தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 10]
- ஜெயந்தி சங்கர்

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் மாமனார் மாமியாரோடு உட்கார்ந்திருந்தேன். குறுக்கும் நெடுக்கும் தாதியர்களும் மருத்துவர்களும் மட்டுமின்றி நோயாளிகளைப் பார்க்க வந்தவர்களும் நடந்துகொண்டிருந்தார்கள். ஆபரேஷன் தியேட்டரிலிருந்து டாக்டர்கள் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர்கள் வெளியே வந்து இனிமேல்தான் அவரைப்பற்றியும் அவரது உடல் நிலையைப் பற்றியும் செய்தி சொல்லவேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்குப் போகப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பிலிருந்தவர் மயக்கமாகிக் கீழே விழுந்ததுமே எங்கள் மூவருக்கும் ஒரு சில நொடிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. மாமனார் உடனே ஆம்புலன்ஸ¤க்குப் போன் செய்தார். ஆம்புலன்ஸ் வரும்வரை என்ன செய்வதென்று தெரியாமல் தவியாய்த்தவித்து விட்டோம்.  மாமியார் அவர் தலைப்பக்கம் உட்கார்ந்துகொண்டு அவருடைய தலையைத்தன் மடியில் மெதுவாக எடுத்து வைத்துக்கொண்டார். மாமனார் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தார். அதற்குமேல் ஒன்றுமே செய்யத்தெரியவில்லை எங்களுக்கு. மாமியார் அழுகையும் புலம்பலுமாக அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். காதுக்கருகில் குனிந்து, "வெங்கட், வெங்கட்", அவரது பெயரைக்கூப்பிட்டுப் பார்த்தார். ஆனால் அவர் ஒருவித அசைவுமின்றி மரக்கட்டைபோலக் கிடந்தார்.

பயத்திலா இல்லை, சில நாட்களாகவே ஏற்பட்டுக்கொண்டிருந்த வயிற்றுப்பிரட்டலா என்று புரியவில்லை. நாள்' தள்ளிப் போயிருப்பதை அவரிடம் ஆஸ்திரேலியாவில் வைத்துச்சொல்லத் திட்டமிட்டிருந்தேன். நாள் தள்ளியிருப்பதையும் வாந்தி, வயிற்றுப் பிரட்டலையும் வைத்து நானாகத் தீர்மானிப்பதும் சரியில்லையோ என்ற சந்தேகமும் இருந்ததால், அதற்கு முன்பு மருத்துவரிடம் காட்டி உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. அடுப்படிக்குள் போய் எலும்பிச்சம்பழத்தை எடுத்து முகர்ந்து பார்த்தேன். கொஞ்சம் அடங்கியது. உப்பு நார்த்தங்காயைக் கிள்ளி ஒரு சின்னத்துண்டு வாயில் போட்டுக் கொண்டேன். நல்ல பலன் கிடைத்தது. மெதுவாக ஹாலுக்கு வந்தேன்.

மாமியார் இன்னமும் கொடகொடவென்று கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்தார். பயணம் பற்றிய எண்ணமே அப்போது யாருக்கும் ஏற்படவில்லை. ஹாலின் மூலையில் வைக்கப்பட்டிருந்த  பெட்டிகள் திடீரென்று மதிப்பிழந்திருந்தன.

உள்ளூர மிகவும் பதட்டமாக இருந்தது எனக்கு. வருத்தம் இருந்தது. ஆனால், அழுகை வரவில்லை. ஏற்கனவே குணமான விவரங்களை என்னிடம் சொல்லியிருந்தார். மற்றபடி மீண்டும் வருமோ என்ற கவலையெல்லாம் மணமாவதற்கு முன்னால். திருமணத்திற்குப்பின்னால் அந்தமாதிரி அவர் யோசித்ததேயில்லை. யோசித்திருந்தாலும் என்னிடம் சொன்னதில்லை. முற்றிலும் மறந்திருந்தார் என்றே நினைத்தேன். அவர் மறந்திருந்தார் என்றால், வரவேண்டிய கட்டி வராமலேவா இருக்கும்? அவர் மயக்கம்போட்டு விழுவார் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. இது வேறு ஏதோ காரணமாய் மயக்கம் என்று அவ்வபோது தோன்றியபடி இருந்தது. வேறு காரணம் எதுவாக இருக்கும்?

கிளம்பிப்போன இடத்தில் அப்படியாகியிருந்தால் நான் தனியாக மாட்டிக்கொண்டு முழித்திருப்பேன். நல்லவேளை, கிளம்புமுன் ஆனதே என்றெல்லாம் அபத்தமாக, என்ன அசட்டுத்தனமான கனவு என்று எண்ணிக்கொண்டே கனவுகாண்பதைப்போலத் அப்போது தோன்றியது எனக்கு. எங்கே என்பதா முக்கியம்? அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்றல்லவா யோசிக்கவேண்டும் என்று தோன்றியதும் சிந்தனையின் கிறுக்குத்தனத்தை எண்ணி உள்ளூர வெட்கம் வந்தது.

ஆம்புலன்ஸில் அவரை ஏற்றிக்கொண்டு போனதுமே, நாங்கள் காரில் சிங்கப்பூர் ஜெனரல் ஹாஸ்பிடலுக்குப் போனோம். போய் அரை மணிநேரத்தில், சோதித்துப் பார்த்த டாக்டர், மீண்டும் கட்டி வந்திருக்கும் விவரத்தைச் சொன்னார். அடுத்த நாளே ஆபரேஷன் என்று சொல்லிவிட்டார்கள். அங்கிருந்த லௌஞ்சில் உட்கார்ந்திருந்தோம்.

மாமியார்  கட்டுப்படுத்தாமல் அழுதார். என் சொந்தக் கவலையிலும் எனக்கு அவரைப்பார்க்க மிகவும் பாவமாய் இருந்தது. "அம்மா, தைரியமா இருங்கோ. அவருக்கு ஒண்ணும் ஆகாது. ஆபரேஷன் முடிஞ்சதும் நல்லபடியா ஆத்துக்குக் கூட்டிண்டு போயிடலாம். அழாதீங்கோ. எதாவது சூடாக் குடிக்கறேளா? வாங்கிண்டு வரேன்", என்று கேட்டுக்கொண்டே தோளைத் தொட்ட என் கையை உதறிவிட்டார். எனக்கு என்னவோ போலாகிவிட்டது. சரி, பாவம் கவலையில் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

என்ன இருந்தாலும் பெற்ற பிள்ளையில்லையா, அதுவும் ஒரே பிள்ளை, வருத்தமும் கவலையும் அதிகாமாகத்தானே இருக்கும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன்.

"பெரிசா சமாதானம் பண்ண வந்துட்டா. எம்பிள்ளைக்கி குணமாகியிருந்தது. மறுபடி இப்ப வந்துடுத்து. எல்லாம் இவ வந்த வேளைதான், வேற என்ன?", என்று மாமியார் சொன்னார். எனக்குச் சுருக்கென்று தைத்தது. அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை.

என்ன இது, இவர் புரிந்துதான் பேசுகிறாரா ? இல்லை, கவலையில் உளறுகிறார். அது நாள் வரை நான் பார்த்திருந்த மாமியார் வேறு மாதிரியானவர். சாதாரணமானவர். அதிக அன்பும் கிடையாது என்னிடம். அதற்காக கடும்சொல் ஒன்றையும் சொன்னதில்லை ஒரு முறைகூட.

"பத்மா, உஷ்," என்று மாமனார் சொன்னாரேயொழிய அவ்வார்த்தைகளை மறுக்கவில்லை. மறுத்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.
அமோதிப்பதைப்போலத் தான் கடுகடுவென்று இருந்தார் அவரும்.

கடைசிவரை கல்யாணம் வேண்டாம் வேண்டாமென்று பாவம் அவரும் இவர்களோடு போராடிவிட்டிருந்தார். 'மீண்டும் வந்துவிட்டால், மீண்டும் வந்துவிட்டால்', என்று நிறைய சொல்லிப்பார்த்திருந்தார். ஆனால், கொஞ்சம்கூட கேட்காமல் கல்யாண ஏற்பாடுகள் செய்துவிட்டு, இப்போது இப்படிப்பேசுகிறார்களே. இவர்களுக்குச் சாதகமாக என்னுடைய அப்பாவும் அம்மாவும் முட்டாள் தனமாக நடந்துகொண்டதையும் நினைத்துக்கொண்டேன். எத்தனை நேரமாகும் எனக்கு இவர்களைக் கேட்க? ஆனாலும், அதெல்லாவற்றையும் விட அவர் நல்லபடியாகப் பிழைத்து வீடு திரும்பவேண்டும் என்று மட்டுமே என்னால் அப்போது நினைக்க முடிந்தது.

அபரேஷன் முடிந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அவரைக் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். நாற்பதுமணிநேரம் போனால்தான் ஏதும் சொல்லமுடியும் என்றார்கள். காத்திருந்தோம். நடுவில் அங்கிருந்த கேண்டினில் போய் சூடாக இரண்டு 'மைலோ' வாங்கி வந்து இருவருக்கும் கொடுத்தேன். நானும் ஒன்றை வாங்கி குடித்தேன்.

நடு ராத்திரிக்குமேல் சுமார் மணி இரண்டேகால் இருக்கும்போது எங்களிடம் வந்து கூப்பிட்டார் சீனநர்ஸ். உட்கார்ந்துகொண்டே என்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தவள் திடுக்கென்று கூப்பிட்டதும் விழித்துக்கொண்டேன். அவருக்கு லேசாக நினைவு திரும்பியிருந்ததாகச் சொன்னாள். மாமியாரும் மாமனாரும் அவருக்கு நினைவு திரும்பிவிட்டது என்ற செய்தியிலேயே சட்டென்று ஆறுதலடைந்தாற்போலிருந்தது. திரும்பத் திரும்ப,"உமா, உமா", என்று முனகுவதாகவும் உமா மட்டும் கொஞ்சநேரத்துக்கு உள்ளே போய்ப் பார்க்கலாம் என்றும் சொன்னதும் நான் எழுந்து அவள் பின்னால் போனேன்.

தலை முழுவதும் முகத்தில் முக்கால்வாசியும் கட்டுப்போட்டிருந்தார்கள். வாயும் மூக்கும் பிராணவாயுக் குழாயின் நுனியால் மூடப்பட்டிருந்தன. பார்வை என் முகத்தில். நான் காதுக்கருகில் போய் மிக மெதுவாக, "தைரியமா இருங்கோ. எல்லாம் சரியாப் போயிடும். சீக்கிரமே ஆத்துக்குப் போயிடலாம்", என்று சொன்னேன்.

அவரது உதடுகள் இருமுறை,"உமா, ஐ'ம் சாரி", என்று சொன்னது எனக்குப் புரிந்தது. அப்படியே என் முகத்தில் நிலைத்திருந்தது அவரது பார்வை. வேறு என்ன பேச நினைத்திருப்பார்? வயிற்றுக்குள் முதல் முறையாக ஜிலீரென்ற ஏதோ ஒரு விநோத உணர்வு. அது தந்த பதட்டத்தில், "நாள் தள்ளியிருக்கு", என்று நான் சொல்ல நினைத்திருந்ததைச் சொல்லவில்லை.

அதற்குள் நர்ஸ் என்னை வெளியேற்றிவிட்டு டாக்டரைக் கூப்பிட ஓடினாள். கண்ணாடிக்கதவு வழியாக அவரது பார்வை என்னோடு பயணித்ததா என்று பார்த்தேன். ஹ¥ஹ¤ம், இல்லை, திறந்திருந்த கண்களில் கருவிழிகள் உறைந்திருந்தன, அசைவில்லாமல்.

எல்லாம் முடிந்துவிட்டது. இந்தியாவிலிருந்து யாரும் வரவில்லை. போனிலேயே அம்மா அப்பாவின் அழுகையைக் கேட்டு, உடன் அழுது ஓய்ந்தேன். இருவருக்கும் பாஸ்போர்ட்டே எடுத்திருக்கவில்லை. இக்கட்டு வரக்கூடுமென்று யார்தான் நினைத்திருக்கக்கூடும். அப்பாதான் அவர் எழுதிய மொட்டக்கடிதத்தையே நம்பவில்லையே. திருமணமான பிறகு விவரங்கள் சொல்லியிருந்தும்கூட தன் மாப்பிள்ளைக்கு மீண்டும் உடம்புக்கு வருமென்று எதிர்பார்த்திருப்பாரா என்ன. தன் அண்ணா வந்து சொல்லியிருந்தால் நினைத்திருப்பாரோ என்னவோ.

சௌம்யாவும் ரகுவும் சேர்ந்து வந்திருந்தார்கள் ஒருநாளைக்கு. ரகுவின் முகம் இறுகிக்கிடந்தது. சௌம்யா என்னைப் பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள். நல்லவேளை மருந்தின் மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்தார் மாமியார். பிள்ளைபோன துக்கத்தில் மிகவும் ஒடுங்கிப்போய் விட்டார். அவருக்குப் பணிவிடை செய்ததிலேயே என் கவனம் திரும்பியதில் என் கவலையும், சோகமும், இழப்பும் மெதுவாகத் தேய்ந்தன.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகுதான் நான் மாமியாரிடம் நாள் தள்ளிப்போயிருந்ததைப் பற்றி சொன்னேன். "கேட்டேளா, ஏன்னா, இவளுக்கு நா தள்ளிப்போயிருக்கு. டாக்டர்கிட்ட கூட்டிண்டுபோணும். நாம ஆசப் பட்டாப்போலவே ஒரு வாரிசப் பெத்துக் குடுத்துட்டுத் தான் போயிருக்கான், எம்பிள்ளை", என்று கண்ணீர் விட்டுக்கொண்டே சொல்லிவிட்டு, கொஞ்ச நேரத்திலேயே உற்சாகமானார்.

எனக்கு அவரது உற்சாகம் எரிச்சலைத் தான் கொடுத்தது. நான் வந்தவேளைதான் பிள்ளைக்கு உடம்புக்கு மீண்டும் வந்துவிட்டது என்றவர், அதே வாயால் பிறக்கப்போகும் என் குழந்தையை மட்டும் கொண்டாடுகிறாரே. என்ன ஒரு விநோதமான சுயநலம் ? ! அத்தனை துக்கத்திலும்கூட அவர்களின் குறிக்கோளில் அவர்கள் மட்டும் உறுதியாக இருந்தது புசுபுசுவென்று கோபத்தைத்தான் என்னுள் கொணர்ந்தது.

டாக்டர் கர்பத்தை உறுதிப்படுத்தினார்.

அடுத்தமாதமே நானும் மாமியாரும் இந்தியா திரும்பினோம். அம்மாவும் அப்பாவும் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். என் நெற்றியைப் பார்த்துவிட்டு இரண்டுபேரும் குலுங்கிக்குலுங்கி அழுதார்கள். இத்தனைக்கும் நான் கருஞ்சிவப்பில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொடிருந்தேன். வகிட்டில் முன்பிருந்த குங்குமம் இல்லை. அவ்வளவுதான்.

அப்போதுகூட அப்பா தன் தவறை உணர்ந்தாகத் தெரியவில்லை. தன் பெண்ணிற்காக என் மாமியாரிடம் நறுக்கென்று இரண்டு வார்த்தை கேட்கவில்லை. எங்கள் வீட்டிற்குப் போகாமல் நேராகவே காரில் கும்பகோணம் போனதுதான் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வருத்தம். அது மாமியாரின் யோசனை. வயிற்றில் இருந்த குழந்தைக்காக நான் மாமியாரால் சீராட்டப்பட்டேன். அதே விஷயத்தைக் கேட்டதும் தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்கூட என்னைக் கூட்டிக்கொண்டு போய் இரண்டு நாட்களாவது வைத்துக்கொள்ள ஆசை.

அவுன்ஸ் மாமா கும்பகோணம் வந்திருந்தார் அடுத்த வாரமே. என்னைப்பார்த்ததுமே பேசமுடியாமல் துண்டை வாயில் வைத்துக்கொண்டு குனிந்து அழுதார். அவரைப்பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

கோவிலுக்குக் கூட ஒரு வருடம் முடியும் வரை போகக்கூடாது என்று சொல்லிவிட்டதால், நேரம் அதிகமிருந்தது. வெளியிலும் போகாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்ததால், ஒருநாள் நான் என் வீணையை எடுத்து பழைய கம்பிகளை மாற்றி ஸ்ருதிசேர்த்து வாசித்தேன். வீட்டு வேலைகள் செய்தநேரம் போக மீதி நேரத்தில் தொடர்ந்து தினமும் வாசித்தேன்.

வேலைக்குப் போகலாம் என்றால், மாமியார் என்ன சொல்வாரோ என்று கேட்கவும் பயமாக இருந்தது. அந்த ஊரில் என்ன வேலை கிடைக்கும் என்றும் தெரியவில்லை. மாதம் ஏற ஏற உடலில் ஏதேதோ விநோத மாற்றங்கள்.

ஆறாம் மாதம் கும்பகோணத்தில் டாக்டர் ஸ்கான் செய்தபோது, நான் மிகவும் ஆசையாக் கேட்டதால் சொன்னார் என்னிடம், பெண்குழந்தை என்று. மாமியாரிடம் மிகவும் மகிழ்ச்சியோடு வந்து சொன்னேன்.

மாமியார் முகம் கருத்துவிட்டது. குழந்தை என்றதுமே 'பேரன்' என்று முடிவுசெய்து விட்டிருந்தாராம். கேட்கக்கேட்க எனக்குச் சிரிப்புதான் வந்தது.

அவர்களுக்கு வேண்டிய பேரனை நான் பெறப்போவதில்லை என்றதுமே நான் வேண்டாதவாளாகிப்போனேன். வீட்டில் மாமியார் என்னிடம் முகம் கொடுத்துப்பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்தார். எப்படித்தான் ஒருவரால் சட்சட்டென்று தன்னை மாற்றிக் கொள்ளமுடிகிறதோ ? ! என்னைப் பார்க்கக் கூட அவருக்குப் பிடிக்காது போனது என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நானும் அறைக்குள் ஒடுங்கிக் கொள்ளப் பழகிக்கொண்டேன்.

மாமனார் சிங்கப்பூரில் வீட்டை விற்று விட்டு எல்லா விஷயங்களையும் சப்ஜாடாக முடித்துக்கொண்டு வந்துசேர்ந்தார். அடுத்த இரண்டு நாட்களிலேயே என்னைக்கூட்டிக்கொண்டு சென்னைக் கிளம்பினார்கள். பிரசவத்திற்குத் தான் அங்கே கொண்டு விடுகிறார்கள் என்று நானும் உடன் கிளம்பினேன்.

அம்மா என்னைப்பார்த்ததும் வெளிப்படையாகவே மகிழ்ந்தாள். என் உப்பிய வயிற்றைப் பார்த்ததும் அவளின் பெற்ற வயிறு குளிர்ந்ததோ என்னவோ. ஆனால், எனக்கு அம்மா அப்பா பேரில் இருந்த கோபம் வருத்தம் குறைந்திருந்ததே தவிர மறைந்திருக்கவில்லை. நான் பேசாமல் ஓய்வெடுக்கவென்று அறைக்குள் போய்ப் படுத்துக்கொண்டேன்.

ஹாலில் எல்லோரும் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது. "எங்களுக்கு ஒரு பேரனப் பெத்துக்கொடுப்பான்னு பார்த்தா பொண்ணப் பெத்துக்கப்போறாளாம். ஸ்கான்ல சொல்லிட்டா", என்று அது ஏதோ என் குற்றம் என்பதுபோல மாமியார் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் ஒன்றும் சொல்லாமல் இருந்தார்கள். என்னதான் சொல்லவும் முடியும்.

"உடனே கெளம்பிட்டேளே, இருந்து சாப்டுட்டுக் கெளம்பலாமே", என்று ஒன்றும் சாப்பிடாமல் கிளம்பவிருந்தவர்களை அப்பா உபசாரமாக ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

பிடிவாதமாகக் கிளம்பியவர்களிடம்,"பிரசவம் ஆனதும் தகவல் சொல்றோம்", என்றார். "ம்,, ம், எப்படியும் இங்கதானே இருக்கப்போறா. அவளோட கட்டில், பீரோ, வீணை, பாத்ரம் பண்டம் எல்லாத்தையும் அனுப்பி வைக்கிறோம்", என்று மாமியார் வெடுக்கென்று சொன்னதுமே, அம்மா," அங்கேயே இருக்கட்டுமே மாமி, எப்படியும் அவ மூணாம் மாசம் அங்க வந்துடப்போறா. அப்போ யூஸ் பண்ணிப்போ இல்லையா. இங்கயும் வைக்க எடமில்ல, பாத்தேளா", என்று சொன்னாள்.

"ஓ, நீங்க புரிஞ்சுக்கல்லயா, இனிமே அவ இங்கயே இருக்கட்டும்."

"இப்ப என்ன ஆச்சுன்னு,..", என்று அப்பா இழுத்தார்.

"எம்பிள்ளைக்கி குணமாயிருந்தது, இவ வந்த வேளதான் அவனுக்கு மறுபடியும்,..", அடக்கமுடியாமல் பிள்ளையை நினைத்து அழுதார்.
"இப்ப என்னடான்னா எங்களுக்கு ஒரு வாரிசா பேரனப் பெத்துக்குடுப்பாளான்னா,. அதுவும் இல்ல."

ஒரு தடவை கூட என்னைப்பற்றியும் என் சோகம் பற்றியும், என் இழப்பு பற்றியும், ஏன் என் எதிர்காலம் பற்றியும்கூட இவர்கள் யோசிக்கவேயில்லை. தன்னைச் சுற்றிமட்டுமே யோசிக்கிறார்களே.

"மாமி, அபாண்டமாப் பேசாதீங்கோ. மாப்ளைக்கே உள்ளூர மறுபடியும் வந்துடுமோன்னு பயம் இருந்திருக்கு. அவரும் உங்ககிட்ட கல்யாணம் வேண்டாம்னு எவ்வளவோ  சொல்லியும், மொட்டக் கடுதாசி எழுதிப்பார்த்தும், அப்போ அத நாங்க நம்பல்ல,.. நீங்க எதப்பத்தியும் எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம,.. சரி இனிமே அதையெல்லாம் பேசி என்ன? அதயும் விடுங்கோ. ஆனா, இழப்பு எங்க பொண்ணுக்குத் தான் ஜாஸ்தி. அதப்பத்திக் கொஞ்சமானும் கவல இருக்கா உங்களுக்கு. இப்ப சமயத்துக்குத் தகுந்தாப்ல ஒங்களுக்குப் பிடிச்சாப்ல, ஒங்களுக்கு சாதகமாவும் மாத்திமாத்திப் பேசறேளே. ஒரு நியாய அநியாயம் கெடையாதா? பேரனா இருந்தா வேணும். பிறந்தப்புறம் கூட பேரன் வேணும், ஆனா, இவ வேண்டாம். அப்டிதானே", என்று அம்மா சொன்னது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

ஒன்றும் பேசமுடியாமல் வாயை மூடிக்கொண்டு கும்பகோணத்துக்கே போய்ச் சேர்ந்தார்கள் இருவரும். மாதம் ஏறஏற வயிற்று பாரம் ஏறியது. அம்மாவையும் அப்பாவையும் நேரில் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்தபடியேயிருந்தேன். இருவரும் வீட்டில் இருப்பதையே உணராதவள் போலத் தான் வளைய வந்தேன்.

ஷீலா குமாரோடு ஒரு முறை என்னைப்பார்க்க வந்திருந்தாள். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். என்ன நினைத்தானோ, திடீரென்று குமார், "உமா நீ கருவ வளர விட்டிருக்கக்கூடாது. பேசாம கலச்சிருக்கலாம். நானா இருந்தா அப்டிதான் செஞ்சிருப்பேன். உனக்கு நடந்தது ஒரு கல்யாணமா?", என்று சொல்ல ஆரம்பிப்பான் என்று எதிர்பார்க்கவேயில்லை. ஷீலா டக்கென்று சுதாரித்துக்கொண்டு, "உமா அப்பறம் பார்க்கலாம்", என்று அவனையும் இழுத்துக்கொண்டு கிளம்பிச்சென்றாள். என்னைப்பற்றியும் என் எதிர்காலத்தைப் பற்றியும் அவனில் இருந்த அக்கறை தான் அவனை அப்படிப்பேச வைத்திருந்தது.

இரவில் திடீரென்று முழிப்புதட்டும்போது கட்டிலருகே என்னையே வெறித்துப்பார்த்துக்கொண்டு அம்மா உட்கார்ந்திருப்பாள். சிலவேளைகளில் கண்ணீர் விட்டபடியும் கூட உட்கார்ந்திருந்தாள். நான் முழித்துவிட்டதைப் பார்த்தால், சட்டென்று எழுந்து தன் அறைக்குப் போய் விடுவாள். பிரசவநேரம் நெருங்க நெருங்க அம்மா தூங்காமலே இரவுகளைக் கழித்தாளோ என்று சந்தேகமாக இருந்தது. அப்பா தன் பங்கிற்கு பழங்கள் வாங்கி வந்தார். என்னைச் சாப்பிடச்சொல்லி இருவரும் சொன்னார்கள். நான் பசி அதிகமாகும்போது சமையலறைக்குள் போய் நானே எடுத்துப்போட்டுச் சாப்பிட்டேன்.

அன்று இரவு, திடீரென்று வலி பின்னிடுப்பில் வெட்டியது. என்னை மறந்து தூக்கத்திலேயே அம்மா என்று அலறிவிட்டேன். அறை வாசலில் படுத்திருந்த அம்மா பாய்ந்தோடி வந்தாள். அப்பா, கால் டாக்ஸிக்குப் போன் செய்தார். வலிதாங்க முடியாமல் துடித்தேன். அரை மணிநேரத்தில், மலர் மருத்துவமனைக்குப் போய்ச் சேரும்போது வியர்த்துக் களத்துத் துவண்டிருந்தேன். அம்மாவும் நான் படும் அவஸ்த்தையைக் கண்டு பதட்டமடைந்திருந்தாள்.

விடியற்காலையில் சுகப்பிரசவம் ஆனது. ரோஜாப்பூவாக இருந்த குழந்தையை என்னிடம் அம்மா காட்டியபோது, அரை மயக்கத்திலும் ரொம்பகாலத்திற்குப் பிறகு அம்மாவின் முகத்திலும், பின்னால் நின்றிருந்த அப்பாவின் முகத்திலும் சந்தோஷக்கீற்றைப் பார்த்தேன்.  வளைகாப்பு சீமந்தம் போன்ற எந்தவிதக் வைபவங்களும் இல்லாமல், பிறந்திருந்தாள் என் மகள் நிவேதிதா.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors