தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை [பாகம் : 11]
- ஆருரான்

1977.06.21 இல் சிறீலங்கா அரசால் தேசியப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைக் கோரினர். ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னரே தமிழத் தலைவர்களான தந்தை செல்வா, ஜி. ஜி. பொன்னம்பலம், திரு. மு. திருச்செல்வம் ஆகியோர் இறந்துவிட்டனர். அதனால் அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றார். இருப்பினும், வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தித் தமிழீழக் குடியரசை அமைக்க தமிழ் மக்கள் தமது முழு ஆதரவையும் த.வி கூட்டணியினருக்கு அளித்தனர்.

ஆனால் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழீழத் தனியரசை அமைப்பதற்குப் பதிலாக சிறீலங்கா தேசியப் பேரவைக்குச் சென்று எதிர்க்கட்சிப் பதவியில் உட்கார்ந்துகொண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தன அளித்த பிரதேச அமைப்பையும் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அளித்த ஆணையைப் புலிகள் ஏற்று தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய வண்ணம் உள்ளனர்.

புதிய தமிழ்ப் புலிகள் என்று 1972 இல் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1976.05.05 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர்மாற்றப்பட்டு வே. பிரபாகரன் தலைமையில் சிங்கள அரசினது ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ் மண்ணில் புலிகள் போரிட்டு வருகின்றனர்.

1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறையில் 3,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, இலட்சக்கணக்கானோர் அகதிளாக்கப்பட்டு, பல கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து, தமிழ் ஆண்களும் பெண்களும் பலாத்காரப்படுத்தப்பட்டு, கொழும்பில் 'இங்கு தமிழ் இறைச்சி விற்கப்படும்" என்று தமிழரைக் கொன்று மாமிசமாக விற்குமளவிற்கு சிங்களவர்களின் மிருகத்தனம் இருந்தது. அந்த இனக்கலவர்த்தில் களுத்துறைச் சிறைச்சாலையில் இருந்த 53 தமிழ் அரசியல் கைதிகளும் படுகொலை செய்யப்பட்டனர்.

புலிகளைப் போன்று பல தமிழீழ விடுதலை இயக்கங்கள் புலிகளின் காலத்தில் தோன்றினாலும், இன்று புலிகள்தான் தமிழீழப் பாதுகாவலராக தமிழ் மக்களால் இனங்கானப்படுகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைமையில் 30 ஆண்டாக தமிழீழ மீட்புப் போர் நிகழ்ந்துகொண்டு வந்துள்ளது.

பிரபாகரன் தலைமையில் புலிகளுடன் சிங்களத் தலைவர்கள் பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர். அவ்வாறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு தமிழர் முதுகில்தான் குத்தியுள்ளார்கள். பிரேமதாசா, சந்திரிக்கா, ரணில், மகிந்த ராஜபக்ச என்று சிங்களத் தலைமைகள் 1977 ஆம் ஆண்டின்பின்னர் தமிழர்களை ஏமாற்றியுள்ளனர்.

திம்பு ஒப்பந்தம், இந்திய-இலங்கை ஒப்பந்தம், அதன்பின்னர் சிங்களத் தலைவர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் என்ற ஒன்றும் தமிழரின் விடிவுக்குப் பதிலளிக்கவில்லை. திம்பு ஒப்பந்தத்தில் புலிகள் மட்டுமல்லாது, தமிழீழ விடுதலை இயக்கம், மக்கள் விடுதலை முன்னனி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஆமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தனித் தமிழீழத்துக்காகக் குரல் கொடுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இடைக்காலத் தன்னாட்சியைத் தமிழர்கள் கோரினார்கள். ஆனால் அதைத் தரவும் சிங்களவர்களுக்கு மனமில்லை. நான்கு ஆண்டுக்கு மேலாக உலகவலம் வந்ததுதான் மிச்சம். சமாதனப் பேச்சுக்களில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை அரசு அமல்படுத்துவதாகத் தெரியவில்லை.

2004 ஆம் ஆண்டு டிசம்பரில் கடற்கோள் வடகிழக்கைத் தாக்கியபோது, ஈழத்தமிழர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். கடற்கோள் நிவாரணத்தை ஈழத்தமிழருக்குப் பகிர்ந்தளிக்கக்கூட சிங்களவர்களுக்கு மனமில்லாமல் இருந்தது.

அதன்காரணமாக கடற்கோள் பொதுக்கட்டமைப்பு என்று வெளிநாட்டு நிவாரணப்பணிகளைத் தமிழரும் சிங்களவரும் ஒன்றிணைந்து செயற்பட ஏற்படுத்த முயன்ற திட்டத்தையும் சிங்கள அரசு உதாசீனம் செய்தது.

மேலும், தமிழர்களைப் படுகொலை செய்து, சம்பூர் போன்ற போர்நிறுத்தம் ஏற்படும்போது தமிழரிடம் இருந்த பகுதிகளை ஆக்கிரமித்தது. தற்போது ஏ-9 நெடுஞ்சாலையை மூடி யாழ்ப்பாணத் தமிழர்களைப் பட்டினிபோட்டு, வாகரையில் தமிழரைப் பட்டினிபோட்டு தமிழரை அடிபணிய வைக்க முயல்கின்றது சிங்கள அரசு.

1910 இல் சட்ட நிரூபணச்சபை அமைக்கப்பட்டபோது, இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் வேண்டாம் என்று ஈழத் தமிழர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த நல்நோக்கத்தால் இன்றுவரை ஈழத்தமிழர்கள் சிங்கள பெ ளத்த இனவாதிகளின் இரும்புப் பிடியில் சிக்குண்டு தவிக்கின்றனர்.

1972.05.22 இல் புதிய அரசியல் யாப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு இலங்கைத்தீவு பூரணமாக பிரித்தானியர் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதன்போது 1833 இல் ஆங்கிலேயரால் சிங்களவர்களுடன் இணைக்கப்பட்ட தமிழீழமும் விடுவிக்கப்பட்டது.

எனவே, தமக்கென்று அரசுடன் ஆங்கிலேயரின் வலுக்கட்டாய இணைப்புக்கு முன்னர் ஈழத்தீவில் வாழ்ந்து வந்த தமிழர்கள், சிங்கள அரசின் கெடுபிடிகளுக்கும் இனத்துவேசத்துக்கும் உள்ளானார்கள். அதற்கு எதிராக அறவழிகளில் போரிட்டு எந்தவிதப் பயனுமின்றி ஆயுதத்தைக் கையில் ஏந்தினார்கள். அந்த ஆயுதபலத்தில்தான் இன்று பலதமிழ் உயிர்கள் தங்கியுள்ளன.

இன்று தமிழீழம் மலரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதுவே ஈழத்தமிழரின் நெடுங்காலக் கனவும் தாகமும் ஆகும். தமிழீழம் உருவாகாமல்போனால் இன்னும் 30 ஆண்டில் தமிழர் என்ற இனமே ஈழத்தில் இல்லாத அளவுக்கு சிங்கள அரசும் சிங்கள இனவாதிகளும் தமிழர்களை எவ்வாறாவது ஒழித்துக்கட்டிவிடுவார்கள்.

சிறீலங்கா அரசின் கொடியில்கூட சிங்களவர்களுக்கு கூடிய இடத்தையும், சிங்கச் சின்னத்தையும் அரச இலையையும் இட்டு, தமிழருக்கும் சிங்களவருக்கும் இரண்டு வண்ணங்களைச் சேர்த்துள்ளது.

நாட்டுக்கொடியில் சமத்துவம் பேணாத சிறீலங்க அரசு. கடற்கோளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தடுத்த சிங்கள அரசு, இனியும் தமிழர்களை மதித்து நடக்கும் என்றும் நாம் நம்புவது பகல்கனவாகும்.

ஒவ்வொரு பொதுத் தேர்தலின் பின்னரும் சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிரான இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து, தீவைத்து, சூறையாடிக் கொண்ட்டாடினர், இதில் மிகவும் பயங்கரமான இனக்கலவரம் 1983 யூலையில் நடந்த இனக்கலவரமாகும், அந்த இனக்கலவரம் தான் தமிழர்களின் பொறுமையை முற்றாகச் சோதித்து சராசரி ஈழத்தமிழர்களுக்கு ஆயுதமேந்திப் போராடித் தமிழீழத்தை அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற உணர்வைத் தோற்றுவித்தது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors