு கிளம்புகிற நேரத்தில் உளறிக்கொண்டிருக்கிறான் என்று சத்யாவுக்கு யோசனை ஓடியது. "என்னடா ஆச்சு உனக்கு?" என்றான்.

"கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடா"

"அப்படியெதும் இருந்தாதான் நான் உங்கிட்ட சொல்லியிருப்பனே..! என்ன விஷயம் சுத்தி வளைக்காம சொல்லு."

அவன் முகத்தைப்பார்த்தால் ஏதோ பெரிய விஷயத்தை மனசுக்குள் மறைத்து வைத்துக்கொண்டிருப்பவனைப் போல் இருந்தது. கிருஷ்ணா பதில் சொல்லாமல் கம்பார்ட்மெண்ட் ஜன்னலோரம் நிற்கிற ரஞ்சனியைப் பார்த்து ஒரு தடவை கண்ணடித்துச் சிரித்தான். அவள் முகத்தில் லேசாய் வெட்கப் புன்னகையொன்று உதித்து மறைந்தது.

"டேய் உன் ரொமான்ஸை ரெண்டு நிமிஷம் தள்ளி வெச்சுட்டு மேட்டர சொல்லிருடா கண்ணா" சத்யாவுக்கு பொறுமையிழந்துவிட்டது.

"பாம்" என்று ரயில் ஹார்ன் அடித்து கிளம்பப் போவதை எச்சரித்தது. அவன் அப்பா ஜன்னலிலிருந்து அவனை ஏறிக்கோ என்று சைகையால் அழைத்தார்.

"சரி சொல்லிர்ரேன். மச்சி உன்னை ஒரு பொண்ணு ரொம்ப ஸீரியஸா லவ் பண்ணிட்டு இருக்கு. அது உனக்குத் தெரியுமா?" என்றான். சத்யாவுக்கு அவன் சொன்னதன் தீவிரம் கொஞ்சம் லேட்டாய் உறைத்து ஜிர் என்று பாதத்திலிருந்து உச்சந்தலைக்கு ஒரு இனிய அதிர்வு நேர்கோட்டில் ஓடியது.

"ஏய் என்னடா? விளையாடறியா?!!!" என்றான் நம்பிக்கையில்லாமல். கிருஷ்ணா அவன் முகத்தில் பரபரவென்று ஓடிய உணர்வுகளை உற்றுப் பார்த்தான்.

"விளையாடலை. நிஜமாத்தாண்டா!."

அந்த சூழ்நிலைக்கு ரீரெகார்டிங் மாதிரி ஸ்பீக்கரில் டிங் என்று மணி அடித்து தொடர்ந்து ரயில் புறப்படப்போவது அறிவிக்கப்பட்டது.

"யார்ரா?" என்றான் சத்யா குழப்பம் கலந்த ஆர்வத்துடன்.

"தோ பார்ரா!!.. உனக்கு புல்லரிச்சுப் போச்சு! என்ன? ஜிவ்வுன்னு பறக்கற ஃபீலிங் வருதா?" என்று கப கபவென சிரித்தான். "ஆனா அது யார்னு நான் சொல்ல மாட்டேன் சத்யா. சஸ்பென்ஸ். அது உனக்கே கூடிய சீக்கிரம் தெரியவரும். அதுவரைக்கும் இதே ஃபீலிங் மெயின்டெய்ன் பண்ணு. ஓகேவா? ஹேவ் எ க்ரேட் டைம். வண்டி கிளம்பப் போகுது வர்ட்டா.!

அவன் எல்லோரிடமும் கைலுக்கி, டாட்டா காட்டி விடைபெற்றுவிட்டு ஓடிப்போய் S3 பெட்டியில் ஏறிக்கொண்டான். சிக்னல் விழுந்து ரயில் ஓரிரு விநாடிகளில் மெல்ல நகர ஆரம்பித்தது. ஜன்னலில் கிருஷ்ணாவின் முகம் தெரிந்தது. மீண்டும் எல்லோருக்கும் டாட்டா காட்ட வெளியே நீட்டின கையால் அப்படியே ரஞ்சனியின் கையைப்பிடித்து லேசாய் அழுத்திவிடுவதைப் சத்யா பார்த்தான். அவன் உடம்பில் ஊடுறுவிய பரபரப்பு நட்சத்திரங்களோடு கிருஷ்ணாவைப் பார்க்க அவனும் கூட்டத்தினிடையே இவனைப் பார்த்து கட்டைவிரல் உயர்த்திக்காட்டினான். சத்யா கண்களால் அவனிடம் மறுபடி 'யார்ரா?' என்று கேட்டான். பதிலுக்கு அவனிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டும் பதிலாய் வந்தது.

ரயில் நகர்ந்து வேகமெடுத்து அதன் பின்புற X கண்ணிலிருந்து மறையும்வரை சத்யா ஸ்தம்பித்து நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.

(தொடரும்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors