தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : புதையல் தீவு [பாகம் : 1]
- பா.ராகவன்

"ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கரண்டி பொங்கல்" என்று மகாலிங்க வாத்தியார் சொன்னதுமே பாலுவுக்கு அழுகை வந்துவிட்டது. அடக்கடவுளே! ரெண்டு இட்லியும் ஒரு வடையும் ஒரே வாயில் உள்ளே போய்விடும். ஒரு கரண்டி பொங்கல் என்பது உள்ளே போவதுகூடக் கஷ்டம். பல்லுக்கு மட்டும்தான் அது போதுமானது! அப்புறம் பசி எங்கிருந்து அடங்கும்?

சின்னப்பையன்களுக்குக் கச்சாமுச்சாவென்று பசிக்காது என்று யார் இந்த மகாலிங்க வாத்தியாரிடம் சொன்னது? அதுவும் தன்னைப்போல பீமபுஷ்டிப் பையன்கள் ஐயோ பாவம் என்று ஏன் இவருக்குத் தோன்றவே தோன்றுவதில்லை?

அவனுக்கு அன்றைய காலை மெனுவைக் கேட்டதுமே அழுகை அழுகையாக வந்துவிட்டது. குறைந்தபட்சம் பத்து இட்லிகள் வேண்டும். பொங்கல் என்றால் மூணு ப்ளேட். வடைக்கு லிமிட் உண்டா என்ன? எத்தனை ஆனாலும் சம்மதமே.

"குண்டா! கொஞ்சம் சாப்பாட்டைக் குறைக்கணும்டா. ஸ்கவுட்ல இருக்கற பையன் இவ்ளோ குண்டா இருந்தா எப்படி ஓடி ஆடி வேலை செய்யமுடியும்?" என்று கேட்டார் வாத்தியார்.

பாலுவுக்கு சிரிப்பு வந்தது. அவன் குண்டுதான். செம குண்டு! பின்னால் நின்று வேறு யாராவது இறுக்கிப் பிடிக்கப் பார்த்தால், அவன் தொப்பை ஒருபோதும் இரு கைகளுக்கு அடங்காது! மூக்கில் வழுக்கி வழுக்கி விழும் கண்ணாடியும் அவன் தொப்பையும், வாரவார அடங்காமல் தூக்கிக்கொண்டு முன்னால் நிற்கும் தலைமுடியும் சேர்ந்து அவனை வகுப்பறையில் ஒரு கார்ட்டூனாகத்தான் எப்போதும் காட்டும். ஆனால் யாரும் அவனை கிண்டலுக்காக 'குண்டா' என்று கூப்பிடமாட்டார்கள். அது ஒரு செல்லப்பெயர்.

"க்ளாஸுக்கு ஒரு புள்ளையார் இருந்தா நல்லதுதானே சார்" என்பான் பக்கத்து டெஸ்க் பத்மநாபன்.

"இவர் கொழுக்கட்டை சாப்பிடற பிள்ளையார் இல்லே... கொழுக்கட்டையாவே இருக்கற பிள்ளையார்!"

"அதுவும் சாதாரண கொழுக்கட்டை இல்லே.. ஜம்போ கொழுக்கட்டை!"

வகுப்பறையே சிரிப்பில் வெடிக்கும். பாலுவும் சேர்ந்து சிரிப்பான். அவனது உருவத்தைப் பற்றி யார் பேசினாலும் அவனுக்குக் கோபமோ, வருத்தமோ வராது. எல்லாமே அன்பால் செய்யப்படும் தமாஷ் என்றுதான் எடுத்துக்கொள்ளுவான். குறிப்பாக மகாலிங்க வாத்தியார். அப்பா! எப்பேர்ப்பட்ட கிண்டல் பேர்வழி! அதுவும் பாலுவைச் சீண்டுவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சே, கொழுக்கட்டை சாப்பிடுவது மாதிரி.

கிண்டல் முடிந்த சூட்டிலேயே அவர் இன்னொன்றும் சொல்லுவார். அதுதான் அவரிடம் பாலுவுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

"பாருங்கடா! நம்ம புள்ளையாருக்கு உடம்பு மட்டுமில்லை... மூளையும் பெரிசு. இன்னி வரைக்கும் க்ளாஸ்லே அவனளவுக்கு வேற யார் மார்க் வாங்கியிருக்காங்க, சொல்லுங்க பாப்போம்? ஒரு எக்ஸாம்லயாவது ௬பர்ஸ்ட் ரேங்க்கைத் தவிர வேற வாங்கியிருக்கானா? நாம சாப்பிடற இட்லியெல்லாம் உடம்புல கீழ் நோக்கிப் போவுது... நம்ம புள்ளையாருக்கு மட்டும்தான் உள்ள போற எல்லாமே மேல்நோக்கிப் போவுது" என்பார்.

பாலுவுக்குப் பரம சந்தோஷமாக இருக்கும். மனசுவிட்டு ஒரு வாத்தியார் இப்படி அத்தனை மாணவர்களூக்கு எதிரில் பாராட்டுவதைவிட வேறென்ன வேண்டும்? இதற்காகவே இன்னும் நன்றாகப் படிக்கலாம்! இதற்காகவே இன்னும் பத்து இட்லி கூடுதலாகச் சாப்பிடலாம்!

அவன் அம்மாவுக்குத்தான் அந்த விஷயம் கவலையளித்தது. பார்க்கிற டாக்டர்களிடமெல்லாம் தவறாமல் கேட்டுக்கொண்டிருப்பாள். "என் பிள்ளை ஏன் டாக்டர் இவ்ளோ குண்டா இருக்கான்?"

என்னமோ சில ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதனால்தான் குண்டர்கள் குண்டாக இருக்கிறார்கள் என்று எல்லா டாக்டர்களும் சொன்னார்கள்.

"டயட்ல இருக்கணும். தினமும் வாக்கிங் போகணும். சின்னப்பையந்தானே... பதினாறு, பதினெட்டு வயசாறதுக்குள்ள இளைச்சுடுவான்" என்பார்கள்.

ஆனால் பாலுவுக்கு இளைக்கிற உத்தேசமே இல்லை! எதற்கு இளைக்க வேண்டும்? குண்டாக இருப்பதிலும் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ரொம்ப முக்கியம், அத்தனைபேரின் கவனத்தையும் சுலபமாகக் கவரமுடிகிறது. வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி. யாரும் அதிகமாக வேலை வாங்குவதில்லை. சும்மா இருக்கிற நேரங்களில் உட்கார்ந்து உருப்படியாக நிறையப் படிக்க முடிகிறது. செஸ் விளையாட முடிகிறது. வம்புச் சண்டைக்கு வரும் பையன்களைச் சமாளிப்பதும் ரொம்ப சுலபம்! கையைக்காலை ஆட்டி அடித்து உதைக்கவே வேண்டாம். தொபுக்கட்டீர் என்று மேலே விழுந்து அப்படியே படுத்துக்கொண்டுவிட்டால் போதும்! ஐயோ, அம்மா என்று அலறி, தம் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடுவார்கள்!

இப்படியான காரணங்கள் மட்டுமில்லை. இயல்பிலேயே அவனுக்கு நொறுக்குத்தீனி என்றால் ரொம்பப் பிடிக்கும். கட்டுப்படுத்தமுடியாத ஒரே பெரிய கெட்ட பழக்கம் அது. வறுத்த வேர்க்கடலை, பொறித்த அப்பளம், சமோசா, ப௬ப், பஜ்ஜி, வடை, பூரி கிழங்கு என்று எதெல்லாம் நாக்குக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம் ஏனோ உடம்புக்குப் பிடிப்பதில்லை. நாக்குக்கும் உடம்புக்கும் அப்படியென்ன ஜென்மப்பகையோ? ஐ டோண்ட் கேர்! என் ஓட்டு நாக்குக்குத்தான் என்று தெளிவாக இருந்தான் பாலு.

"நல்லா படிக்கறே. கெட்டிக்காரனா இருக்கே. கொஞ்சம் தீனியைக் குறைச்சுக்கோடா பாலு" என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மகாலிங்க வாத்தியாரும் அதையேதான் எப்போதும் சொல்லுவார். "பாலு, இன்னிக்கு மத்தியானம் மட்டும் நீ உண்ணாவிரதம் இரேன்!"

"ஓயெஸ். இருக்கேன் சார். அதுக்கு முன்னாடி கொஞ்சம் சாப்டுட்டு வந்துடறேனே. கொஞ்சம் தெம்பா இருக்கலாமே!" என்பான் அதே நகைச்சுவையுடன்.

"குண்டா! குண்டா! புள்ளையாரே!" வாத்தியார் செல்லமாக அவன் தொப்பையில் குத்துவார்.

அத்தனை தூரம் அவனைப்பற்றி நன்கு அறிந்த வாத்தியார்தான் இன்றைக்கு இப்படி இரக்கமே இல்லாமல் ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கரண்டி பொங்கல் என்று சொல்லுகிறார்! அடுக்குமா இது! பாவம், அவன் வயிறு என்ன பாடுபடும்?

"புள்ளையாரே! நாம ஸ்டீம் போட்டுல போகப்போறோம். அந்தத் தீவுல ஆசுபத்திரியெல்லாம் ஒண்ணும் கிடையாது. உடம்புக்கு ஒண்ணுன்னா ரொம்பக் கஷ்டமாயிடும். லிமிட்டா சாப்பிடறதுதான் நல்லது. தவிர, கடல் பயணத்தின்போது நிறைய சாப்பிடறதும் நல்லதில்லை" என்று மகாலிங்க வாத்தியார் சொன்னார்.

கடல் பயணம்!

அந்த ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் பாலு அந்தக் கொடுமையைச் சகித்துக்கொண்டான். எத்தனை நாள் கனவு அது! கடலுக்குப் பக்கத்திலேயே இத்தனை வருஷமாக வாழ்ந்து வந்தாலும் படகு ஏறிப் போகிற கனவு மட்டும் நனவாகாமலேயே இருந்தது. பல பையன்கள் லாகவமாக நீச்சல் அடிப்பார்கள். பொங்கி எழுந்து வரும் அலையின்மீது தாவிக்குதித்து ஒரு மீன் மாதிரி துள்ளி எழுவார்கள். பாலுவுக்குப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். குண்டாக இருப்பதில் இதுதான் மிகப்பெரிய பிரச்னை! யாரும் அவனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுக்கக் கூட முன்வரமாட்டேன் என்கிறார்கள்.

"ஐயய்யோ. உன்னைத்தூக்கித் தண்ணில போட்டா, மூழ்கிடுவியேடா குண்டா" என்று ஒதுங்கிவிடுகிறார்கள்.

"ப்ளீஸ் சார். எனக்கு நீச்சல் சொல்லிக்குடுங்க சார்" என்று அவன் பலமுறை மகாலிங்க வாத்தியாரிடம் கேட்டிருக்கிறான். "நீ ஒரு அஞ்சு கிலோ எடை குறைச்சுக்காட்டு. அப்புறம் சொல்லித்தரேன். நீச்சல்ங்கறது உடம்பை ட்ரிம்மாவும் ஆரோக்கியத்தை சீராவும் வெச்சிருக்க உதவுற ஒரு கலை. நீ நீச்சல் கத்துக்கிட்டு வீட்டுக்குப் போய் இருபது இட்லியும் நாப்பது வடையும் அமுக்கினேன்னா என்ன பிரயோஜனம்?" என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார் வாத்தியார்.

எத்தனையோ பையன்கள் மிகச்சிறிய வயதிலேயே நீச்சலில் சூரர்களாக இருப்பதை பாலு பார்த்திருக்கிறான். ஆனால் ஆறாங்கிளாஸ் வந்தபிறகும் தன்னால் நீச்சல் அடிக்க முடியாமல் இருக்கிறதே என்று வெட்கமாக இருந்தது அவனுக்கு. சரி, நீச்சல்தான் முடியவில்லை; படகிலாவது ஏறிப் போகலாம் என்றாலும் மீனவர்கள் சுத்தமாக மறுத்துவிடுவார்கள். "படகுல போறதுக்கும் கொஞ்சம் நீச்சல் தெரிஞ்சிருக்கறது அவசியம் தம்பி" என்று சொல்லிவிட்டார்கள்.

இதென்ன அக்கிரமம்? வேண்டுமென்றே தன்னை ஒதுக்குகிறார்கள் என்று அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

ஆனால் பள்ளியில் சாரணர் வகுப்பில் இருக்கிற மாணவர்களை கடற்படை அதிகாரிகள் துணையுடன் பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் இருக்கிற பன்றித்தீவுக்கு அழைத்துப் போகிறார்கள் என்கிற நல்ல சேதி வந்ததுமே பாலு பரவசமாகிவிட்டான். அவந்தான், அந்தப் பள்ளிக்கூடத்தில் சாரணர் படை லீடர். கொஞ்சமாவது உடம்பைக் குறைக்கவேண்டும் என்று உத்தரவாதம் வாங்கிக்கொண்டுதான் மகாலிங்க வாத்தியார் அவனை லீடர் ஆக்கியிருந்தார். உடம்பு குறையாவிட்டாலும் லீடர் பதவி அப்படியேதான் இருந்தது என்பதால் அவனும் ஸ்டீம் போட் ஏறி பன்றித்தீவுக்குப் போவது ஒருவழியாக உறுதியாகிவிட்டது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors