தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 1]
- ஜெயந்தி சங்கர்

கோடைவெயில் கொளுத்திக்கொண்டிருக்க, ஒவ்வொரு வருடமும் சொல்லும்,'இந்த வருஷம் ஆனாலும் வெயில் ரொம்ப ஜாஸ்தி இல்ல?', என்ற வழக்கமான சலிப்பை சென்னை மக்கள் ஆங்காங்கே உதிர்த்துக்கொண்டிருந்தனர். வீட்டிற்குள்ளேயே இருந்தால் ஓரளவிற்கு சகித்துக்கொள்ளும் படிதான் இருந்தது. வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் வீடு சொர்க்கம்தான்.

டீவியில் ஓடிக்கொண்டிருந்த 'நகைச்சுவை'க் காட்சிக்கு வழக்கத்திற்குமாறாக அன்று சிரித்துக்கொண்டிருந்தேன். புதிய திரைப் படத்திலிருந்து நான் இதுவரை பார்த்தேயிராத காட்சி என்பது ஒரு காரணம். வழக்கமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மருத்துவம் தொடர்புடைய நிகழ்ச்சிகள் அல்லது செய்திகள் மட்டுமே பார்ப்பது எனக்குப் பிடிக்கும். செயற்கைத்தனத்தில் தோய்த்தெடுத்த திரைப்படங்கள் எனக்கு மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். முப்பது நாற்பது பேர்சேர்ந்து ஆடும் ஆட்டத்தைப் பார்த்தாலோ என் ரத்த அழுத்தம் ஏகிறிவிடும். எப்போதாவது வேலை முடிந்து வீட்டிற்குக் களைப்பாக வந்து ஓய்வெடுக்கும் போது திரைப்படங்களின் நகைச்சுவைக்காட்சிகள், அதுவும் புதியதாக இருந்தால் மட்டும் ரசிப்பதுண்டு.

திடீரென்று அன்று வீட்டிற்கு உமா வந்து நிற்பாளென்று நாங்கள் யாருமே துளியும் எதிர்பார்க்கவில்லை. சனிக்கிழமை மதியம். வழக்கமாக வெளியில் போய் விடும் வசந்த், அன்று வீட்டில் இருந்தான். நல்லவேளை இருந்தானே என்று எனக்கு நிம்மதியாகிப் போனது. இல்லையென்றால் பாவம், உமா எங்களோடு பேசக் கூச்சப்பட்டுக்கொண்டு சொல்லவந்ததைச் சொல்ல முடியாமல் ஏமார்ந்தும் கூடப்போயிருக்கலாம்.

டீவி ஓடிக்கொண்டிருந்ததால், வாசலில் உமா 'காலிங்க் பெல்' அழுத்தியும் சரியாகக் காதில் விழுவில்லை. எனக்குக் கேட்டமாதிரியும் இருந்தது. எதிர் '·ப்ளேட்'டில் தான் 'பெல்' அடிக்கிறார்களோ என்றும் தோன்றியது. பிறகு, டொக் டொக்கென்று கதவு தட்டப் பட்டதும்தான் எங்கள் வீட்டிற்கு யாரோ வந்ததே தெரிந்தது. போய் கதவைத் திறக்கச் சொன்னேன் மரியத்திடம். அதற்கு முன் பார்த்ததில்லையாதலால், மரியா யாரென்று கேட்டாள். 'உமா', என்றதுமே, மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே உள்ளே கூப்பிட்டு உட்காரச்சொன்னாள்.

உள்ளே நுழைந்துகொண்டே, புன்சிரிப்போடு கைகூப்பி 'வணக்கம்' சொன்னாள் உமா. " 'செல்லை ஆஃப் பண்ணி வச்சிருக்கார் போல உங்க பிள்ளை. அதான் குமார்கிட்ட உங்க அட்ரஸ் கேட்டு வாங்கிண்டு வரேன். ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்", என்று சொல்லிக் கொண்டே தயங்கித்தயங்கி உள்ளே வந்தவள், உட்காரச்சொன்னதும் சோபாவின் நுனியில் உட்கார்ந்து கொண்டாள். திடீரென்று அவள் புறப்பட்டு வந்ததை நாங்கள் தவறாக நினைத்து விடப்போகிறோமே என்ற அக்கறை தெரித்தது அவள் வார்த்தைகளில். அப்போதுதான் அந்த குமார் பையன் வீட்டுக்கு வந்து பலநாட்கள் ஆகியிருந்தது நினைவுக்கு வந்தது.

மரியம் அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்த வசந்த்தை எழுப்பப்போனாள். கதவைத் தட்டியதும், "என்னம்மா?", என்று அலுத்துக் கொண்டே தூக்கக் கலக்கத்துடன் திறந்தவனிடம், "உமா வந்திருக்குப்பா. உன்னோட பேசணும்போல. என்னவோ ஏதோ தெரியல்ல. வந்து பேசு, வா", என்றாள் குசுகுசுவென்று. "உமாவா?", என்று அறைக்குள்ளேயிருந்து தலையை நீட்டி அறையைப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே உடை மாற்றிக் கொள்ளப்போய்விட்டான். மரியம் சமையலறைக்குள் போய்விட்டாள்.

எதிரில் சோபாவில் உட்கார்ந்திருந்த உமாவைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருந்தும் ஏன் எனக்கு அவளோடு சகஜமாகப் பேச முடியவில்லை என்று நினைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ஒரு முறை அவள் முகத்தைப் பார்த்து சிரித்தேன். என்ன செய்வது என்று தெரியாமல், எழுந்து டேபிள் ·பேனின் வேகத்தைக் கூட்டி உமாவின் பக்கம் திருப்பி வைத்தேன். வெயிலில் வந்திருந்தவளின் முகம் சிவந்து முத்துமுத்தாக வியர்த்திருந்தது.

நல்ல எலும்பிச்சை நிறம். அளவான உயரமும் உயரத்திற்கேற்ற பருமனுமாக இருந்தாள். நெற்றியில் ஸ்டிக்கர் போட்டுக்குமேலே திருநீரு சின்னதாக. வலது மூக்கில் குட்டிச் சிவப்புக் கல் பளபளத்தது. வலது கையில் ஒரே ஒரு மெல்லிய பொன்வளையல். இடக்கையில் குட்டி கைக்கடிகாரம். வாயைத் திறந்து பேசவே வேண்டாம். ஐயர் பெண் என்று உருவத்தைப் பார்த்ததுமே சொல்லி விடலாம். கையை விரித்து, பின் மடித்துத் திருப்பி, விரலில் இருந்த மோதிரத்தைத் திருகி, மீண்டும் கையை விரித்து, மடக்கி ஏதேதோ செய்தபடியிருந்தாள். நடுவில் ஒரு முறை என்னைப்பார்த்துச் சிரித்தாள்.

நல்லவேளை, கருப்புக்கு அருகில் இருந்த என் நிறத்தைப் பெறவில்லை  வசந்த் . அவன் மாரியாவின் நிறம். உமாவுக்கு மிகவும் பொருத்தம். மரியாவைப்போலவே அவனுக்கும் அழகான அடர்த்தியான சுருட்டை முடி என்று நினைத்துக் கொண்டே என் வழுக்கை விழுந்த தலைத் தடவிக் கொண்டேன்.
 
உமாவை தான் முதன்முதலில் சந்தித்தது முதல் ஒவ்வொன்றையும் என் மகன் வசந்த் என்னிடமும் என் மனைவி மரியாவிடமும் சொல்லியிருந்தான். என் தங்கை மகள் ஷீலா உமாவுடன் தான் வேலை பார்த்தாள். வசந்த் போன வருடம் ஆபீஸில் வடநாட்டுச் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை ஏற்று நடத்தினான். ஒரு பெரிய கூட்டமே போகவிருந்தது.

டிக்கெட் ஏற்பாடுகள் செய்தது ஷீலா. டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள ஷீலா வேலை செய்த மௌண்ட் ரோட் டிராவல் ஏஜெண்ட் ஆபீஸ¤க்குப் போயிருக்கிறான் வசந்த். ஷீலா அப்போதுதான் உமாவை 'சிநேகிதி', என்று அறிமுகப்படுத்தியிருக்கிறாள். அவசரத்தில் இருந்த வசந்த் அன்று உமாவைச் சரியாகப் பார்க்கக்கூட இல்லையாம்.

அடுத்த வாரமே ஒரு நாள் கன்னிமெராவில், வசந்த்தைப் பார்த்த உமா, 'ஹலோ', என்றாளாம். இவனோ முழித்திருக்கிறான் திருதிரு வென்று. முகங்களையும் பெயர்களையும் நினைவில் வைத்துக் கொள்வதில் அப்படியே என்னைக்கொண்டு பிறந்திருந்தானே என் மகன்!

"நீங்க,..", என்று இழுத்தவனிடம், ஷீலாவைப்பற்றியும், ஆபீஸ்பற்றியும், ஒரு வாரம் முன்பு நடந்த சந்திப்பைப் பற்றியும் நினைவூட்டியிருக்கிறாள். அதன் பிறகு, விடாமல் வசந்த் பேசிக்கொண்டே இருந்திருக்கிறான். அன்று புத்தகங்கள் பற்றியும் அவரவர் புத்தக ரசனை பற்றியும் பொதுவாகப் பேசிவிட்டுப் பிரிந்தனராம்.

அடுத்து வந்த வாரங்களில் ஒரே நேரத்தில் நூலகத்திற்குப் போனார்கள். பேசினார்கள். லத்தின் அமெரிக்க இலக்கியம், மொழி பெயர்ப்பு இலக்கியம் என்று தொடங்கி பின் நவீனத்துவம், அந்த இஸம் இந்த இஸம் என்று மணிக்கணக்காக மரத்தடியில் உட்கார்ந்து பேசியதில் இருவரிடையே ரசனையில் இருந்த ஒற்றுமையில் மகிழ்ந்து, வேற்றுமையில் வியந்து மீண்டும் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள். மாதக்கணக்கில் பேசிப்பழகியதில் புத்தகங்களை மாற்றிக்கொண்டவர்கள் மனங்களையும் மாற்றிக்கொண்டுவிட்டனர்.

ஷீலாவை வசந்துக்கு மணமுடிக்க இரு குடும்பங்களும் நினைத்ததும் வசந்த் அறிவான். பெரியவர்களின் ஆசை என்ற அளவில் தான் அதற்கு மறுப்போ இசைவோ காட்டாமலே இருந்திருக்கிறான். அதை அவன் உணர ஆரம்பித்ததே உமாவை நோக்கி அவனின் மனம் போகத் துவங்கியபோதுதான். பலமுறை தற்செயலாயும் திட்டமிட்டும் சந்தித்துப் பழகியபோது ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டனர். ஆனால், இருவருமே மனதை வெளியிடத் தயங்கியிருக்கின்றனர். ஷீலாதான் வசந்த்திற்கு உதவினாள்.

அதற்குப்பிறகு, தேவையென்றால் மட்டுமே சந்திப்பது என்று ஒரு மனதாக முடிவெடுத்த உமாவும் வசந்த்தும் அடிக்கடி போனில் தான்பேசிக்கொண்டனர். அவர்கள் ஒருவர் நலனில் இன்னொருவர் கொண்ட அக்கறையை வியந்தும் மெச்சியும் ஷீலா மணிக்கணக்கில் பேசினாள்.

வசந்த் தன் காதலைப்பற்றி வீட்டில் சொன்னபோது முதலில் தாம்தூமென்று குதித்ததே நான் தான். பிறகு, சீக்கிரமே என் மகனைப் புரிந்துகொண்டேன். அதற்கு உதவியதும் ஷீலாதான். அவளை நினைத்துத் தான் மிகவும் கவலைகொண்டேன். "மாமா, கொஞ்சம் சும்மா இருங்க. இப்ப என்னதான் ஆயிடுச்சு? உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? ஆரம்பத்துலயிருந்தே எனக்கு தான் வசந்த்தைக் கல்யாணம் கட்ட விருப்பம். அவருக்கு பெரிசா விருப்போ வெறுப்போ இருக்கல்ல. இப்ப, உமாவத்தான் அவருக்குப் பிடிச்சிருக்கு. உமா ரொம்ப நல்ல பொண்ணு, மாமா. என்னயும்விட நல்ல பொண்ணு. அவங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழ கர்த்தர் ஆசிர்வதிப்பார்", என்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டாள். அவள் மனதில் இருந்த வருத்தமும் ஏமாற்றமும் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று மிகச்சாமர்த்தியமாக மறைத்தாள். அது என்னை இன்னும் வருத்தியது.

அடுத்த தெருவில் தான் இருந்தது என் தங்கை குடும்பம். அடிக்கடி வந்துபோவாள் ஷீலா. இது தெரிந்ததும் இன்னும் அடிக்கடி வந்துபோக ஆரம்பித்தாள். எனக்கும் மரியாவுக்கும் மனவருத்தம் ஏற்படாமலிருக்க அவள் எடுத்த சில பிரயத்தனங்களில் அதுவும் ஒன்று.

உமா ஐயர் பெண் என்று வசந்த் சொன்னதுமே எனக்குக் கொஞ்சம் கவலை வந்துவிட்டிருந்தது. இவன் எதுக்கு வேண்டாத தலைவலியை வாங்கிக் கொள்கிறான் என்று சிந்திக்கத் தொடங்கினேன். ஆனால், இதிலெல்லாம் தான் மூளைக்கு வேலையே இல்லை போலிருக்கிறதே. வீட்டிற்கு ஒரே மகளாம். எனக்காவது மூத்தவன் எங்க மனசுப்போல கல்யாணம் கட்டிக்கிட்டு, பேரனப்பெத்துக் கொடுத்துட்டு, குடும்பத்தோட ஊட்டியில டீச்சரா இருக்கான்.

ஒரே மகள ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் கட்ட சம்மதிப்பாங்களான்னு நெனச்சா குழப்பமாவேயிருக்கு. வசந்த் தான் ரொம்ப நம்பிக்கையாப் பேசிட்டு வரான் ஒவ்வொரு முறையும் இதப்பத்தி பேசும்போது. காதலுக்குக் கண் இல்லைன்றது உண்மையோ என்னவோ, ஆனா காதல் வரும்போது குருட்டு நம்பிக்கை அபரிமிதமாதான் வந்துடுது.

" இன்னிக்கி உங்களுக்கு லீவா அங்கிள்?", என்று உமா கேட்டதும், சற்றும் எதிர்பார்க்கவில்லையா, அவள் முகத்தைப்பார்த்து முதலில் அசட்டுச் சிரிப்பு சிரித்தேன். நீயாவது ஒரு வழியாகப் பேசினாயே என்பதுபோல இருந்ததோ என் சிரிப்பு. பிறகு, "இல்லம்மா. சனிக்கெழம, ஆ·ப் டே தானே ப்ரெஸ். ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவேன்", என்றேன்.

பதட்டத்துக்கிடையிலும் என்னுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டு, தானே இரண்டு வார்த்தை பேச வேண்டும் என்ற இங்கிதம் கருதிப் பேசியது அவளின் பானை நிறைய பண்பிற்கு ஒரு சோற்றுப் பதமாகத் தோன்றியது எனக்கு.

"வசந்த் இதோ, இப்ப வந்துடுவாம்மா", என்று சொல்லிக்கொண்டே மரியம் ஒரு கண்ணாடி டம்ப்ளரில் ஆரஞ்சு ஜூஸை நீட்டியதும் உமா வாங்கிக் கொண்டு, "தேங்க்ஸ் ஆண்டி", என்றாள் புன்சிரிப்போடு. கையில் வாங்கிய ஜூஸை அப்படியே டீபாமேல் வைத்துவிட்டு, வசந்த் வருகிறானா என்று அறைப்பக்கம் பார்த்தாள். "நீ குடிம்மா, அவன் வந்துடுவான்", என்றதும், ஜூஸை எடுத்து ஒரு மடக்கு குடித்துவிட்டு மீண்டும் வைத்துவிட்டாள்.

"உமா, என்ன விஷயம்? வீட்டுல ஏதும் பிரச்சனையா?", என்று பதட்டத்துடன் கேட்ட படி வசந்த் பரபரவென்று ஹாலுக்கு வந்தான். அதற்காகவே காத்திருந்தாற்போல உமாவின் கண்களிருந்து குபுக்கென்று கிளம்பியது. அவளால் பேச முடியவில்லை. "உமா, ப்ளீஸ் அழாதயேன். நா ஹெல்ப் பண்றேன், என்ன விஷயம்? மொதல்ல அதச் சொல்லு", என்று வசந்த் பொறுமையாகக் கேட்டான்.

"எங்க அப்பா அம்மா எனக்கு கல்யாணத்துக்கு வரன் பாக்க ஆரம்பிச்சுட்டான்னு சொன்னேனில்லையா. நாளைக்கி என்னை 'பொண் பார்க்க' வரா. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல்ல. ரொம்ப பயமாயிருக்கு. நம்ம விஷயத்தையும் சொல்லணும். ஆனா, சொல்லவும் துணிவில்ல. என்ன செய்யறதுன்னு ஒரே கொழப்பமா இருந்துது, உங்க செல்லுக்கு அடிச்சு அடிச்சு ஓஞ்சுட்டேன். குமார் தான் கடசீல உங்க அட்ரஸ் தந்தார். வேற வழியில்லாம ஆட்டோ பிடிச்சு நேரா வந்துட்டேன். ஷீலா ஊட்டிக்கிப் போயிருக்கறது அம்மாக்குத் தெரியாது. ஷீலாவப் பாக்கப்போறதாச் சொல்லிட்டு வந்தேன்.வீட்ல இதுவரைக்கும் நான் இந்தமாதிரியெல்லாம் பொய்யே சொன்னதில்ல. அதுவேற கொஞ்சம் உறுத்தலா இருக்கு. ஆனா, இப்ப நாளைக்கி நடக்கப்போறத நெனச்சா தான் எனக்கு வயத்தக் கலக்கறது. இத நிறுத்தறதுக்காவது அவாகிட்ட நாம நம்ம விஷயத்தச் சொல்லியாகணும்போல்ருக்கு. இப்ப என்ன பண்றது வசந்த்?", என்று வசந்த்தைப்பார்த்துக்கொண்டே இடையிடையே என்னையும் பார்த்துக்கொண்டு சொல்லிமுடித்தாள் உமா.

இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பயந்தாகொள்ளியா? பலவாறாய் யோசித்தபிறகு, பெற்றவர்களை மதிக்கிறாள், அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறாள். ஆகவே பயப்படுகிறாள் என்று மட்டும் புரிந்தது எனக்கு. வசந்த் உமாவைப்பற்றி முன்பே வீட்டில் சொல்லிருந்தது உமாவுக்குத் தெரிந்திருந்ததால், அவளால் அதிக கூச்சமோ தயக்கமோயில்லாமல் வர முடிந்திருக்கிறது.

" ஓ கமான் உமா, 'பொண்ணு பார்க்க'த்தானே வராங்க. அதுக்கெதுக்கு இவ்வளவு பதட்டம்? அப்பா, பாத்தீங்களாப்பா, உமாவ எவ்வளவு பயந்தாங்கொள்ளியா இருக்கான்னு?", என்று சிரித்துக்கொண்டே என்னைப்பார்த்துக் கேட்டுக்கொண்டான். நான் என்ன சொல்ல? பேசாமல் பொதுவாகப் புன்னகைத்துவைத்தேன். பதிலை எதிர்பார்த்து ஒன்றும் அவன் சொல்லவில்லை. இருந்தாலும் நான் எவ்விதம் எதிர்வினை செய்ய? அந்தநேரத்தில் எந்த வார்த்தை எப்படிப் பொருள் கொடுக்குமோ என்னவோ. பதட்டத்தில் இருந்த அந்தப்பெண்ணைச் சமாதானப்படுத்தத்தான் வசந்த் இருந்தானே.

"இங்க பாரு உமா, இப்ப நீ உங்க பேரண்ட்ஸ் கிட்ட விஷயத்த சொல்லணும். அதுக்கு நான் கூட வந்தா சரியா வரும்னா, வரேன். இப்பவே கெளம்புவோம். ம்? அவங்ககிட்ட நாம கல்யாணம் பண்ணிக்கப்போறோம்னு சொல்றேன். எப்பவோ சொல்லியிருக்க வேண்டியது. நீ தான் பயந்துகிட்டே இருந்த. எப்படியும் சொல்லவேண்டியதுதானே. இப்பவாவது சொல்லுவோம்."

" இல்ல, அப்பா உங்கள அவமானப்படுத்திப் பேசினாலும் பேசிடுவார். நானே சொல்றேன்", என்றவளிடம்,

"சரி, ஓகே. அதுக்குதான் நேர இங்க வந்து அழறணுமா?", என்று கேட்டு கேலிசெய்து அவளின் மனநிலையை மாற்ற முயற்சித்தான். உமா கொஞ்சமாகச் சிரித்தாள்.

"எனக்கு என்னவோ ரொம்ப பயமாயிருக்கு. உங்ககிட்ட மொதல்ல சொல்லணும்னு தான் தோணிண்டே இருந்துது ராத்தியிலேருந்து, எங்கப்பாவும் அம்மாவும் நம்ம யோசனைய ஏத்துப்பாளான்னே தெரியல்ல. சம்மதம் வாங்கறது ரொம்ப கஷ்டம் தான். என்ன செய்யப் போறேனோ தெரியல்ல", என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அழக்கிளம்பினாள்.

"உமா ரிலாக்ஸ். இன்னும் நாம அவங்ககிட்ட சொல்லவேயில்ல. அதுக்குள்ள 'கண்க்ளூஷன்ஸ்' வேண்டாமே. பாஸிடிவா திங்க் பண்ணு. உனக்கு பயமாயிருந்தா சொல்லு. நானே வந்து சொல்றேன். கோபத்துல கத்தினா கத்தட்டுமே. இதெல்லாம் ஏற்கனவே நாம எதிர்பார்த்ததுதானே? வா கெளம்பு,.."

"இல்ல வேண்டாம், நானே சொல்லிக்கறேன். இப்ப நான் 'அவுன்ஸ் மாமா' ஆத்துக்குத் தான் போறதா இருக்கேன். அங்க போயி அவர்கிட்ட சொல்லி, அவரையும் கூட்டிண்டு அப்பாகிட்ட சொல்லலாம்னு,..", என்று தன் யோசனையை உமா சொன்னதும்,

"சரி, அப்படியே செய்வோம். வா, நானே அவரு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்", என்று கிளம்பினான். உமா கைகூப்பி வணங்கி, எங்களிடம் விடை பெற்றுக் கொண்டு அவன் பின்னாலேயே போனாள்.

இருவரும் வீதியில் கிடைத்த ஆட்டோவில் ஏறிப் போவதை மாடி ஜன்னலிலிருந்து பார்த்துக்கொண்டே நின்றேன். கூடுவாஞ்சேரிக்கு முதன்முதலில் நாங்கள் குடிவந்தபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன வீடுகள்.அத்துவானமாய் இருந்ததால், அப்போதெல்லாம்  கொஞ்சம் பயமாகக்கூட இருக்கும். ஆனால், கடந்த பத்து வருடங்களில் மளமளவென்று முன்னேறி நெருக்கமாக ஏராளமாய் முளைத்துவிட்டிருந்தன.

ஒரே மகள அவங்க இஷ்டத்துக்குக் கட்டிக்கொடுக்கணும்னு நினைப்பாங்களே. நியாயமான ஆசைதானே அது. எதிர்த்துகிட்டா செய்ய முடியும் கல்யாணத்த. பெத்தவங்க ஆசிகளோட நல்லா நடந்தாதானே வாழப்போறவங்க நல்லா வாழ முடியும்.

இவங்க விஷயம் இன்னமும் ஷீலாவோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாது. பக்குவமாத்தான் சொல்லணும். பாவம், தங்கச்சி, ரொம்ப நம்பிக்கையா இருக்குது. ஆனா, ஷீலா சமாளிப்பாள் அம்மாவ. எனக்கு இன்னொரு மகனில்ல, கட்டிவைக்க. அதுக்கென்ன செய்ய, நல்ல பையனா வெளிய பார்த்து முடிச்சுடலாம். ஷீலாவோட குணத்துக்கும் மனசுக்கும் ஏத்த நல்ல மாப்பிள்ளையா நானே பார்த்து முடிச்சு வைப்பேன்.

உமாவின் வீட்டில் ஒத்துக்கொள்வார்களா மாட்டார்களா என்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் கல்யாணம் நடந்தா பிற்காலத்துல இவங்க ரெண்டு பேருக்கும் இருக்கற பழக்கவழக்கங்களில் உள்ள வித்தியாசம் நிறைய பிரச்சனைகளைக் கொண்டு வரக்கூடுமே ! எப்ப அதைப்பத்திப் பேசினாலும், உமாவோட பழக்கவழக்கத்துக்கு நான் என்னை மாத்திக்கிடுவேன்னு அடிச்சு சொல்லிடறான் வசந்த். நடைமுறையில அதெல்லாம் சாத்தியந்தானா? !

எவ்வளவு பெரும்போக்கானவங்களா இருந்தாலும் கலப்புமணத்தை  உமா வீட்டுல ஆதரிப்பாங்களா? சந்தேகம் தான். அதான் உமா அவ்ளோ பயப்படுது. எனக்கென்னவோ அவங்கிட்டயிருந்து எதிர்ப்பு பலமாத்தான் இருக்கும்னு தோணிகிட்டேயிருக்கு. எது எப்படியோ,. யாருக்கும் மனக்கஷ்டமில்லாம நல்லது நடக்க ஆண்டவன் தான் அருளணும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors